கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் ஏப்ரல் 12 முதல் மே 29 வரையிலான காலத்தில் டெல்லியில் 10 முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளாகவே டெல்லியைச் சுற்றி நில நடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த புதன்கிழமை 03-05-2020 அன்று 3.2 என்ற ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடந்த 5 நாட்களில் மூன்றாவது முறையாக ஏற்படும் நிலநடுக்கமாகும். இவையெல்லாம குறைந்த அளவிலான நிலநடுக்கங்களாக இருந்த போதிலும், இந்த தொடர் நிலநடுக்கங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் புவியியலாளர்கள் மற்றும் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று, கூடிய விரைவில் எப்போது வேண்டுமானாலும் டெல்லியில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அது எப்போது ஏற்படும், எங்கு ஏற்படும், எந்த அளவில் இருக்கும் என்பதை தற்போது கணிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அப்படி நிகழும்போது எப்படி முன்னெச்சரிக்கை அளிப்பது, எப்படி கட்டிடங்களிலிருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரச் செய்வது போன்ற திட்டங்களை வகுப்பதில் ஆய்வாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
தொடர் நிலநடுக்கங்களுக்கான காரணம்
பூமியின் உருவாக்கத்தில் துவங்கி, நீண்ட காலங்களாக நடைபெற்ற மாற்றங்களின் விளைவாகவே இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. புவியின் பரப்பானது பல்வேறு அடுக்குகளால் ஆனது. அதில் இந்தியப் பகுதியின் டெக்டானிக் தகடுகள் யூரேசியன் டெக்டானிக் தகடுகளுடன் மோதியதன் விளைவாகவே பாறைகள் மேலெழுந்து இமயமலைத் தொடர் உருவானது. இது 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த நிகழ்வாகும். இந்திய டெக்டானிக் தகடுகளின் நகர்வானது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 6 செ.மீ வரை இந்திய தகடுகள் ஆசிய தகடுகளுக்குள் நகர்கின்றன. இதன் விளைவாக நிகழும் மோதல்களால் ஒவ்வொரு ஆண்டும் இமய மலையின் உயரமும் சிறிய அளவில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த மோதல்களின் விளைவாக பூமிக்கு அடியிலுள்ள பாறைகளில் விரிசலும், விலகலும் ஏற்பட்டுள்ளது. இவற்றின் விளைவாகவே தொடர் நிலநடுக்கங்கள் இமயமலைப் பகுதியிலும், டெல்லியிலும், ஹரியானா மற்றும் உத்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் ஏற்பட்டு வருகிறது. கி.மு 1315 க்கும் கி.மு 1440-க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் விளைவாக பாறைகளில் 600 கி.மீ தூரத்திற்கு நில அதிர்வு இடைவெளியினை (Siesmic Gap) உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின் பாத்பூரிலிருந்து மத்திய இமாலயப் பகுதியான நேபாளத்தின் மோகன கோலா வரை இந்த இடைவெளி நீண்டுள்ளது. இப்பகுதியானது 600 முதல் 700 ஆண்டு காலங்கள் வரை அமைதியான இடைவெளியாக இருந்ததாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் நிகழும் மாற்றங்கள் விரைவில் இமயமலைப் பகுதியில் ரிக்டர் அளவுகோளில் 8.5 வரை நிலநடுக்கத்தினை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
டெல்லி பகுதியில் பாறைகளுக்கு கீழே இத்தகைய இடைவெளிகள் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக டெல்லி-ஹரித்வார் பாறை இடைவெளி (Delhi – Haridwar Ridge), டெல்லி-சார்கோதா பாறை (Delhi-Sargodha Ridge), கிரேட் பெளண்டரி இடைவெளி (Great Boundary Fault) போன்றவை முக்கியமானவை. இப்பகுதியில் பல தகடுகள் தற்போது இயங்கக் கூடியவையாக இருக்கின்றன. இப்பகுதிகளை கீழ்காணும் வரைபடத்தில் காணலாம்.
மத்திய இமாலயத்தின் அடிவாரப் பகுதியில் பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இமயமலையின் பிற பகுதிகளைப் போல இப்பகுதியில் கடந்த நூறாண்டுகளாக இப்படிப்பட்ட் பெரிய நிலநடுக்கம் எதுவும் ஏற்பட்டதில்லை. இந்திய டெக்டானிக் தகடுகளின் வடக்கு நோக்கிய நகர்வினால் ஏற்படும் அழுத்தத்தினால் இந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது.
எதிர்கொள்ள டெல்லி தயாராக இருக்கிறதா?
யமுனை ஆற்றின் கரைப் பகுதிகளும், கங்கை ஆற்றின் சமவெளிப் பகுதிகளும் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக கணக்கிடப்படுகிறது. டெல்லியானது நில அதிர்வு மண்டலத்தின் அபாயப் பகுதியான பகுதி 4-ல் இருப்பதால் பாதிப்பின் அளவு தீவிரமாக இருக்கும் என கருதப்படுகிறது. டெல்லியின் 75 சதவீத கட்டிடங்கள் நிலநடுக்க மையப் பகுதியில்தான் இருக்கின்றன. 95 சதவீத கட்டிடங்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கட்டப்படவில்லை என கட்டடவியலாளார்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக நொய்டா, குருகிராம் மற்றும் டெல்லியைச் சுற்றியுள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பி.ஐ.எஸ் விதிமுறைகளை மீறி மிக உயரமாக எழுப்பட்டுள்ளன. டெல்லி நில அதிர்வு அபாயப் பகுதியான 4 வது மண்டலத்தில் இருப்பது தெரிந்தும் விதிமுறைகளை மீறியே கட்டிடங்கள் எழுப்ப்பட்டுள்ளன. 5.5 முதல் 6 ரிக்டர் அளவுகோல் அளவிலான நிலநடுக்கம் டெல்லியில் ஏற்படுமாயின் பெருமளவிலான கட்டிடங்கள் தரைமட்டமாகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். டெல்லியில் இருக்கும் பாறை இடைவெளிகளைக் கணக்கில் கொண்டு 6 முதல் 6.5 ரிக்டர் அளவு வரை அங்கு நிலநடுக்கம் ஏற்படலாம் என தோராயமாக கணிக்கப்படுகிறது.
டெல்லியில் மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தினால் நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிரிழப்பு, பொருளிழப்பு இரண்டுமே தீவிரமாக போகும் அபாயமிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பான் நிலநடுக்கத் தீவிரப் பகுதியாக இருப்பதால் அங்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு விதிமுறைகள் தீவிரமாக்கபட்டன. இதனால் அங்கு கட்டிடங்கள் 7.5 முதல் 8 ரிக்டர் அளவுகோல் வரையிலான நிலநடுக்கத்தினை தாங்கும் வண்ணம் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் டெல்லியில் அப்படி எந்த மாற்றமும் கட்டிட கட்டுமானத்தில் நிகழ்த்தப்படவில்லை.
நிலநடுக்க பாதிப்பு மதிப்பீடு மையத்தின் முன்னாள் தலைவரான சுக்லா, டெல்லியின் கட்டிட விதிமுறைகளில் உடனடியாக மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த ஆய்வுகளின் படி டெல்லி அரசுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அளித்த பரிந்துரைகளை இன்னும் டெல்லி அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நில அதிர்வு மண்டலங்கள்
நில அதிர்வு ஏற்படும் வாய்ப்புகளைப் பொறுத்தும், பாறை இடைவெளிகளின் தன்மைகளைக் கருத்தில் கொண்டும் அனைத்து பகுதிகளையும் நான்கு மண்டலங்களாக பிரிக்கிறார்கள். மண்டலங்கள் II, III, IV, V என பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டலம் II:
நிலநடுக்கத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்பிற்கும் குறைந்த வாய்ப்புள்ள பகுதியாகும். மண்டலங்கள் 3, 4 மற்றும் 5 -ல் வகைப்படுத்தப்படாத அனைத்து பகுதிகளும் மண்டலம் 2-ன் கீழ் சேர்க்கப்படும்.
மண்டலம் III:
கேரளா, கோவா, லட்சத்தீவு ஆகிய பகுதிகள். மேலும் உத்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒரிசா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள்.
மண்டலம் IV:
ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள், என்.சி.டி டெல்லி, சிக்கிம் ஆகியவை, உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகியவற்றின் வடக்கு பகுதிகள், குஜராத்தின் சில பகுதிகள், மகாராஷ்டிராவின் மேற்கு கடற்கரையை ஒட்டிய சில பகுதிகள் மற்றும் ராஜஸ்தான்.
மண்டலம் V:
இதுவே நிலநடுக்க வாய்ப்பு மற்றும் பாதிப்பு மிக அதிகமுள்ள பகுதியாகும். இமயமலையின் வடக்கெல்லை பகுதி, வடகிழக்கு இந்தியா ஆகியவை இந்த மண்டலத்தின் முக்கிய பகுதிகளாகும். கட்ச் பகுதி, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்திராஞ்சல் ஆகிய பகுதிகளில் 4 வது மண்டலத்தில் வராத மற்ற பகுதிகள், வடக்கு பீகார் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகள்.