ஜக்கி வாசுதேவ்

இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!

இஸ்லாமிய மத நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நிர்வகிக்கும் போது இந்து கோவில்களை ஏன் அரசு நிர்வகிக்க வேண்டும் என்று கேள்வி  எழுப்புகிறார்கள் கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று சொல்லும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களும், அவர்களின் ஆதரவாளர்களும்.

ஆனால்  உண்மை என்னவென்றால் இஸ்லாமிய மத நிறுவனங்களையும், அதற்கு கொடுக்கப்படும் நன்கொடைகளையும் சொத்துக்களையும் அரசுதான் நிர்வகிக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை போல, இஸ்லாமிய சொத்துக்களை நிர்வகிக்க அரசின் நிறுவனமான வக்பு வாரியம் செயல்படுகிறது.

3 லட்சத்திற்கும் மேற்பட்ட வக்புக்கள்

முஸ்லிம் மக்கள் அவர்களின் சொத்துக்களை வக்ஃபு பத்திரம் மூலம் பொதுக்காரியங்களுக்கும், மசூதிகளுக்கும் எழுதிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்த சொத்துகளை நிர்வகிக்க இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் அரசு வெளியேறிய பிறகு வக்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டது. இன்று இந்தியா முழுவதும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வக்புக்கள் அங்கீகாரம் பெற்று உள்ளன.

1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்பு சட்டம்

மாநில அரசுகளின் மூலமாக வக்பு வாரியங்கள் செயல்படுவதற்கும், வக்பு சொத்துக்களில் திறமையான முறையில் மேலாண்மை மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1959,1964 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. மீண்டும் 1995-ல் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய சட்டம் இயற்றப்பட்டது.

வக்பு வாரியம் உருவாக்கம்

இசுலாமிய வழிபாட்டுத்தலங்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் “மத்திய வக்பு வாரியம்” என்பது இந்திய வக்பு சட்டம் 1954-ன் கீழ் அமைக்கப்பட்டது என்பதும், அதன் தலைவராக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் இருக்கிறார் என்பதும், மத்திய வக்பு வாரியத்தின் கீழ் மாநில வக்பு போர்டுகள் இயங்குகின்றன.

வக்பு வாரிய நிர்வாகிகள் யார்?

வக்பு வாரியத்தின் நிர்வாக அலுவலர் முதன்மை செயல் அலுவலர் ஆவார். நிர்வாக மேன்மைக்காக வாரியம் தன்னகத்தே 11 சரக அலுவலகங்களைக் கொண்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், பண்ருட்டி, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன. ஒவ்வொரு சரகமும் ஒரு கண்காணிப்பாளரால் நிர்வகிக்கப்படுகிறது. 31 மாவட்டங்களுக்கு 33 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேரடி நிர்வாகத்தில் உள்ள வக்புகளுக்கு நிர்வாக அலுவலராக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு வகையான வக்புகள்

வக்பு சட்டம் 1995-ன் பிரிவு 72(1)ன்படி ஒரு வக்பின்  நிகர வருமானம் ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் ஐந்தாயிரத்திற்கு மேல் இருந்தால் அந்த வக்பு, வாரியத்திற்கு  அதன் வருமானதில் இருந்து ஏழு சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டும். இவை கணக்கீட்டிற்குள் வரும் வக்புகள் ஆகும்.

நிகர வருமானம் ரூபாய் ஐந்தாயிரத்திற்கு குறைவான வக்புகள் வாரியத்திற்கு சகாயத் தொகை செலுத்த வேண்டியதில்லை. இவை கணக்கீட்டிற்குள் வராத வக்புகள் ஆகும்.

 தமிழகம் முழுவதும் கணக்கீட்டிற்குள் வரும் வக்புகள் 2,194 உள்ளன. கணக்கீட்டிற்குள் வராத வக்புகள் 4,507 உள்ளன.  இந்த கணக்கீட்டிற்குள் வராத வக்புகளைம் வக்புவாரியம் தான் நிர்வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

முறையான கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க ஒவ்வொரு வக்பும் கடமைப்பட்டுள்ளது. இதிலிருந்து தவறுகிற வக்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வக்பு வாரியத்திற்கு அதிகாரம் உண்டு.

வக்பு வாரியத்தின் பணிகள்

  • ஒவ்வொரு வக்பின் தோற்றம், வருவாய், நோக்கம், பயனாளிகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்வது முதல் நிர்வகிப்பது வரை அனைத்து பணிகளையும் வக்பு வாரியம் மேற்கொள்கிறது.
  • வக்பு சொத்துக்களும், அதன் வருமானமும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணித்தல், வக்புகளின் கணக்கை தணிக்கை செய்தல், வரவு செலவை ஆய்வு செய்து அங்கீகரித்தல் என அனைத்து இஸ்லாமிய மத நிறுவன சொத்துக்களையும் வக்பு வாரியம் தான் நிர்வகிக்கிறது.
  • வக்பு சட்டப்படி மசூதிகளை நிர்வகிக்கும் முத்தவல்லிகளை நியமிப்பதும் மற்றும் நீக்குவதும் கூட வக்பு வாரியம் தான். 
  • ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்தல், வக்பு சட்டத்திற்கு உட்பட்டு வக்பு சொத்துக்கள் விற்பனை, குத்தகை, ஒத்தி, பரிமாற்றம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்குதல், வக்பு நிதியை நிர்மாணித்தல், வக்பு சொத்துக்களின் தன்மை, பரப்பளவு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவு செய்தல் மற்றும் அளவை செய்தல் என அனைத்து பணிகளையும் அரசின் வழியான வக்பு வாரியமே நிர்வகிக்கிறது.  
  • இவற்றைத் தவிர அரசு வழங்கும் மானியத் தொகை மூலம் நலிவுற்ற வக்பு நிறுவனங்களைப் பழுது பார்ப்பதற்கும், மையவாடிகளில் சுற்றுச்சுவர் எழுப்புவதற்கும், உலமாக்கள் ஓய்வூதியம் வழங்குதல், 1986-ம்ஆண்டின் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட்டப்படி மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்குதல் போன்ற பணிகளையும் வக்பு வாரியம் தான் செய்து வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிரான போலி பிரச்சாரம்

மசூதிகளை நிர்வகிக்கும் முத்தவல்லிகளை நியமிப்பது முதல் அனைத்து மசூதிகளின் சொத்துகளை நிர்வகிப்புது வரை அனைத்தும் அரசின் கட்டுபாட்டில் உள்ள வக்புவாரியம் தான் செய்து கொண்டிருக்கிறது. இந்திய வக்பு வாரியத்தின் தலைவராக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர்தான்  இருக்கிறார் என்கிற எல்லா உண்மைகளும் தெரிந்தாலும் இஸ்லாமியர்கள் மசூதிகளை  நிர்வகிப்பது போல, இந்து கோவில்களையும் இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்  என்று ஒரு போலி பிரச்சாரத்தை ஜக்கி வாசுதேவின் ஆதரவாளர்கள் தங்கள் சுயநலத்திற்காக நடத்துகிறார்கள். இந்து சமய அறநிலையத் துறையில் எப்படி இந்து சமயம் அல்லாத ஒருவர் பணியில் சேர முடியாதோ அதேபோல வக்பு வாரியத்திலும் முடியாது.

ஒரு நவீன ஜனநாயகத்தில் அரசு அந்தந்த மத நிறுவனங்களை தனது கட்டுபாட்டில் கொண்டுவந்து அந்த மதங்களைச் சேர்ந்தவர்களால் நிர்வகிப்பது  தான் நேர்மையானதாக இருக்க முடியும் மேலும் வரலாற்றில் கோவில்கள் என்றுமே தனியார் கட்டுப்பாட்டில் இருந்ததும் இல்லை.

தற்போது கார்ப்ரேட் சாமியார்கள் பல பெருமை கொண்ட நம் கோயில்ளையும், அதன் சொத்துக்களையும் ஆக்கிரமிக்க மதக் கலவரங்களைக் கூட உருவாக்குவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *