ஜக்கி வாசுதேவ்

கோவில்களில் இருந்து அரசை வெளியேறச் சொல்வது கோவில் சொத்துகளை கொள்ளையடிக்கவே; ஜக்கியின் சூழ்ச்சியை அறிவோம்

ஆலயங்களில்  இருந்து அரசே வெளியேறு என்று சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் குரல்கள் சில தற்போது கேட்கத் துவங்கி இருக்கிறது. பழங்குடிகளுக்கும் யானைகளுக்கும் சொந்தமான வெள்ளையங்கிரி மலையை ஆக்கிரமித்த குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ஜக்கி வாசுதேவ் என்கிற கார்ப்பரேட் சாமியார் நேற்று இதனை பேசியிருக்கிறார்.

மன்னர் அரசுகள் வீழ்ந்து வெள்ளையர் ஆட்சி நடக்கும் போது கோவில் நிர்வாகத்தில் கோலோச்சியவர்கள் பெரும் வருமானம் வரும் கோவில்களை மட்டும் நிர்வகித்துக் கொண்டிருந்தனர். மேலும்  பல கோவில்களின் சொத்துகள் ஊழல்கள், முறைகேடுகள் மூலம் சீரழிக்கப்பட்ட பின் கைவிடப்பட்டன. அப்படி கைவிடப்பட்ட கோவில்களையும் நிர்வாக சீர்கேடுகள் நடக்கும் கோவில்களையும் அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமும் பக்தர்களிடமும் எழுந்தது. 

இந்து சமய அறநிலையத்துறை வரலாறு

1926-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் மெட்ராஸ் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் II/1927 இயற்றப்பட்டு, இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. நிர்வாகம் சரியாக இல்லாத கோவில்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை இந்த சட்டம் அரசுக்கு வழங்கியது. 

ஆனால் இந்த சட்டத்திற்கு உயர்சாதி பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு மதத்தில் தலையிடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சுதேசமித்திரன் போன்ற பத்திரிக்கைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலையங்கம் எழுதின. காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தங்கள் அதிகாரவர்க்க உறவுகள் மூலமாக இதனை தடுக்க முயற்சியும் நடைபெற்றது.

இதையடுத்து அப்போதைய வைசிராயாக இருந்த இர்வினுடன் முதலமைச்சர் பனகல் அரசர் விளக்கம் அளித்து இந்த சட்டத்திற்கு ஒப்புதலைப் பெற்றார்.

சுதந்திரத்திற்கு பிறகு மேம்படுத்தப்பட்ட சட்டம்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த சட்டம் மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து 1951-ல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் இயற்றப்பட்டது. முதன்முதலாக கீழிருந்து மேலாக அதிகாரங்கள் இந்த சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிகளின் நிர்வாக எல்லைகள் வரையறுக்கப்பட்டன. 

பரம்பரை அறங்காவலர் முறை பி 63 பிரிவின்கீழ் அங்கீகரிக்கப்பட்டது. பணியாளர்களுக்கு பரம்பரை உரிமை இல்லை. ஆனாலும் இந்த சட்டத்தில் அறங்காவலர்களை கேள்வி கேட்கும் உரிமை அதிகாரிகளிடம் முழுமையாக இல்லை.

காமராசர் ஆட்சியில் இயற்றப்பட்ட தமிழ்நாடு அறநிலையத் துறை சட்டம்

பெரியார் பெருந்தொண்டர் பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் 1959-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சட்டம் இயற்றப்பட்டது.  இதன்படி கோவில்களையும் சமய நிறுவனங்களையும் நிர்வகிக்க புதிய அரசுத்துறை உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி இந்து அறநிலையத்துறை ஆணையர் தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு கோவிலின் துணை உதவி ஆணையர்களையோ, செயல் அலுவலர்களையோ பரம்பரை அறங்காவலர்களையோ அழைத்து கணக்கு வழக்குகளை கேட்க முடியும். 

கோவில்களுக்கு, மத நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்தை ஐந்து வருடங்களுக்கு மேல் குத்தகைக்கு விடவும், விற்கவும் ஆணையரின் அனுமதி அறங்காவலர் தேவை என்றும் சட்டம் இயற்றப்பட்டது.   

இந்துக்கள் கோவிலை இந்துக்கள் நிர்வகிக்கக் கூடாதா?

இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களும், கிறித்தவ வழிபாட்டு தலங்களின் சொத்துக்களை கிறித்தவர்களும் நிர்வகிக்கும் போது இந்து வழிபாட்டுத் தலங்களில் சொத்துகளை மட்டும் அரசு நிர்வகிப்பது ஏன் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

நாம் மேலோட்டமாக பார்க்கிற பொழுது இது மிகவும் சரியான கேள்வியாகவே தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. இந்து வழிபாட்டுத் தலங்களில் சொத்துக்களை அரசு நிர்வகிக்கிறது என்று சொல்வதே தவறு. அரசு அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் கண்காணிக்க மட்டுமே செய்கிறது என்றுதான் சொல்ல முடியும்.  

இந்து சமய அறநிலையத் துறையைப் பொறுத்தவரை அமைச்சர் முதல் ஆணையர் முதல் கூட்டுபவர் வரை அனைவரும் இந்துக்களே. விதி 10 ஆணையர் முதலானோர் இந்துக்களாக இருத்தல் வேண்டும் என்பது. 

ஆணையர் மற்றும் இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையர் என ஒவ்வொருவரும் இந்து சமயத்தைப் பின்பற்றி வருகின்ற நபராகவே இருத்தல் வேண்டும். மேலும் இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பிற அலுவலர் அல்லது பணியாளர் ஒவ்வொருவரும் இந்து சமயத்தைப் பின்பற்றி வருகின்ற நபர் ஒருவராகவே இருத்தல் வேண்டும். அவர் அந்த சமயத்தை பின்பற்றாது போகும்போது அத்தகையவர் பதவி விலக வேண்டும் என்றே சட்டம் கூறுகிறது. 

அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்கள்

  • தமிழகத்தில் உள்ள 17 சமணக் கோயில்கள், 1910 அறக்கட்டளைகள், 56 திருமடங்கள், மடங்களுடன் இணைந்த 57 கோயில்கள் உட்பட 38,635 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
  • இவற்றில் 331 கோயில்களில் ஆண்டுக்கு ரூ 10 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது. 
  • ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ள கோயில்கள் ஆறுபடை வீடுகள், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவரங்கம் கோவில் உள்ளிட்டவை மட்டுமே ஆகும்.
  • 672 கோயில்களில் ரூ 2 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரையும், 3550 கோவில்களில் ரூ.10,000 முதல் ரூ. 2 லட்சம் வரையும் ஆண்டு வருவாய் உள்ளது. 
  • 34,082 கோவில்களில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாகவே வருவாய் கிடைப்பதாக 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு தெரிவிக்கிறது. 

வருமானம் இல்லாத இந்த 34,082 கோவிகளுக்கான திருப்பணிகளும் திருவிழாக்களும் குடமுழுக்கு உள்ளிட்ட பணிகளும் மேலே அதிக வருமானம் வரும் சிறு கோவில்களில் இருந்துதான் செலவு செய்ய முடியும். ஆனால் பொய் பரப்புரையில் ஈடுபடுபவர்கள் இந்த தகவலை எல்லாம் மறைத்து விடுவார்கள்.

கோவில்களின் சொத்துக்களை குறிவைக்கும் கூட்டம்

அதேபோல கோயில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 252 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 22600 கட்டிடங்கள், 33665 வீட்டு மனைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மீதம் உள்ள விவசாய நிலங்கள் 1,23,729 விவசாயிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 

ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் கண்ணை உறுத்துவது  

4,78,252 ஏக்கர் நிலங்கள் தான். காட்டை அழித்துவிட்டு காவேரி கூக்குரல் என்று பேசியது போல, இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேறினால் பக்தியின் பெயரில் இந்த இடங்களை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள். 

கோவில் நிலத்தில் குத்தகை விவசாயம் செய்பவர்கள் கிட்டத்தட்ட 99 சதவீதம் இந்துக்கள் தான். 

ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் இஸ்லாமியர் கடைகளை மையப்படுத்தி வெறுப்பு பிரச்சாரத்தை செய்கிறார்கள். இதன்வழியாக பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 1,23,729 இந்து விவசாயிகள் விவசாயம் செய்யும் நிலங்களை ஒரு சில கார்ப்பரேட் சாமியார்களின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள்.

கோவில் சொத்துகளின் மூலம் கிடைத்த 838 கோடி வருவாய்

இந்த சொத்துகள் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் ரூபாய் 838 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கோயில்களுக்கு சொந்தமான 2359 குளங்கள், 989 மரத்தேர்கள், 57 தங்க ரதங்கள், 45 வெள்ளி ரதங்கள் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா மாற்றம் செய்யப்பட்ட 5650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை 789 கோவில்களுக்கு சொந்தமானவை. மீட்கப்பட்ட நிலங்கள் அந்தந்த கோவில்களின் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த பெரும்பணியை செய்தது அறநிலையத்துறை தான். 

சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது குறைத்து காட்டப்பட்ட வருமானம்

கோவில்கள் தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது கிடைக்கும் வருமானத்தை விட அரசு கட்டுபாட்டில் இருக்கும்போதுதான் அதிக வருமானம் வந்திருக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சிதம்பரம் கோவில். 

1987-ல் எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்தபோது, சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5-8-1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இதனை தீட்சிதர்கள் ஏற்கவில்லை. தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்று இந்த அரசாணையை நீக்கச் செய்தனர். இதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியின்போது 2008 பிப்ரவரியில் இந்தக் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தியது.

இதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் இதன் உலகுக்கு தெரியவந்தது என்னவென்றால் ஆண்டுக்கு 37199 ரூபாய் மட்டுமே வருமானம் என்றும், அதில் 37000 செலவு என்றும், 199 ரூபாய் மட்டுமே ஆண்டுக்கு மீதம் என்றும் தீட்சிதர்கள் கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் அரசு கட்டுப்பாட்டில் இருந்த 15 மாதத்திற்கு வருமானம் 25,12,485 ரூபாய் என்று அறநிலையத்துறை கணக்கு காட்டியது. 

அப்படி என்றால் பொய் கணக்கு எழுதி கோவில் சொத்தைக் கொள்ளையடிப்பது பார்பனர்களா, அறநிலையத்துறையா என்று கேள்வி எழுவது இயல்புதான். அதற்கு நேர்மையான பதிலை அடைவதும் எளியது.  இன்று வரை சிதம்பரம் கோவில் நகைகளுக்கு கணக்கு கிடையாது. 

ஆலயங்களை விட்டு அரசே வெளியேறு என்பது இந்த கொள்ளை கும்பல் ஆக்கிரமிக்கத் தான். 

கோவில் சொத்துகளையும், சிலைகளையும், நகைகளையும் பாதுகாக்க அறநிலையத் துறை அவசியம்

கோயில் நிர்வாகத்துடன் இவ்வளவு சொத்துகளையும் நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத் துறையில் ஆணையர் தலைமையில் கூடுதல் இணை/துணை/உதவி ஆணையர்கள், ஆய்வர்கள், செயல் அலுவலர்கள் என 628 அதிகாரிகள் உள்ளனர். பல்லாயிரம் ஊழியர்களும் பல ஆயிரம்  பணியாளரும் இருக்கிறார்கள்.

அறநிலையத்துறை என்ற தனி நிர்வாக அமைப்பு இல்லாவிட்டால் கோயில் சொத்துகளும், விலைமதிப்பற்ற சிலைகளும் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும். தொன்மை வாய்ந்த பல கோயில்கள் அழிந்திருக்கக் கூடும். ஆக்கிரமிக்கப்பட்ட பல கோவில் சொத்துக்களை மீட்பதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் களைய வேண்டுமே தவிர அறநிலையத்துறைக்கு மாற்றாக வேறு வழியை யோசிப்பது அழிவுக்கு வழிவகுக்கும்.

ஆங்கிலேயர் ஆட்சியில் உயர்சாதியினரால் கொள்ளையடிக்கப்பட்ட கோவில் சொத்துகள்

மேலும் பெருங்கோவில்கள் தோன்றிய காலத்திலிருந்தே அரசின் கட்டுப்பாட்டில் ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டேதான் இருந்திருக்கின்றன. மன்னர்கள் கோயில்களைக் கட்டி இயங்குவதற்கான இறையிலி நிலங்களைக் கொடுத்திருக்கிறார்கள். சொத்துக்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளை செலுத்தியே வந்திருக்கிறார்கள். 

இதில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் வந்த பிறகு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சியில் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் தலையிடாமல் இங்கிருந்த உயர்சாதியினரோடு இணக்கமாகச் சென்ற காலகட்டத்தில்தான் கோவில் சொத்துக்கள் கணக்கு வழக்கில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்த பிறகுதான் இந்து சமய அறநிலையத்துறை சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

ஆகவே அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற பிரச்சாரம் என்பது அங்கு இருக்கும் அரசு அதிகாரிகளை வெளியேற்றிவிட்டு, ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்துவிட்டு நகரங்களை நோக்கி நகர்ந்ததைப் போல கொள்ளையடிப்பதற்காகவே அல்லாமல் வேறு எதுவும் இல்லை.

உதவிய நூல்: யார் கையில் இந்து ஆலயங்கள் – எஸ்.ஜி.ரமேஷ் பாபு 

One Reply to “கோவில்களில் இருந்து அரசை வெளியேறச் சொல்வது கோவில் சொத்துகளை கொள்ளையடிக்கவே; ஜக்கியின் சூழ்ச்சியை அறிவோம்”

  1. ஜக்கி ஒரு கொலைகாரர். அவர் தனது மனைவியை கொலை ெசெய்து விட்டதாக புகார் உள்ளது. அவர் ஒரு white collar thug , வெள்ளிங்கிரி மலையை அபகரித்த அயோக்கிய சிகாமணி, பல நூறு இளைஞர்களை (ஆண் பெண் ) வசியம் செய்து அவர்கள் வாழ்க்கைையை பாழாக்கிய தறுதலை. ஒரு போலி கார்ப்பேரேட்டு சாமியார். அந்த ஆளுக்கு இவ்வளவு பணம் உழைத்து வந்ததா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *