ரஃபேல் ஒப்பந்தத்தில் சுஷென் குப்தா என்ற இந்திய இடைத்தரகருக்கு 1.1 மில்லியன் யூரோக்கள் (ரூ. 9.51 கோடி) வழங்கப்பட்டதாக ஒரு பிரெஞ்சு ஊடகம் வெளிப்படுத்தி உள்ளது. இந்த செய்தி இந்தியாவில் ஒரு புதிய அரசியல் புயலை ஏற்படுத்தியுள்ளது.
1.1 மில்லியன் யூரோ கமிசன்
2016-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையிலான ரஃபேல் ஒப்பந்தத்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை முடித்துத் தந்ததற்காக ரஃபேல் விமான உற்பத்தியாளரான டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் இடைத்தரகர் சுஷென் குப்தாவுக்கு 1.1 மில்லியன் யூரோ கமிஷன் வழங்கியுள்ளதை பிரெஞ்சு பத்திரிக்கை மீடியாபார்ட் (Mediapart.fr) தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் எவ்வாறு சாத்தியப்பட்டது, அதற்காக எவ்வளவு பணம் கை மாற்றப்பட்டுள்ளது என்பது குறித்து தணிக்கையின்போது தெரியவந்ததாக பிரான்சின் ஊழல் தடுப்புப் பிரிவு (Agence Francaise Anticorruption (AFA) தெரிவித்துள்ளது.
“ரஃபேல் ஜெட் விமானங்களின் 50 பெரிய பிரதி மாதிரிகள் தயாரிப்பதற்கு அந்த பணம் பயன்படுத்தப்பட்டதாக டசால்ட் நிறுவனம் கூறியது. ஆனால் இந்த மாதிரிகள் தயாரிக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை” என்று ஊழல் தடுப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் பரவலாக வெளியானதற்குப் பிறகு கடந்த திங்கட்கிழமை ரஃபேல் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து முழுமையான விசாரணை நடத்த காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது.
விசாரணை கோரும் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பின்வருமாறு இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
‘’பிரெஞ்சு ஊழல் தடுப்பு நிறுவனம் நடத்திய விசாரணையில், 2016-ம் ஆண்டு ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், ரஃபேல் விமான உற்பத்தியாளர் டசால்ட் நிறுவனம் சுஷென் குப்தாவுக்கு சொந்தமான டெஃப்ஸிஸ் சொல்யூஷன்ஸ் என்ற இந்திய நிறுவனத்திற்கு 1.1 மில்லியன் யூரோ பணம் கமிஷனாக செலுத்தியுள்ளது”.
வெளியான ஜக்கியின் புகைப்படம்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சுஷென் குப்தாவுடன் ஜக்கி வாசுதேவ் நெருக்கமாக உள்ள படம் வெளிவந்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சமூக ஆர்வலர் சாகேத் கோகலே தனது டிவிட்டர் பக்கத்தில் அப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
”ரஃபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டதற்கு 1 மில்லியன் டாலர் பெற்றதாக பிரெஞ்சு ஊழல் தடுப்பு நிறுவனம் குறிப்பிட்ட சுஷென் மோகன் குப்தாவுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பவர் யார் என்று பாருங்கள்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் சாகேத் கோகலே பதிவுட்டுள்ளார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாட்டு கோவில்கள் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை என்றும், அரசுத் துறையை வெளியேற்ற வேண்டும் என்றும் தொடர் பிரச்சாரம் செய்துவரும் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசுதேவிற்கும் இந்திய பாதுகாப்புத் துறையில் மெகா ஊளலில் பங்கெடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சுஷென் குப்தாவிற்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமலாக்கத் துறையால் ஊழல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுஷென் குப்தா
உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் வைத்திருக்கும் ஜக்கியிடம் நெருக்கம் காட்டும் சுஷென் குப்தா, வி.வி.ஐ.பி சாப்பர்ஸ் ஊழலில் பங்கு இருப்பதாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற ஊழல்வாதிகளுடன் நெருக்கம் காட்டும் ஜக்கி வாசுதேவிற்கு தமிழ்நாடு அறநிலையத் துறை குறித்து கேள்வி எழுப்ப என்ன தகுதி இருக்கிறது என்று பரவலாக சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க:
இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!