அரசியல் கட்சிகள் தங்களுக்குத் தேவையான நிதிகளை நன்கொடையாகப் பெறுவது நடைமுறை. வழக்கமாக நன்கொடைகள் தனிநபரிடமோ அல்லது வணிக நிறுவனங்களிடமோ இருந்து பெறப்படும். அப்படி அரசியல் கட்சிகள் நிதியைப் பெறும்போது யார் யார் எவ்வளவு நன்கொடையாகக் கொடுத்தார்கள் என்கிற பட்டியலைத் தயார் செய்து குறிப்பிட்ட நபரின் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயர் அவர்களது முகவரி மற்றும் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் போன்ற அடிப்படை தகவல்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். அந்த விபரங்களை தேர்தல் ஆணையம் வருடாந்திர தணிக்கை அறிக்கையில் வெளியிடும். இதனூடாக பொதுமக்களுக்கு அரசியல் கட்சி பெறும் நிதி குறித்தான தகவல்கள் மற்றும் கட்சிகளின் சொத்துப் பட்டியல் வெளிப்படையாகத் தெரியும். ஆனால் இந்த நடைமுறையை மோடி அரசாங்கம் 2017-ம் ஆண்டு புதிய சட்டத்தினூடாக மாற்றியமைத்தது.
தேர்தல் பத்திரங்கள்
தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதா(2017)-வின் படி, இந்திய அரசு 2 சனவரி 2018 அன்று வெளியிட்ட அரசாணை மூலம் தேர்தல் பத்திரத் திட்டம் (Electoral bond) அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் பத்திரம் என்பது உறுதிமொழி பத்திரம். அது பாரத ஸ்டேட் வங்கியால் விற்கப்படும். ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்தின் 10 நாட்களுக்கு மட்டுமே பாரத ஸ்டேட் வங்கியால் விற்கப்படுகிறது. தேர்தல் நடைபெறும் ஆண்டில் மட்டும் 30 நாட்கள் கூடுதலாக விற்பனைக்கு உள்ளது. இந்த தேர்தல் பத்திரங்கள் ரூபாய் 1000, 10000, 100000 மற்றும் 1 கோடி என நான்கு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
அரசியல் கட்சிக்கு நிதி கொடுக்க விரும்புபவர்கள் நேரடியாக வங்கிக்குச் சென்று பணம் கொடுத்து தேர்தல் பத்திரங்களை வாங்கி தனக்கு விருப்பப்பட்ட அரசியல் கட்சிக்கு நன்கொடையாகக் கொடுக்கலாம். அப்படி கொடுக்கும்போது அந்த தேர்தல் பத்திரத்தில் நன்கொடை கொடுப்பவர்கள் குறித்தான எந்த அடிப்படை தகவல்களையும் அந்த பத்திரத்தில் குறிப்பிட முடியாது. நன்கொடையாகப் பெற்ற பத்திரத்தை அரசியல் கட்சிகள் பாரத ஸ்டேட் வங்கியில் அளித்து பணமாக மற்றிக்கொள்ளாம். இப்படி கட்சிக்கு வந்த நிதிகள் யார் கொடுத்தார்கள் என்கிற தகவல் அரசியல் கட்சிக்கு தெரியாது. எனவே இந்த தகவல்கள் தேர்தல் ஆணையத்திற்கும் சமர்பிக்கப்படாது. எனவே அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்து பொதுமக்களுக்கும் தெரியாது.
தேர்தல் ஜனநாயத்தின் மிக முக்கியமான அமைப்பு தேர்தல் ஆணையம். அந்த தேர்தல் ஆணையத்திற்குக் கூட அரசியல் கட்சிகளின் நன்கொடை குறித்தான தகவல்கள் மறுக்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் ஒரு குடிமகன் தன்னை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு கட்சி யாரிடம் எவ்வளவு நிதி பெற்றுள்ளது என்ற அடிப்படை விடயத்தை அறிவதைத் தடுக்கும் மோசமான ஒரு வடிவம் தான் இந்த தேர்தல் பத்திரங்கள்.
தேர்தல் காலகட்டங்களில் புழங்குகிற கருப்புப் பணம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் என்று சொல்லித்தான் மோடி அரசாங்கம் இந்த திட்டத்தினை கொண்டுவந்தது. ஆனால் இங்கு நடந்தது என்ன?
2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தினுடாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கம் ஒரு அறிக்கை அனுப்பியது. அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் இந்த தேர்தல் பத்திரத்தினூடாக எவ்வளவு நிதி இதுவரை பெற்றுள்ளனர் என்கிற விபரத்தை சமர்பிக்க வேண்டும் என்று கூறியது.
பாஜக பெற்ற 4,215.89 கோடி நன்கொடை
ஏறத்தாழ 105 கட்சிகள் தங்களது நன்கொடை குறித்தான தகவல் பட்டியலை அரசிடம் 2019 மே மாதம் சமர்ப்பித்தது. அந்த பட்டியலில் 2017-18 மற்றும் 2019-20 இந்த காலகட்டத்தில் இந்தியாவின் 17 கட்சிகள் ஏறத்தாழ 6,201 கோடி ரூபாய் தேர்தல் பத்திரத்தினுடாக நன்கொடை வாங்கிய தகவல் வெளியானது. இந்த 6,201 கோடி ரூபாயில் ஏறத்தாழ 67.9% அதாவது 4,215.89 கோடி நன்கொடை பாஜக என்ற ஒற்றை கட்சிக்கு மட்டும் தேர்தல் பத்திரத்தினுடாக வந்த நன்கொடைகள் ஆகும்.
இதற்கு அடுத்த ஆண்டில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பொருளாதார செயல்பாடுகள் முடங்கிக் கிடந்தது. பல்வேறு உயிரிழப்புகளும் பாதுகாப்பற்ற வாழ்வும் சாமானிய மக்களை அச்சுறுத்திய காலகட்டம். அந்த 2020-21 காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள எட்டு பெரிய கட்சிகள் 633.66 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. இதில் எறத்தாழ 75% அதாவது 477 கோடி ரூபாய் ஒரே ஒரு கட்சியான பாஜக பெற்றுள்ளது.
கார்ப்பரேட் நன்கொடைகள்
அரசியல் கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திர நன்கொடை குறித்து லோகேஷ் பத்ரா என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக பல விபரங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விடயம் மிக முக்கியமான ஒன்று. பெரும்பாலான தேர்தல் பத்திர நிதிகள் ஒரு கோடி ரூபாய் பத்திரத்தை பயன்படுத்திதான் பெறப்பட்டுள்ளது. அதாவது வங்கியில் விற்கப்படும் ரூபாய் 1000, 10000, 100000 மற்றும் 1 கோடி ரூபாய் பத்திரங்களில் 93.67% ஒரு கோடி மதிப்பிலான பத்திரங்கள்தான் அதிகமாக விற்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் கட்சிக்கு நிதி கொடுத்தவர்கள் இந்த ஒரு கோடி ரூபாய் பத்திரத்தைத் தான் அதிகமாகக் கொடுத்துள்ளனர். எனவே லோகேஷ் பத்ரா, தேர்தல் பத்திரத்தைப் பயன்படுத்தி அளிக்கப்பட்ட பெரும்பாலான நிதிகள் இந்தியாவின் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால்தான் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார்.
2019-20 நிதியாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசிய கட்சிகளுக்கு ரூ.921.95 கோடி நன்கொடையாக வழங்கியது. அதில் 2025 கார்ப்பரேட் கொடையாளர்கள் ரூ.720.407 கோடியை பாஜக என்ற ஒரு தனிக்கட்சியிடம் கொடுத்துள்ளனர். எனவே தேர்தல் பத்திரத்தைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜக அதிகப்படியான நன்கொடைகளைப் பெற்று வருகிறது.
கார்ப்பரேட் நன்கொடைக்காக தளர்த்தப்பட்ட சட்டங்கள்
இப்படி கார்ப்பரேட்டுகளிடம் இருந்து நிதி திரட்டுவதற்காகவே சட்டத்தில் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. 2018 தேர்தல் பத்திரங்கள் நிதி சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நிறுவன சட்டத்தின் கீழ், எந்த வெளிநாட்டு நிறுவனமும் எந்த அரசியல் கட்சிக்கும் நன்கொடை அளிக்க முடியாது. ஆனால் இப்போது இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ஷெல் நிறுவனங்கள் யாரிடமும் தெரிவிக்காமல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கலாம். இதுபோன்ற சட்ட மாற்றங்களை உருவாக்கி பாஜக தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தி நன்கொடைகளை வாங்கிக் குவிக்கிறது.
பாஜகவின் ₹4,847.78 கோடி சொத்து
Association for Democratic Reforms (ADR) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் குறித்தான பல்வேறு அறிக்கைகளை வெளியிடும். அதில் குறிப்பாக கட்சிகளின் சொத்து பட்டியல் வெளிவரும். அப்படி 2021-ம் ஆண்டு ADR வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் அதிகமாக சொத்து வைத்துள்ள கட்சி பாஜக என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவின் ஏழு தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ₹6,988.57 கோடி. இதில் ஏறத்தாழ 70% அதாவது ₹4,847.78 கோடி பாஜக என்ற ஒற்றை கட்சியின் சொத்து. இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது BSP கட்சியின் சொத்து மதிப்பு. அது 698.33 கோடி ரூபாய். அதற்கு அடுத்தபடியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு 588.16 கோடி.
கடந்த 2018-ம் ஆண்டிற்குப் பிறகு தேர்தல் பத்திரத்தினூடாக பாஜகவிற்கு நன்கொடைகள் குவிந்து வருகிறது. அதில் பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வருகிறது. இந்த நன்கொடையைப் பயன்படுத்தி தனது கட்சிக்கு சொத்துகளை வாங்கிக் குவிக்கிறது. தேர்தல் மற்றும் கட்சிகளுக்கு வரும் கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகக் கூறி தேர்தல் பத்திர முறையை மோடி அரசாங்கம் கொண்டுவந்தது. ஆனால் இதைப் பயன்படுத்தி ரகசியமாக பெயர் தெரிவிக்காத கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பல ஆயிரம் கோடிகளை நிதியாகப் பெற்று தனது கட்சியின் சொத்தை பெருக்கியுள்ளது.
இந்த தேர்தல் பத்திர சட்டம் இந்திய தேர்தல்களை முழு முற்றாக கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு கொடுத்துள்ளது. இது இந்திய தேர்தல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. சாமானிய மக்கள் நம்பிக்கையோடு இருக்கும் தேர்தல் வாக்கு முறையை கேலிப்பொருளாக்கியுள்ளது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்றார்போல் பல சட்ட திட்டங்கள் இங்கு மாற்றப்படுகிறது. கடந்த காலங்களில் கார்ப்பரேட் வரி குறைப்பால் பல லட்சம் கோடி இந்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கார்ப்பரேட் நலன் சார்ந்த செயல்பாடுகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஆபத்தானது.
– சத்தியராஜ் குப்புசாமி