புதிதாக உருமாற்றம் அடைந்து பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் B.1.617 வகையினை இந்தியத் திரிபு (Indian Variant) என்று அழைப்பதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதன்முதலாக கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டு பரவிய போது, அதனை சைனீஸ் வைரஸ் என்று குறிப்பிட்டு முதன்முதலில் இந்த கலாச்சாரத்தினை துவக்கி வைத்தவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கொரோனாவை சைனீஸ் வைரஸ் என்றே அழைக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் பரப்பினர். மேலும் சீனர்களின் அசைவ உணவுப் பழக்கத்தினைக் கேலிக்குள்ளாக்கி, அதனால் தான் கொரோனா வைரஸ் உருவானதாகவும் போலியான தகவல்களைப் பரப்பினர். தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டு இரண்டாம் அலையாக பரவிக் கொண்டிருக்கும் B.1.617 வகையினை இந்தியத் திரிபு (Indian Variant) என்று ஊடகங்களால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதையடுத்து, உலக சுகாதார அமைப்பும் அதே கருத்தினை தெரிவித்துள்ளது.
பாகுபாட்டை அதிகப்படுத்தும் நிலப்பெயர்கள்
இதற்கு முன்னர் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் வகைகள் தென் அமெரிக்க பிறழ்வு (South African Variant B.1.351), UK பிறழ்வு (B.1.1.7) மற்றும் பிரேசில் பிறழ்வு (P.1) என்று குறிப்பிடப்பட்டன. வரலாற்றைத் தேடிப் பார்த்தோமானால் ஸ்பானிஷ் காய்ச்சல் தொடங்கி எபோலா வரை பல்வேறு நோய்களுக்கு, நோய் கண்டறியப்பட்ட நிலப்பகுதியை மையப்படுத்தி பெயர்களை சூட்டினார்கள். இப்பெயர் சூட்டலின் காரணாமாகவே அந்நிலப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பாகுபாடுகளுக்கு உள்ளாவதும் நிகழ்ந்தது.
பெயர் சூட்டுவதிலும் பாரபட்சம்
காங்கோவில் உள்ள எபோலா நதியின் பெயரை மையப்படுத்தி எபோலா காய்ச்சல் என்ற பெயர் சூட்டப்பட்டது. உகாண்டாவில் உள்ள ஜிகா வனப்பகுதியைக் குறிக்கும் வகையில் ஜிகா வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் 2009-ம் ஆண்டு H1N1 வைரசானது அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் முதலில் கண்டறியப்பட்டபோது அதற்கு மட்டும் அமெரிக்க காய்ச்சல் என்று பெயர் சூட்டாமல் பன்றிக் காய்ச்சல் என அழைக்கப்பட்டது. வைரஸ்களுக்கு பெயர் சூட்டுவதில் கூட யார் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதே தீர்மானிக்கிறது என்கிறார் சுகாதார நிபுணர் மருத்துவர் சந்திரகாந்த் லஹாரியா.
உண்மையில் கொரோனா வைரசின் உருமாற்றமானது எந்த நாட்டில் உருவாகிறது என்பது உறுதிப்படுத்த முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டில் அந்த பிறழ்வு கண்டறியப்படுவதால் அப்பகுதியே வைரஸ் உருமாற்றமடைந்த இடமாகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. எனவே இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்ற வகையானது பல நாடுகளில் பரவிய பின்னரும், இன்னும் அதனை இந்திய உருமாற்றத் திரிபு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த அவசியமும் இல்லை.
WHO என்ன சொல்கிறது?
2015-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் பெயரிடல்களுக்கான புதிய வழிமுறைகளை வழங்கியது. அதில் ஒரு நோயிற்கோ, நோய் கிருமிக்கோ பெயரிடும்போது பின்வருவனவற்றை பயன்படுத்தக் கூடாது என குறிப்பிட்டிருக்கிறது.
- மத்திய-கிழக்கு சுவாச நோய் (Middle-East Respiratory Syndrome), ஸ்பானிஷ் காய்ச்சல் போன்று நிலப்பரப்புகளின் பெயர்கள் பயன்படுத்தக் கூடாது என குறிப்பிட்டது.
- மக்களின் பெயரோ, மக்கள் குழுக்களின் பெயரோ பயன்படுத்தப்படக் கூடாது.
- விலங்குகள் அல்லது உணவு வகைகளின் பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது. (உதாரணம் பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், குரங்கு காய்ச்சல்)
- கலாச்சாரப் பெயர்களோ, குறிப்பிட்ட தொழில் சார்ந்த பெயர்களோ அல்லது தொழிற்சாலையின் பெயர்களோ பயன்படுத்தக் கூடாது.
- அச்சத்தை தூண்டும் வகையிலான வார்த்தைகளை பெயரில் பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
நோய்களுக்கு பெயரிடுவதை உலக சுகாதார நிறுவனமும், நோய்க் கிருமிகளான வைரசுக்கு பெயரிடுவதை ’வைரஸ் வகை பிரித்தல் தொடர்பான சர்வதேச குழு’வும் (International Committee on Taxonomy of Viruses (ICTV)) மேற்கொள்கிறது. ஆனால் உருமாற்றம் தொடர்பான திரிபுகளுக்கு பெயரிடுவதற்கு இன்னும் முறையான வழிமுறை கையாளப்படவில்லை. அதனால்தான் பிறழ்வுகளைக் குறிப்பிடுவதில் இப்படிப்பட்ட சிக்கல்கள் இன்னும் நிலவுகின்றன.
வைரஸ் திரிபுகள் குறிப்பிடப்படும் முறை
கொரோனா வைரசைப் பொறுத்தவரை அதன் திரிபுகள் விஞ்ஞான ரீதியாக சில எண்கள், குறியீடுகள் மற்றும் எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக B.1.617, B.1.351 20H/501Y.V2 இப்படி குறிப்பிடப்படுகிறது. இந்த பெயர்கள் விஞ்ஞானிகளின் ஆய்விற்கு உகந்தவையாக இருக்கின்றன. ஆனால் சாதாரண மக்கள் புரிந்து கொண்டு உச்சரிக்கும் வகையில் இப்பெயர்கள் இல்லை. அப்படியானால் இந்த உருமாற்ற திரிபுகளை சாதாரண மக்கள் என்ன பெயர் கொண்டு அழைப்பது என்பதில் தான் சிக்கல் நிலவுகிறது.
புயல்களுக்கு பெயரிடுவதைப் போல் உருவாக்கப்படும் புதிய வழிமுறை
உலக சுகாதார நிறுவனமானது இத்தகைய திரிபுகளுக்கு பெயரிடுவதற்கான வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக மருத்துவர் சந்திரகாந்த் தெரிவிக்கிறார். எளிதாக உச்சரிக்கும் வகையிலும், எளிதாக நினைவு கொள்ளும் வகையிலும், எந்தவொரு நிலப்பரப்பையோ, மக்கள் சமூகத்தையோ குறிக்காத வகையில் பெயர் சூட்டலுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான செளம்யா சுவாமிநாதன், புயல்களுக்கு பெயர்கள் சூட்டப்படுவதைப் போன்று வைரஸ் வகைகளுக்கு பெயர்களை வைத்திடும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட பெயர் சூட்டல் முறையானது நடைமுறைக்கு வரும் வரையில் வைரஸ் திரிபுகளை அதன் அறிவியல் பெயரைக் கொண்டு குறிப்பிடுவதே நலம். மேலும் அதன் பரவலைப் பற்றிக் குறிப்பிடும்போது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டது, சீனாவில் முதலில் கண்டறியப்பட்டது என்று குறிப்பிடலாமே தவிர இந்திய வைரஸ், சீன வைரஸ் என்று குறிப்பிடக் கூடாது.
– நன்றி : The Quint