anti hindi protest

42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் : மொழிப் போர் – பகுதி 1

இந்திய துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த காலகட்டத்திலேயே இங்கிருந்து மற்ற மொழி பேசும் மக்களின் மீது இந்தி திணிக்கப்பட்டது.


அத்தகைய காலகட்டத்தில் பல்வேறு மொழிவழி தேசிய இனங்களை ஒற்றை மைய தேசமாக, ஒற்றைவாதத்தில் உருவாக்க காங்கிரசும், பிரிட்டிஷ் அரசில் அதிகாரவர்க்கமாக இருந்த பார்ப்பனர்களும் இந்தியை பொதுமொழியாக திணித்து ஒருங்கிணைக்க முனைந்தனர். இதனை முதன்முதலில் எதிர்த்தது பெரியார் தான். 1926-ம் ஆண்டு இந்தியாவின் ரகசியம் என்று ஒரு கட்டுரையை எழுதினார்.

1937-ல் எழுந்த போராட்டம்

இந்தியை கட்டாயப் பாடமாக வைக்கப் போகிறேன் என்று ராஜாஜி கூறியதும், அதற்கு எதிராக தஞ்சையில் கரந்தை தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தவரும், தஞ்சை மாவட்ட நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவருமான தமிழ்வேள் உமா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் முதல் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.

1937-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் நாவலர் சோமசுந்தர பாரதியார், அறிஞர் அண்ணா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டங்கள் நடைபெற்றது. அதே ஆண்டு அக்டோபரில் மறைமலையடிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. 

இந்தி எதிர்ப்பிற்கு முதல் மாநாடு

1937-ம் ஆண்டு திருச்சியில் சென்னை மாகாண தமிழர் மாநாடு கூட்டப்பட்டது. மாநாட்டை கா.சு.பிள்ளை திறந்துவைக்க உமாமகேஸ்வரன் வரவேற்றார். சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் சிறப்புரையாற்றினார். மாநில அளவில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக நடந்த முதல் மாநாடு இது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு தனி நாடாக தீர்மானம் நிறைவேற்றபட்டது. கிட்டத்தட்ட தனித் தமிழ்நாடு என்ற அரசியலை முன்வைத்து நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் இதுவென்றே சொல்லலாம். இதை திராவிடக் கட்சிகளின் தாய் அமைப்பான நீதிக் கட்சியில் இருந்த தமிழர்கள் செய்தார்கள்.

கைது செய்யப்பட்ட ஈ.வெ.கிருஷ்ணசாமி

இந்தி எதிர்ப்புப் போராட்ட செய்திகளை வெளியிட்டதால் 1938-ம் ஆண்டு விடுதலை ஏட்டின் பதிப்பாளர் ஈ.வெ,கிருஷ்ணசாமியையும், ஆசிரியர் முத்துசாமியையும் கைது செய்து 6 மாதம் சிறைக்காவல் தண்டனை வழங்கியது காங்கிரஸ் அரசு. 1938-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி சென்னையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. ராஜாஜி வீட்டு முன்பாக மறியல் செய்து பலர் கைதானார்கள். இந்தி எதிர்ப்பின் அவசியத்தை மக்களிடம் பரப்ப “தமிழர் பெரும்படை” என்ற பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது.

தமிழர் பெரும்படையின் நடைபயணம்

பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஜ.குமாரசாமிப் பிள்ளை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், “நகர தூதன்” ஆசிரியர் திருச்சி திருமலைச்சாமி ஆகியோர் தலைமையில், தமிழர் பெரும்படையினர் திருச்சி உறையூரில் இருந்து நடைபயணமாக சென்னையை நோக்கிப் புறப்பட்டனர். கிட்டத்தட்ட 234 ஊர்களின் வழியாக 42 நாட்கள் நடந்து இவர்கள் சென்னை நகரை அடைந்தனர். சென்னையின் எல்லையில் இவர்களை மறைமலை அடிகள் வரவேற்றார். சென்னை நகரத்தின் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் பொறுப்பை மீனாம்பாள் சிவராஜ் ஏற்றிருந்தார்.


கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர்கள், பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராடினர். இப்படி தமிழகம் முழுவதும் பல தமிழறிஞர்கள் தலைமையில் போராட்டங்கள் வெகுவாக வெடித்தன. போராடியவர்களைக் கைது செய்து சிறை தண்டனை விதித்தது அரசு.

அடுத்த 42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் நடத்தி பரவலாக ஆதரவை திரட்டினர். அவர்கள் 11 செப்டம்பர் 1938 அன்று சென்னை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் அரசு அலுவலகங்களில் மறியல் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களது நடைபயணத்தால் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் இந்தி எதிர்ப்பு மற்றும் மொழியுணர்வு ஊட்டி பெருக்கப்பட்டது.

சென்னை வந்தடைந்த தமிழர் பெரும்படை

அறிஞர் அண்ணா கைது

1938 ஜூன் மாதம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் பேசியதற்காக அறிஞர் அண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராஜாஜி அரசு அவர் மீது மக்களை போராடத் தூண்டியதாக குற்றம்சாட்டி நான்கு மாதம் சிறைக்காவல் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்தது.

இந்தியை எதிர்த்து புறப்பட்ட திராவிட இயக்கப் பெண்கள்

அதே ஆண்டு நவம்பர் 14-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் டாக்டர் தருமாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தமாள், பட்டம்மாள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்தி என்னும் மொழியின் வழியாக ஒற்றை ஆதிக்க இந்தியாவை உருவாக்க காங்கிரஸ்காரர்கள் எடுத்த முயற்சியை தமிழ் நிலத்தில் தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண்கள் திராவிட இயக்கப் பெண்களே என்பது வரலாற்றில் பதிந்திருக்கும்  உண்மை. 

அடுத்து நவம்பர் 21-ம் நாள் உண்ணாமலை அம்மையார் தலைமையில் போராடி சிறை சென்றவர்களில் பின்னாளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஐம்பெரும் தலைவராக வந்த என்.வி.நடராசனின் மனைவி புவனேஸ்வரியும் ஒருவர்.

பெரியார் கைது; அபராதம் கட்ட மறுத்து சிறை

போராட்டங்களின் முன்னணியில் இருந்தவர்கள் திராவிட இயக்கத்தினர் என்பதை உணர்ந்த ராஜாஜி அத்தனை போராட்டங்களிலும் பின்னணயில் பெரியார் இருக்கிறார் என்று அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இந்த வழக்கில் பெரியாருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் ஆறு மாதம் கூடுதல் சிறை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பெரியார் அபராதம் கட்ட மறுத்து முழுவதுமாக சிறை சென்றார். 

இந்தி எதிர்ப்போடு சேர்ந்து பெரியாரை விடுதலை செய்யச் சொல்லும் போராட்டம் வெடித்தது. பெரியார், அண்ணா மட்டுமின்றி செ.தெ.நாயகமும் கைது செய்யப்பட்டார். போராட்டத்தை ஆதரித்தும், இந்தி எதிப்புப் பரப்புரை மேற்கொண்டதாலும் நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கப் பத்திரிக்கைகளுக்கு ஜாமீன் பணம் கட்ட அரசு உத்தரவிட்டது.

நடராசன், தாளமுத்துவின் தியாகம்

ஒட்டுமொத்தமாக இந்தி எதிர்ப்புப் போரில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 1269 பேர் என்கிறது ஆவணம். இவர்களில் சில தமிழ் அறிஞர்கள் தவிர்த்து பெரும்பான்மையினர் திராவிட இயக்கத்தினர் என்பதுதான் வரலாறு. பிரிட்டிஷ் அரசின் கீழ் முதல் காங்கிரஸ் அரசு தோன்றிய உடன் தமிழன் தொடுத்த போரை முன்னின்று நடத்தியது திராவிட இயக்கம். மொழிப் போராட்டத்தில் நடராசன், தாளமுத்து என்று தனது இரண்டு தோழர்களை திராவிட இயக்கம் இழந்தது.

இந்த போராடங்களை முன்வைத்து சட்டமன்றத்தில் பெரும் விவாதம் நடந்தது. இந்திய விடுதலைக்கு போராடுபவர்களை ஒடுக்க பிரிட்டிஷ் கொண்டுவந்த சட்டங்களின் கீழ் மொழிப் போராட்ட வீரர்களும், தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சட்டமன்றத்தில் கர்ஜித்த ஏ.டி.பன்னீர்செல்வம்

சட்டமன்றத்தில் இருந்த திராவிடக் கட்சியாக நீதிக்கட்சியினர் பெரும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சித் தலைவராக இருந்த திராவிடத் தளபதி சர் ஏ.டி.பன்னீர்செல்வம்

”இந்தியின் மூலம் தமிழ் மொழி மட்டுமல்ல, தமிழன் வாழ்வும் அழிந்துவிடும் என்பதை இந்த அமைச்சரவைக்கு பலமுறை எடுத்துச் சொல்லியாகிவிட்டது. தமிழனுடைய தனித்தன்மையை தமிழனுடைய மாண்பை தமிழ் மொழியின் பாங்கை அழித்தொழிக்க உங்களால் முடியாது என்பதை நான் திட்டவட்டமாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். அடக்குமுறைகளை கையாண்டு மக்களின் எதிர்ப்புகளை புறக்கணித்தால் அதை நீங்கள் தாராளமாக செய்யுங்கள். ஆனால் அதற்கு பதில் சொல்லும் காலம் மட்டுமல்ல வருத்தப்பட வேண்டிய காலமும் வெகு தூரத்தில் இல்லை” என்று பேசினார்.  

தொடரும்…!

– பன்னீர் பெருமாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *