ஒரு நாளின் வெப்பநிலையை அறிவியல் பூர்வமாக பதிவு செய்வது என்பது கடந்த 140 வருடங்களாகத்தான் பதியப்பட்டு வருகிறது. இந்த வருடங்களில் 1951-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை உள்ள 30 வருடங்களை அடிப்படை வருடங்களாக கணக்கிலெடுத்து அந்த காலக்கட்டத்தில் நிலப்பகுதியில் நிலவிய சராசரி வெப்பநிலை 14 டிகிரி செஸ்சியஸ் (57F பாரன்ஹீட்) அளவாக கணக்கிலெடுத்து, இந்த வெப்பநிலையே அடிப்படை வெப்பநிலையின் அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்த அடிப்படை வெப்பநிலையிலிருந்தே ஒவ்வொரு ஆண்டின் சராசரி வெப்பநிலை எவ்வாறு உயர்ந்திருக்கிறது அல்லது வீழ்ந்திருக்கிறது என்பதைக் கணக்கிடுகிறார்கள்.
மேற்சொன்ன அடிப்படை வெப்பநிலையிலிருந்து 1.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உயர்வுக்குள் இந்த பூவுலகின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே தற்போது சர்வதேச நாடுகளின் தலையாய பணியாக இருக்கிறது. அப்படி கட்டுப்படுத்தபடவில்லை எனில் ” மனித உடலியலில் ” மிகக் கடுமையான ஆபத்துகள் ஏற்படும் என எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு.
பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் மக்களுக்கு வரும் ஆபத்து
தற்போது இந்த பூவுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல்வேறு மாற்றங்கள் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்துகிறது. இந்த மாற்றங்கள் சூழலுக்கு தகுந்தவாறு வெப்பமயமாதல் அல்லது காற்றில் ஈரப்பதத்தையும் உயர்த்துகிறது. இந்த மாற்றங்கள் விரைவாக நிகழும்பட்சத்தில் பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கக்கூடிய நாடுகளில் வசிக்கும் மக்கள் அழிவை நோக்கி தள்ளப்படுவார்கள் என்கிறது கடந்த வாரம் வெளியான ஆய்வு முடிவு.

வெப்பநிலை ஏற்படுத்தும் தன்னிச்சை மாற்றம்
ஏரியிலோ, குளத்திலோ காலையில் குளிர குளிர குளித்துவிட்டு கரையேறும்போது உடல் நடுங்குவதை உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது கடும் வெயிலில் அலைந்துவிட்டு வீட்டிற்கு வந்து மேல்சட்டையைக் கழற்றிவிட்டு மின்விசிறியின் கீழ் நிற்கும்போது வியர்வையில் நனைந்த உடல் குளிர்வதை உணர்ந்திருக்கிறீர்களா?
நம்மில் பெரும்பாலானோர் இந்த மாற்றத்தை உணர்ந்திருக்க முடியும். இது நம் உடலானது தன்னைத்தானே வெப்பமாக்க அல்லது குளிர்விக்க செய்யும் ஒரு தனிச்சையான செயல்.
உடலானது வெளியேற்றும் வியர்வையானது உடலை குளிர்விக்கும் ஒரு முயற்சியே. உடலின் இந்த மாற்றத்திற்கு காற்றில் நிலவும் ஈரப்பதமும் மிக முக்கியம். ஒவ்வொரு இடத்தின் இந்த மாற்றத்தை அறிய குளிர் விளக்கு அல்லது குளிர் குமிழ் வெப்பநிலை (Wet Bulb temperature) என்ற வெப்பநிலையால் அளக்கப்படுகிறது. அது என்ன குளிர் விளக்கு வெப்பநிலை?
குளிர் விளக்கு வெப்பநிலை
ஒரு இடத்தின் வெப்பநிலையை நாம் வெப்பமானியால் அளக்கிறோம். வெப்பநிலைமானியின் கீழிருக்கும் சிறிய குமிழ் போன்ற அமைப்பிற்கு ‘பல்ப்’ (Bulb) என்று பெயர். ஒரு இடத்தின் வெப்பத்தை முதலில் வெப்பமானியால் அளக்கிறோம். இது அந்த இடத்தின் வெப்பநிலையை குறிக்கும். பின்னர் வெப்பமானியின் குமிழை ஒரு ஈரமான துணியால் மூடி வெப்பமானியை அந்த இடத்தில் காற்று வெப்பமானியின் மீது வீசும்படி வைக்கவேண்டும். தற்போது வெப்பமானியின் மீது படும் காற்று வெப்பமானியை உலரவைக்கும் அந்த நேரத்தில் வெப்பமானியில் மாறுபாடு ஏற்படும். இந்த மாறுபாடு அந்த இடத்தின் உலர் விளக்கு வெப்பநிலை அல்லது உலர் குமிழ் வெப்பநிலை எனப்படும்.

இந்த வெப்பநிலை மனித உயிர்வாழ்தலுக்கு மிக முக்கியம். ஒரு இடத்தின் வெப்பநிலை எந்த அளவில் வீழும்போது/ உயரும்போது அந்த இடத்தில் குளிர அல்லது வெப்பமயமாக இயலும் என்பதை இந்த குளிர் விளக்கு/ உலர் விளக்கு வெப்பநிலை மிக அவசியமானது.
உடலியலில் ஏற்படும் சிக்கலான சூழ்நிலை
நம் மனித உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் தன்னிச்சை செயலானது சுற்றி நிலவும் வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதத்தை சார்ந்தே இருக்கிறது. உடலின் மைய வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸ் (98.6 F பாரன்ஹீட்) அளவிற்கு நிலையானதாக இருந்தால்தான் உடலானது தன்னை குளிர்விக்க உடலின் வெப்பத்தை வெளியேற்றும். ஆனால் சுற்றுப்புறத்தில் குளிர் குமிழ் (Wet Bulb Temperature) 35 டிகிரி அளவில் உயர்ந்தால் உடலானது தன்னை குளிர்விக்க செய்யும் செயலில் குழப்பங்கள் ஏற்படலாம். இது மனித உடலியலில் மிகச் சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
உலகின் வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்
கடந்த வாரம் அறிவியல் ஆய்விதழான நேச்சரில் (Nature Geoscience) வெளியிடப்பட்ட இந்த புதிய ஆய்வுக்கு தலைமை தாங்கிய பிரின்ஸ்டன் பல்கலைக்கழக (Princeton University) ஆராய்ச்சியாளர் யி ஜாங் (Yi Zhang) இந்த விடயத்தைப் பற்றி ” சுற்றுப்புற சூழல் மிகவும் ஈரப்பதமாக இருந்தால் வியர்வையை ஆவியாக்குவதன் மூலம் நம் உடல் குளிர்ச்சியடைய முடியாது. இதனால்தான் வெப்பமான இடத்தில் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளும்போது அங்கு காற்றில் நிலவும் ஈரப்பதம் முக்கியமானது. நிகழவிருக்கும் ஆபத்தான அதிக உடல் மைய வெப்பநிலையை பற்றி சொல்வதானால், அது ஆபத்தானது என்று வெறுமனே கூறிவிட முடியாது, உண்மையில் அது மிக மிக ஆபத்தானது.” என்கிறார்.
புவி தொடர்ந்து வெப்பமடைந்தால் குளிர் குமிழ் வெப்பநிலையானது எவ்வாறு அதன் உச்சத்தை அடையும் என்பதை தீர்மானிக்க இந்த ஆய்வுக் குழு பல்வேறு வரலாற்றுத் தரவுகள் மற்றும் உருவகப்படுத்துதல்களை சோதித்து பார்த்தது.
முடிவில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள வெப்ப மண்டலங்களில் இந்த உச்ச நிலைகள் வெப்ப மண்டல சராசரி வெப்பநிலையின் உயர்வுக்கு ஏற்ப அதே விகிதத்தில் அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிந்தது. இதன் பொருள் குளிர் குமிழ் வெப்பநிலையில் 35 டிகிரி செல்சியசைத் தாண்டி உயரும்போது வெப்பமண்டலங்களில் நிகழப்போகும் இந்த அபாயத்தை தவிர்ப்பதற்கு உலகின் வெப்பநிலை அதிகரிப்பானது கண்டிப்பாக 1.5 டிகிரி ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்ப மண்டலங்களில் நிகழப்போகும் இந்த ஆபத்தான நிலைமைகள் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு உயர்வதற்கு முன்பே வெளிப்படும் என்று தெரியவருகிறது. இருப்பினும், 1 டிகிரி செல்சியஸ் அளவிற்கான குளிர் குமிழ் வெப்பநிலை அதிகரிப்பு என்பது “பல டிகிரி வெப்பநிலை அதிகரிப்புக்கு சமமான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்று எச்சரிக்கிறது ஆய்வு.
ஏற்கனவே 1.1 டிகிரி அதிகரித்த வெப்பநிலை
மனித செயல்பாடு காரணமாக உலகம் ஏற்கனவே சராசரியாக 1.1 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு வெப்பமடைந்துள்ளது. முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் புவியின் வெப்பநிலையை 1.5C டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலைக்குள் கட்டுப்படுத்தி வைக்கலாம் என்று சர்வதேச அரசாங்கங்கள் உறுதியளித்த போதிலும் விஞ்ஞானிகள் இந்த வரம்பானது வரப்போகும் பத்தாண்டுகளில் மீறலாம் என்று எச்சரித்துள்ளனர்.
மனித குலத்தின் எண்ணிக்கையில் ஏற்படுத்தும் தாக்கம்
இது மனிதகுலத்தின் பெரும் எண்ணிக்கையில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும். ஏனெனில் உலக மக்கள் தொகையில் சுமார் 40% சதவிகிதம் தற்போது வெப்பமண்டல நாடுகளில் வாழ்கின்றனர். இந்த விகிதம் 2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் பாதியாக மாறும் வகையில் அமைந்துள்ளது. பிரின்ஸ்டன் ஆராய்ச்சி 20 டிகிரி வடக்கே காணப்படும் அட்ச ரேகைகளை மையமாகக் கொண்டிருந்தது, இந்த அட்சரேகை மெக்ஸிகோ, லிபியா மற்றும் இந்தியா வழியாக தெற்கே 20 டிகிரி வரை செல்கிறது. மேலும் பிரேசில், மடகாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதிகளையும் கடந்து செல்கிறது.
போயஸ் மாநில பல்கலைக்கழகத்தின் (Boise State University) காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வு நிபுணரான மொஜ்தாபா சாடெக் (Mojtaba Sadegh), இந்த உயரும் வெப்பநிலையில் “கணிசமான உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் இல்லாத நிலையில் வெப்ப மண்டலத்தின் பல பகுதிகளை மனிதர்கள் வசிக்க முடியாததாக மாற்றும்” என்கிறார்.
மேலும் “இந்த வரம்பு மீறப்பட்டால், மனித உயிர் வாழ்வதற்கு குளிர்பதனம் செய்யப்பட்ட தங்குமிடம் போன்ற உள்கட்டமைப்பு முற்றிலும் அவசியம்” என்று கூறினார். பாதிப்புக்குள்ளாகும் பகுதியின் பெரும்பகுதி குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைக் கொண்டிருப்பதால், தேவையான உள்கட்டமைப்பை வழங்குவது சவாலானதாக இருக்கும்.
சீனா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளுக்கும் ஏற்படும் ஆபத்து
இந்த ஆய்வின் கோட்பாட்டளவில் எந்தவொரு மனிதனும் 35 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு மேல் குளிர் குமிழ் சென்றால் அவர்களால் அந்த வெப்பநிலையைப் பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும் உடலின் மைய வெப்பநிலையை தக்கவைக்க அவர்கள் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் இந்த அபாயம் தவிர்க்க முடியாததாக மாறக்கூடும் என்பதும் தெரியவருகிறது. வெப்பத்தால் ஏற்படும் கடுமையான ஆபத்துகள் குறித்த சமீபத்திய அறிவியல் எச்சரிக்கை மட்டுமே இந்த ஆய்வு. தீவிர வெப்ப அலைகள் மத்திய கிழக்கின் சில பகுதிகளை மனித வாழ்வியலின் சகிப்புத்தன்மைக்கு அப்பால் தள்ளக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிகரித்து வரும் வெப்பநிலை சீனா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளுக்கும் பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்படுகிறது.
வெப்பம் மற்றும் ஈரப்பதம் தொடர்பான காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் 1979ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுவரை இரட்டிப்பாகியிருக்கிறது. மேலும் வரவிருக்கும் அடுத்து பத்தாண்டுகளில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த கடும் வெப்பநிலையை கடப்பது என்பது கடும் அவர்களின் வாழ்வு விளிம்பிற்கு தள்ளக்கூடும் எனவும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது. வரப்போகும் நாட்களில் வெப்பமயமாவதை தடுக்கக்கூடிய நடவடிக்கை என்பது நம் அனைவரின் கடமை இல்லாவிடில் அனைவரும் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது.