இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ஆசியக் கண்டத்தில், காலனிய காலத்தால் தீர்க்கப்படாத தேசிய இன சிக்கல்கள் இன்று வரை பல்வேறு விதங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

ஈழம், பர்மா போன்ற நாடுகளில் உச்சகட்டமாக இனப்படுகொலையாகவும், பிற பகுதிகளில் எல்லைப் பிரச்சனையாகவும் அது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

தேசிய இன விடுதலை பார்வை கொண்ட ஒரு முதலாளித்துவப் புரட்சியை எடுத்துச் செல்லவல்ல முதலாளிகளின் உருவாக்கம் காலனிய ஆதிக்கத்தால் தடைபட்டுப் போன காரணத்தினாலும், காலனிகளை விட்டுச் சென்ற ஆங்கில ஏகாதிபத்தியம் அதிகாரத்தை நிலப்பிரபு கால ஆதிக்க வர்க்கங்களிடமே அளித்துச் சென்ற காரணத்தினாலும் பின்தங்கிய ஆசிய நாடுகளில் தேசிய இனப் பிரச்சனை என்பது தீர்க்கப்படாமலே தொடர்கின்றது.

காலனிய ஏகாதிபத்தியம் தன்னுடைய நிர்வாக வசதிக்காகவும், ஏகதிபத்திய நலனுக்காவும் ஏற்படுதிக் கொண்ட எல்லைகளே நாடுகளின் எல்லைகளாக மாறிப் போயினவே அன்றி, முதலாளித்துவப் புரட்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட எல்லைகள் அல்ல இவை.

இந்திய சீன எல்லைகளை வரையறுக்கும் McMohan Line மற்றும் Ardagh–Johnson Line இரண்டுமே காலனிய காலத்தில், அன்றைய ரஷ்ய சாம்ராஜியத்தின் ஆதிக்கத்தைத் தடுக்கும் பொருட்டு பிரிட்டிஷ் அரசால் வரையப்பட்ட எல்லைக் கோடுகள். Ardagh–Johnson Line காஷ்மீர் – திபெத் எல்லைப் பகுதியையும், McMohan Line இன்றைய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும்-திபெத்திற்குமான எல்லைக் கோட்டையும் வறையறுக்கின்றன. இதிலும் காஷ்மீர்-திபெத் எல்லையை வரையறுக்க Ardagh–Johnson Line, Macartney-Macdonald Line, கரக்கோணம் மலைத் தொடரை ஒட்டிய எல்லை கோடு என்ற மூன்று வெவ்வேறு கோடுகளை வகுத்துக் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், தங்களின் காலத் தேவைக்கேற்ப அதை பயன்படுத்திக் கொண்டதுதான் வேடிக்கை.

இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான காலக்கட்டத்தில், திபெத் தனிநாடாக இருந்த போதிலும், சீனாவின் ஆளுகைக்கு (suzerainty) உட்பட்டே இருந்தது. அதாவது, திபெத் எந்த அரசியல் முடிவுகளையும் சீனாவின் ஒப்புதல் இல்லாமல் எடுக்க முடியாது என்ற சூழல் இருந்து வந்தது. திபெத், நேபாள் ஆகிய நாடுகள் நடுநிலைப் பகுதிகளாக (Buffer zone) வல்லாதிக்கங்களால் கருதப்பட்டு வந்தன. சீனாவை ஆண்ட சாம்ராஜ்யங்கள் பலவீனமாக இருந்த போது, இந்த எல்லைக் கோடு ஒப்பந்தங்களில் திபெத் தன்னிச்சையாகவே கையெழுத்திட்டது. 1950இல் சீனா திபெத்தை ஆக்கிரமித்து திபெத்தின் இறையாண்மையை மறுத்ததுடன், இந்த இரண்டு எல்லைக் கோடுகளையும் அங்கீகரிக்கவும் மறுத்தது. சில வருடங்களுக்கு முன் நடந்த தோக்லாம் சிக்கலுக்கும், இன்று நடக்கும் பிரச்சனைக்கும் வரலாற்றுப் பின்னணி இது தான்.

சீனப் புரட்சிக்கு முந்தைய கால கட்டத்தில், சீனாவில் இருந்த கோடோமிங் அரசு ஏகாதிபத்திய ஆதரவு அரசாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னான பனிப்போர் காலக்கட்டத்தில் திபெத்தை தன்னுடைய தளமாக மாற்றிக் கொள்வதில் அமெரிக்கா ஆர்வம் காட்டியது. 1949 புரட்சிக்கு பிறகு சீனாவின் கம்யூனிச அரசு, திபெத்தை தங்களுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. பின்தங்கிய, திபெத்திய நிலப்பிரப்புத்துவ அரசை வீழ்த்தி மக்களை விடுவிக்கும் நோக்குடன் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக சீன கம்யூனிச அரசு காரணம் கூறியது. திபெத்திய விவகாரத்தில், லெனினிய சர்வதேசிய பார்வையுடன் சீனா நடந்து கொண்டதா என்றால் இல்லை.

ஆசியாவிலும் உலக அளவிலும் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த நினைக்கும், சீன முதலாளித்துவ அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியின் வழியாக China-Pakistan Economic Corridor உருவாக்கி வருகிறது. இதை பாதுகாக்கும் பொருட்டே தன்னுடைய நிலையை வலுப்படுத்தும் நோக்குடன் இராணுவக் குவிப்புகளையும் நடவடிக்கைகளையும் செய்கிறது சீன அரசு.

முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய காலகட்டத்தில், வலிமையுள்ள அரசுகள் தங்களது முதலாளிகளுக்கான சந்தைகளை விரிவாக்கம் செய்வதில் தங்கள் இராஜதந்திர நடவடிக்கைகளையும், தேவைப்பட்டால் இராணுவ பலத்தையும் பயன்படுத்துகின்றன. இதுவே போர்களுக்கான காரணம் என்கிறார் லெனின். இன்று சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான சிக்கலை லெனினின் கண்ணாடியை போட்டுப் பார்த்தால் அன்றி புரிந்து கொள்ள முடியாது.

மக்களை சீன எதிர்ப்பு என்ற தளத்தில் அணி திரட்ட முயற்சிக்கும் இந்திய அரசிற்கு சீன எதிர்ப்பில் எவ்வளவு தூரம் உண்மையான அக்கறை இருக்கிறது என்பதை நாம் கண்கூடாகப் பார்கிறோம். Shanghai Tunnel Engineering Co என்ற சீன நிறுவனத்திற்கு, 1126 கோடிக்கான ஒப்பந்தம் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு மெளனமே பதிலாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுத்துக் கேட்டாலும் இதற்கான பதில் இந்திய அரசிடம் இருந்து வரப்போவது இல்லை. இந்திய இராணுவம் பயன்படுத்தும் Bullet Proof Jacket உற்பத்தியில் , சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்களே பயன்படுத்தப் படுகின்றன. காரணம் மலிவான விலை. பல்வேறு இந்திய முதலாளித்துவ நிறுவங்களில் சீனாவின் மூலதனம் பங்குளாக உள்ளன. சீன முலதனச் சுரண்டலுக்கு இந்தியா தடை விதிக்கும் சூழலும் இங்கு இருக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் உண்மையான நிலவரம்.

இந்தியாவில் உள்ள Liberal சிந்தனையாளர்கள், தேசிய நலன் என்ற நோக்கில்தான் இந்த சிக்கலை அணுகுகின்றனர். ThePrint மின் இதழுக்கு யோகேந்திர யாதவ் எழுதிய கட்டுரையில், ஆள் அரவமற்ற, மக்கள் வாழ்த் தகுதயற்ற அக்‌ஷ்ய் சின் பகுதியில் சீனாவின் ஊடுருவலை “most serious Chinese incursion in the last few decades” என்று வர்ணிக்கிறார். இந்த சமயத்தில் மோடியை விமர்சிப்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையால் மக்களின் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், போர் வந்தால் இந்த பொருளாதாரம் என்ன ஆகுமோ என்பதுதான் இவர்களின் ஆகப்பெரும் கவலையாக இருக்கிறது!

அப்படியானால் சராசரி உழைக்கும் மக்களாகிய நாம் இதை எப்படி பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது!! சீனாவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் என்பது , இந்திய முதலாளிகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே சாத்தியப்படும். அதைச் செய்யாமல் அடையாளப் போராட்டங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்கள் மூலமாக கட்டமைக்கப்படும் தேசிய உணர்வு, இந்திய ஆளும் வர்க்கத்திற்கு பலம் சேர்த்து, நம் மீதான சுரண்டலை மேலும் அதிகரிக்கவே செய்யும். கொரோனா பேரிடர் காலக்கட்டத்திலும், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்புவதற்காக இயக்கப்பட்ட சிறப்பு இரயில்களுக்கு யார் கட்டணம் செலுத்த வேண்டும், அவர்களின் சொந்த மாநில அரசா, இல்லை அவர்களை சுரண்டிய மாநில அரசா என்ற கேள்வியே விவாதமானது. இந்தியாவிற்குள்ளும் தேசிய இனச் சிக்கல் தீர்க்கப்படாமல் பூசி மொழுகி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?

பிரிட்டிஷ் காலானிய அரசு தங்கள் நலனுக்காக செய்துச் சென்ற குழப்பங்களை தீர்க்க தேசிய இன விடுதலப் போராட்டத்தை முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராக தொழிலாளர்கள் முன்னெடுக்காத வரை, ஆசியக் கண்டத்தில் நிலவும் அமைதி என்பது தற்காலிகமான அமைதியாகவே இருக்கும் என்பதை நாம் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

இதையெல்லாம் மக்களிடம் இப்போது பேசி புரியவைத்து விட முடியுமா? இதற்கான சூழல் இப்போது நிலவுகிறதா என்ற கேள்விகள் எழுவது இயல்பானதே! ஆனால் இப்போது இல்லை என்றால் எப்போது இதை செய்யப் போகிறோம்??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *