ஜக்கி வாசுதேவ் சந்தானம்

இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!

இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்; அரசு அதில் இருந்து  வெளியேற வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களும் ஆர்.எஸ்.எஸ்-சை சேர்ந்தவர்களும் ஒரு பெரும் பரப்புரையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்துக்கள் கோவில்களை இந்துக்கள் நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லும்போது, அப்படியானால் தற்போது அறநிலையத் துறையில் யார் நிர்வகிக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது. 

அறநிலையத் துணை ஆணையராக IAS அதிகாரி

இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1959-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் (திருத்தப்பட்ட சட்டம் 39/1996) கீழ் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அலுவலர் ஒருவர் ஆணையராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

துறையின் பொது நிர்வாகம் மற்றும் அனைத்து செயல்பாடுகளுக்கும் தலைமை பொறுப்பில் இந்த  ஆணையர் உள்ளார். 

2409 பணியிடங்கள்

ஆணையர், அலுவலர்கள், சார்நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள், அயல்பணி அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளடங்கிய 2,409 அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் காலியிடங்கள் தவிர 1336 பணியாளர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள்

பொது நிர்வாகம், விசாரணை, திருப்பணி ஆகியவற்றிற்கு தனித்தனி கூடுதல் ஆணையர்கள் உள்ளனர். அதேபோல் தலைமை அலுவலகத்தில் இரண்டு இணை ஆணையர் (Joint Commissioner), மேலும் சட்டத்திற்கு என்று ஒருவரும், அறநிலையத்துறையின் கீழ் உள்ள கல்வி மற்றும் தொண்டு  நிறுவனங்களை நிர்வகிக்க ஒருவரும் என இணை ஆணையர்கள் உள்ளனர். 

சட்ட பிரிவுக்கு ஒரு உதவி ஆணையரும் ’கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம்’ நிர்வகிக்க  ஒரு உதவி ஆணையரும் (Assistant Commissioner) உள்ளனர்.

திருக்கோயில் மாத இதழ் ஆசிரியர்

இது இல்லாமல் இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் மாத இதழான திருக்கோயில் இதழ் ஆசிரியர்  இன்று தலைமை நிர்வாகத்தில் உள்ளனர்.

11 மண்டலங்கள்; 28 கோட்டங்கள்

தமிழ்நாடு முழுவதும் 11 மண்டலங்களையும், மாவட்ட அளவில் 28 கோட்டங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு இணை ஆணையரும், ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு உதவி ஆணையரும் நியமிக்கப்பட்டு இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

அனைத்து பணியாளர்களும் இந்துக்களாகவே இருக்க வேண்டும் என்பதே சட்டம்

மேற்சொன்ன ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமல்ல, இந்து சமய அறநிலையத்துறையின் வழியாக பணியில் இருக்கும் ஊழியர்கள் காவலர்கள் துப்புரவுப் பணியாளர்கள், கணக்கர்கள், எழுத்தர் என்று அனைத்து பணிகளிலும் இருப்பவர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த இந்துக்களே என்கிற உண்மையை மறைத்து விட்டுத்தான் கோவில் நிர்வாகத்தில் இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்று புதிய கோரிக்கை போல வைக்கிறார்கள்.

அறநிலையத் துறை சட்டம் என்ன சொல்கிறது?

இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கும் போதே இதற்கான சட்டமும் இயற்றபட்டுவிட்டது. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை கட்டளைகள் சட்டம் 1959 அத்தியாயம் 2 ஆணையர் மற்றும் இதர கட்டுபாட்டு அதிகார அமைப்புகள்  என்ன சொல்கிறது என்றால், 

  • ஆணையர், இணை ஆணையர் மற்றும் துணை அல்லது உதவி ஆணையர் ஒவ்வொருவரும்,
  • சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பிற அலுவலர்கள் அல்லது பணியாளர்கள் ஒவ்வொருவரும், 
  • அவர் எவரால் நியமிக்கபட்டிருப்பினும், இந்து சமயத்தை பின்பற்றி வருபவர்களாக இருக்க வேண்டும். 
  • அவர் அந்த சமயத்தை பின்பற்றாது போகும்போது அத்தகையவர் பதவி வகிப்பது அற்றுப்போதல் வேண்டும் என்று கூறுகிறது. இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே அமைச்சர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

அப்படியென்றால் ஏன் பொய்யை பரப்புகிறார்கள்?

இந்து சமய அறநிலையத்துறை வழியாக கோயில்களை கடந்த 61 ஆண்டுகளாக நிர்வகித்து வருபவர்கள் இந்துக்களே. அப்படியானால் திடீரென இந்துக்களிடம் கோயில்களை கொடுக்க வேண்டும் என்று கூறுவதன் காரணம், இடஒதுக்கீட்டின் வழியாக பிற்படுத்தப்பட்ட(OBC) மற்றும் பட்டியல் பிரிவைச் (SC/ST) சேர்ந்த அதிகாரிகள் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளில் நியமிக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்ட ஒவ்வாமையே. வரலாறு முழுக்க கோவில் சொத்துகளை அனுபவித்த உயர்சாதியினர் அதனை மீண்டும் கைப்பற்றுவதற்காகவே இந்த பரப்புரை தீவிரமாக நடத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

10 லட்சம் ரூபாய்க்கும் அதிக வருமானம் உள்ள கோவில்கள்

இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டப் பிரிவு 46(iii)-ன் கீழ் உள்ள பத்து இலட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறும் இந்து சமய நிறுவனங்களுக்கு ஐந்து பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் அரசால் நேரடியாக நியமிக்கப்படுவர்.

இந்த பட்டியலில் தமிழ்நாடு முழுவதும் 1,992 திருகோவில்கள் இருக்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்டவை இந்த பட்டியலில் வரும்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி

2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை

இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டப்பிரிவு 46(ii)-ன் கீழ் உள்ள இரண்டு இலட்சம் ரூபாயிலிருந்து பத்து இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறும் இந்து சமய நிறுவனங்களுக்கு மூன்று பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் ஆணையரால் நியமிக்கப்படுவர். இதில் 938 திருக்கோவில்கள் உள்ளன.

10,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை

இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டப்பிரிவு 46(i)-ன் கீழ் உள்ள பத்தாயிரம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய்க்குக் குறைவாக ஆண்டு வருமானம் பெறும் இந்து சமய நிறுவனங்களுக்கு மூன்று பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் அந்தந்த மண்டல இணை ஆணையரால் நியமிக்கப்படுவர். இதில் 5,037 கோவில்கள் உள்ளன.

10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக

இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டப்பிரிவு 49(i)-ன் கீழ் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறும் இந்து சமய நிறுவனங்களுக்கு மூன்று பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் உதவி ஆணையரால் நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த பிரிவில் 36,154 திருகோவில்கள் உள்ளன.

போதிய வருமானம் இல்லாத 40,000 கோயில்கள்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களில் கிட்டத்தட்ட 40,000 கோவில்கள் அந்த கோவில்களின் நிர்வாகத்திற்கே போதுமான  வருமானம் இல்லாத கோவில்கள் தான் என்கிற உண்மை தெரிந்தும், இந்து சமய அறநிலையத் துறையின் மீது பெரும் களங்கம் விளைவிக்கும் வேலையை, வருமானம் வரும் கோவில்களை கைப்பற்றுவதற்காக திட்டமிட்டு கார்ப்பரேட் சாமியார்கள் செய்கிறார்கள்.

பாலின பேதமும், சாதி பேதமும் இல்லாத வகையில் நடக்கும் நியமனம்

மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவு அறங்காவலர் குழுவிலும் மூன்று அறங்காவலர்களுக்கு குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு மிகாமலும் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். இக்குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம் பெற வேண்டும். இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் ஆகும் என்பதும் சட்டமாகும். 

கோவில் நிர்வாகத்தில் பாலின பேதமும் இருக்கக் கூடாது என்று நவீன ஜனநாயகக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த குழுக்களை எல்லாம் களைத்துவிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலைப் போல பார்ப்பனர்கள் மட்டுமே இருக்கக்கூடிய அதிகார வட்டத்தில் கொண்டுவரவே ஆர்.எஸ்.எஸ் ஆட்களும், ஜக்கி போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் முயற்சிக்கிறார்கள்.

வசதி மிக்க கோயில்களின் வருமானத்திலிருந்து வசதியற்ற கோயில்கள் பராமரிப்பு நடக்கிறது

நிதி வசதி மிக்க திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து, நிதி தேவையான திருக்கோயில்களுக்கு திருப்பணிகளை மேற்கொள்ள இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் 36-வது பிரிவின் கீழ் நிதி மாற்றம் மூலமாக நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட நிதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதி பெறப்பட்டு திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.1,00,000/- வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. 

ஜக்கி தன் ஈஷா நிறுவன வருமானத்தை வசதியற்ற கோயில்களுக்கு பிரித்துக் கொடுப்பாரா?

இந்து சமய அறநிலையத்துறை வருமானம் இல்லாத கோவில்களையும் மற்ற கோவில்களின் வருமானத்தில் இருந்து பராமரிப்பது போல, சிதம்பரம் தீட்சிதர்கள், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் தங்கள் பக்தர்களிடம் இருந்து பெறும் பணத்தில் இதற்கு முன் எங்கேனும் மற்ற கோவில்களுக்கு கொடுத்துள்ளார்களா என்றால் இல்லை என்பதே பதில்.

கோவில்களின் நிர்வாகம் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பில் அனைத்து மக்களும் பங்கெடுக்கும் விதமாகவும், ஆண்டு தோறும் வரவு செலவுகள் அனைத்தும் வெளிப்படையாக இருப்பதும், நீண்டகாலமாக பக்தியின் பெயர் சொல்லி  கோவில் சொத்துகளை ஒரு சாதியின் தனியுடைமையாக வைத்திருந்தவர்களின் கண்ணை உறுத்துவதாலும், மீண்டும் சிதம்பரம் கோவிலைப் போல தங்கள் அதிகாரத்திற்குக் கீழ் கொண்டுவருவதுமே கோவில்களில் இருந்து அறநிலையதுறையை வெளியேற்றத் துடிப்பவர்களின் நோக்கம்.

இதையும் படிக்க: இஸ்லாமிய மத நிறுவனங்களை அரசு நிர்வகிக்கவில்லையா? ஜக்கி கூட்டத்தின் பொய்களை அறிவோம்!

3 Replies to “இந்து கோயில்களை இப்போது யார் நிர்வகிக்கிறார்கள்? ஜக்கி பிரச்சாரத்தின் பொய்யை அறிவோம்!”

  1. கோடிக்கணக்கான பக்தர்கள் என்ன கேட்கிறார்கள் என்று புரிந்துகொள்ளாமல் எழுதப்பட்ட கட்டுரை. ‘இந்துக்களிடம் கோயில்களை கொடுக்க வேண்டும்’ என்பது கோரிக்கை அல்ல. பக்தர்களிடம் கோயில்களை கொடுக்க வேண்டும் என்பதே கோரிக்கை – HRCE வேலையாட்கள் எந்த சமயத்தை சார்ந்தவர்கள் என்பது பற்றி கேள்வியோ, சச்சரவோ இல்லை. அரசன்ங்கத்தில் சம்பளம் வாங்கி அலுவல் புரியும் அனைவருமே கோயில் பக்தர்கள் என்று எண்ணுவது மடமை. கட்டுரை ஆசிரியர் தயவு செய்து பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொண்டு கட்டுரை எழுதவும்.

  2. சம்பளம் பெற்றுக்கொண்டு அலுவல் பணி புரிபவர்கள் பக்தர்கள் இல்லையென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலம் பணம் என தன் வாழ்க்கைக்கான அத்தனையும் பெற்றுக்கொண்டு கோவில்களில் பூசை செய்யும் பார்ப்பனர்கள் பக்தர் இல்லை என்று ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. மேலும் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் வழிபாட்டுத் தலத்தில் ஜாக்கியும் பணம் பெற்றுக் கொண்டு தான் எல்லாவற்றையும் செய்கிறார் பக்தி குறித்து பேச பக்தர்கள் குறித்துப் பேச அந்த ஜக்கிக்கு எந்த தகுதியும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *