யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத்தூணை சிங்கள- பெளத்த பேரினவாத அரசு தகர்த்திருக்கிறது. இரவோடு இரவாக பல்கலைக்கழக வளாக விளக்குகளை அணைத்துவிட்டு, சிங்கள ராணுவத்தின் மூலம் இதனைச் செய்திருக்கிறது சிங்கள அரசு. இது பெரும் பரபரப்பினை உருவாக்கியிருக்கிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் அமைக்கபட்ட நினைவுத் தூண்
2009-ம் ஆண்டு தமிழீழத்தில், சிங்கள- பெளத்த பேரினாவாத அரசினால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கையின் கொடூரத்தை வெளிப்படுத்தும் அடையாளமாக முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 2009-ம் ஆண்டு மே 17,18,19 நாட்களில் நிகழ்த்தப்பட்ட படுகொலை நடவடிக்கைகள் உள்ளது. இத்தகைய தமிழினப்படுகொலையை நினைவுகூறும் விதமாக உலகத் தமிழர்களால் ஆண்டு தோறும் மே மாதம் தமிழினப்படுகொலை நினைவுகூறப்பட்டு தமிழினப்படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
2018-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான நினைவுத்தூண் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக மே மாத தமிழினப்படுகொலை நாளன்று தமிழர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் முற்றத்தில் கூடி முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் இங்கு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான நினைவஞ்சலி அனுசரிக்கப்படக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக அதனை இடித்து தகர்த்திருக்கிறது சிங்கள அரசு.
வேடிக்கை பார்க்கும் சர்வதேச சமூகம்
தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் சிங்கள – பெளத்த பேரினவாத அரசால் இன அழிப்பு நோக்கத்தில் தகர்க்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழித்து அங்கு சிங்கள- பெளத்த பண்பாட்டு அடையாளங்கள் நிறுவப்பட்டு வருகிறது. தமிழீழ இனப்படுகொலையை வேடிக்கை பார்த்த சர்வதேச சமூகம், 2009-க்குப் பிறகும் தொடரும் சிங்கள- பெளத்த பேரினாவத அரசின் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பையும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.
2009-ம் ஆண்டின் தமிழின அழிப்பிற்கான நீதி என்பது அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளின் அரசியல் உள்நோக்கங்களுக்கான பகடைக் காயாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் தனக்கு சாதகமான ஆட்சி மாற்றத்திற்காக சர்வதேச விசாரணை, கலப்பு விசாரணை, உள்நாட்டு விசாரனை என வாய் பந்தலிட்டது அமெரிக்கா. ஆனால் எவ்விதமான விசாரணையையும் ஏற்காத சிங்கள அரசு, விசாரணை அதிகாரிகளையும் இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்து வருகிறது.
மறுக்கப்படும் தமிழர்களின் நிகர்நிலை அரசு
2002-ல் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் போது சர்வதேச சமூகம், தமிழர் தரப்பு பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளை அங்கீகரித்து, இலங்கைத் தீவினுக்குள் தனித்த எல்லையுடைய தமிழீழ நிகர்நிலை அரசையும் (defacto state) ஏற்றுக் கொண்டது. 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட பிறகு, தமிழீழ நிகர்நிலை அரசையும் சர்வதேசம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
தமிழினப்படுகொலையை முன்னின்று நடத்திய ராஜபக்ஷே சகோதரர்கள், பெரும்பான்மை பலத்தோடு தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். சர்வதேசம் முன் வைத்ததை ஏற்காதது மட்டுமன்றி, தமிழர்களுக்கான தீர்வாக முன்னர் ஏற்றுக் கொண்ட விடயங்களையும் தற்போது ஏற்க மறுத்து வருகிறது ராஜபக்ஷே சகோதரர்களின் தலைமையிலான சிங்கள அரசு.
13-வது சட்டத் திருத்தம் எனும் மாயை
சுய நிர்ணய உரிமை கேட்டு போராடி வந்த தமிழர்களுக்கு, 1987-ம் ஆண்டைய இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 13-வது சட்டத்திருத்தத்தின் படி ஏற்றுக் கொண்ட, ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான மாகாண தீர்வுத் திட்டத்தையும் தற்போது சிங்கள அரசு நீக்கவிருக்கிறது.
இந்நிலையில் அரசு முறை பயணமாக இந்த மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை இலங்கைக்குச் சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசமைப்புக்கு உட்பட்டே தமிழர்களுக்கான தீர்வை முன்வைத்து பேசியிருக்கிறார். அவரது பயணத்திற்குப் பிறகான அடுத்த சில மணி நேரங்களிலே, தனது இனவாத சண்டித்தனைத்தை நடத்திக் காட்டியிருக்கிறது சிங்கள அரசு.
இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு எவ்விதமான நீதியும் பெற்றுத்தராத சர்வதேச சமூகத்தின் கண்முன்னே, பேரினவாதத் திமிருடன் சிங்கள- பெளத்த அரசு தனது தமிழன அழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழீழத்தில் முழு அடைப்பு
வரும் திங்கள்கிழமை தமிழீழத்தின் தமிழ் கட்சிகள் முழுஅடைப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கட்சி, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை அறிவித்துள்ளன.
தமிழகத்தில் இலங்கை தூதரகம் முற்றுகை
தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தினை முற்றுகையிடும் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இந்த போராட்டத்திற்கு திராவிடர் கழகமும் ஆதரவளிப்பதாக அதன் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எழுப்பும் கண்டனக் குரல்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு நாட்களில் இந்த சம்பவம் நடந்திருப்பது இந்தியாவை இலங்கை அரசு பொருட்படுத்தவே இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது என்றும், இடிக்கப்பட்ட நினைவுத் தூணை மீண்டும் நிறுவ வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நினைவுத் தூண் இடிப்பு சம்பவமானது இனப்படுகொலையின் தொடர்ச்சியே என்றும், ஒற்றை இலங்கைக்குள் சிங்களவர்களோடு இணைந்து தமிழர்கள் வாழ்கிற வரை, சிங்கள ஆட்சியாளர்களுக்கு கீழ் இருக்கிற வரை எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்தின் தோல்வியால் தமிழீழத்தில் இனப்படுகொலை தொடர்வதாகவும், இனப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கு இந்தியா மற்றும் மேற்குலகம் மீது தமிழர்கள் வைத்த நம்பிக்கையே இனப்படுகொலை இன்றும் தொடர்வதற்கு காரணமாயிற்று என்றும், புலம்பெயர் தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட முன்வருவதன் மூலம் சர்வதேசத்தின் தோல்வியை உலகிற்கு உணர்த்துவதோடு, தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கு சர்வதேச சமூகத்தை நிர்பந்திக்க முடியும் என்றும் மே பதினேழு இயக்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கள பெளத்த பேரினவாதத்திலிருந்து நீக்கம் பெற்ற சுயநிர்ணய உரிமையைக் கோரும் தமிழர்களின் நியாயமான கோரிக்கை சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத வரையில் தமிழின அழிப்பை இலங்கை அரசு தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
முகப்புப் படம்: இனப்படுகொலை நினைவுத் தூண் இடிப்பைக் கண்டித்து இலங்கை ராணுவத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்