இந்தியாவின் வரலாற்றை 12,000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி திரும்ப எழுதுவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சாரக் குழுவின் ஆராய்ச்சி என்பது வரலாற்றை நேர்மையாக வெளிப்படுத்த இயலுமா, இந்திய வரலாறு என்பது இதுவரையில் எவ்வாறு எழுதப்பட்டது என்ற கேள்வியுடன் ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்களை அணுகினோம். காலனிய காலத்தில் இந்திய வரலாற்றினை வைதீக மரபினையும், வட இந்தியப் பிரதேசத்தினையும் மட்டுமே மையப்படுத்திய எழுதப்பட்டதன் சிக்கல் என்ன என்ற கேள்வியினை அவரிடம் கேட்டோம். காலனியச் சூழலில் இந்தியாவின் கதை எவ்வாறு கையாளப்பட்டது என்பதையும், ஆதிக்க மரபினை தமிழ்நாடு எவ்வாறு எதிர்கொண்டது என்பதையும் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்களோடு தொகுத்து விரிவான பதிலினை அளித்திருந்தார்.
பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர். கல்விப் புலத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர். தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும் (தொல்காப்பிய-திருக்குறள் உரையியல் ஆய்வுகள்), திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல், புதுமைப் பித்தமும் பிரேமிள் சித்தமும், கருமை செம்மை வெண்மையைக் கடந்து (பதிப்பியல் இறையியல் மெய்யியல் ஆய்வுகள்) உள்ளிட்ட பல ஆய்வு நூல்களை அவர் எழுதியுள்ளார். எப்போதும் தனது வாதங்களில் வரலாற்று ஆய்வு நூல்களின் மேற்கோள்களைப் பயன்படுத்தி ஒரு முக்கியத் தொகுப்பினை வழங்கும் திறன் கொண்டவர். இங்கும் அவரது அதே பாணியிலே தனது பதிலை அளித்திருக்கிறார்.
திரிக்கப்பட்ட திரிபுவரலாறுகளும் திருத்தி எழுதப்படவேண்டிய புதிய வரலாறுகளும்
இந்தியாவின் தலைமை அதிகாரமாக வேதமே வீற்றிருக்கின்றது. பண்டைய இந்தியாவில் கடவுளின் வகிபாகத்தை ஆற்றியது அதுதானே? இறை மறுப்பல்ல வேதமறுப்பே நாத்திகம் எனப்பட்டது. மநுநீதி தொடக்கமாய் காஞ்சிப் பெரியவரின் ‘தெய்வத்தின் குரல்’ வரைக்கும் இதுவே ஊடாடிக் கிடக்கும் வேதவாக்காம். “ஆன்மிக அதிகாரம் இல்லாமால் பார்ப்பனர்களால் உயிர்வாழவே முடியாது” என்பார் தொ.பரமசிவன் (‘செவ்வி’ 101).
ஆங்கிலேயர் காலத்தில் வடநூல்களை ஒழுங்குபடுத்திப் பதிப்பிக்க ஊக்குவித்த போது அறிவை ஒழுங்குபடுத்தும் முகமாக அங்கு அதிகாரம் செலுத்துபவர்கள் அச்செயலோடு கைகோத்ததைக் காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பிவக் கூற்றை முன்னிறுத்தி ஒழுங்குபடுத்தும் போது அதிகாரம் செலுத்துவது எளிதாவனை எடுத்துரைப்பார் தமிழவன்.
“அகில உலக அளவிலும் இந்திய அளவிலும் இன்று தமிழ்ப் பிராமணர்களே தமிழை அறிமுகப்படுத்தும் நிலையில் உள்ளனர்.”
“அனைத்துலக உயர்பதவிகளில் இருக்கும் தமிழ்ப்பிராமணர்கள் தமிழோடு காட்டும் உறவைப் பிற சாதி சாதிகளைச் சார்ந்த தமிழர்கள் காட்டுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஈழத்தமிழர்களும், மலேசியத் தமிழர்களும். தமிழகம் மட்டுமே பிராமணர்களுக்குக் கொடுக்கும் வெளிச்சத்தைப் பிறருக்குக் கொடுப்பதில்லை.”
– தமிழவன் (‘தமிழவன் கட்டுரைகள்: 2-.ப.58, 587) தொடரும்.
காலனியச் சூழலில் இந்தியக் கதை
தமதாட்சி நிர்வாகத்திற்கு அடித்தளமாக இந்தியப் பண்பாட்டை விளங்கிக் கொண்டாக வேண்டிய தேவையின் நிர்பந்தத்தால் கீழைத்தேய மொழி பண்பாட்டாய்வுகள் ஐரோப்பியர்களால் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக 1784-ல் கல்கத்தாவில் ஆசியவியல் கழகமும் அதனைத் தொடர்ந்து பிரித்தானியர் பயிற்சி பெறுவதற்கான கல்லூரியும் உருவாக்கப்பட்டன.
“காலனிய நவீனயுகச் சூழல்களில் தான் இங்கு இந்து என்ற பெரும்பான்மை அடையாளம் கட்டமைக்கப்பட்டது. சமஸ்கிருத – இந்தோ ஐரோப்பிய மொழிகளின் பூர்வாங்கத்தொடர்பு எனும் கருத்தாக்கம் கட்டமைக்கப்பட்டதும் காலனிய நவீனயுகச் சூழலில்தான். சமஸ்கிருத சாதிகள் காலனிய அரசின் முன்னோடி அதிகாரவர்க்கமாக உருவானதும் காலனியச் சூழலில் தான். சாதியமும் அரசஅதிகாரமும் காலனியமும் இணைந்தே இங்கே அதிகாரக் கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொண்டன.”
“மேட்டுக்குடியினர் தமது ஆதிக்கத்தைத் தொடரும் நோக்குடன் பிரிட்டிஷாருடன் தமது உறவுகளை அமைத்துக் கொண்டனர். அடித்தள மக்களோ தமது சமூகவிடுதலையை முன்னிலைப்படுத்தி பிரிட்டிஷாருடன் உறவுகொண்டனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோ இரண்டு தரப்பினரையும் தமது காலனிய நலன்களுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இதுதான் காலனியச் சூழலில் இந்தியக்கதை.” என்கிறார் ந.முத்துமோகன் (‘மார்க்சியக் கட்டுரைகள்’- ப.984)
காலனியாதிக்கம் இந்தியாவில் மேற்கொண்ட செயல்பாடுகளை ஆக்கப் பூர்வமானதாகவும், அழிவுப் பூர்வமானதாகவும் இருநிலைகளில் அணுகலாம் என்பார் காரல் மார்க்ஸ். இக்கணிப்பை முன்னிறுத்தித் தலித்துகளின் வாழ்வில் காலனியம் ஏற்படுத்திய வெகுமதிகளையும், காலனியச் சுரண்டலின் அழிமதிகளையும் விரிவாக எடுத்துரைப்பார் ந.இரத்தினக்குமார் (பின் காலனியம் சமூகம் – இலக்கியம் – அரசியல்’ முன்னுரையில்)
ஆதிக்க வேத மரபையும் அவைதிகக் குறள்நெறி மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை
தமிழக சனாதன வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் திருக்குறளின் வரலாறு தெரிந்திருக்க வேண்டுமென்பார் ராஜ்கௌதமன்.
ஆரிய மாயைக்கு எதிராக திராவிட மாயை என்பதைத் தூக்கிப்பிடிப்போர் அது காலனியக்கொடையே என்பர். ஏனவர்கள் ஆரிய மாயை என்றோ, இந்து மாயை எனப் பேச மறுக்கின்றனர்? அந்த தருக்கத்தை நீட்டித்தால் மூன்று மாயைகளுமே காலனியக் கொடைதாமன்றோ?
எவ்வாறு வடபால் வேதத்தின் தலைமையதிகாரத்தைக் தகவமைக்க, வேதநெறியைக் கட்டமைக்க கல்கத்தாவில் களம் அமைக்கப்பட்டதோ அவ்வாறே அத்தகு இந்தியவியலை எதிர்கொள்ள திராவிட இயலைத் தகவமைக்கத் தென்பால் குறள்நெறியைக் கட்டமைக்க சென்னையில் களம் அமைக்கப்பட்டது. இத்தகு இருவேறு செல்நெறிகளுக்கூடாகவே இத்தொடர்பில் இனங்காண வேண்டியுள்ளது.
வைதீக மரபு
1784-இல் கொல்கத்தாவில் ஆசியவியல் கழகம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1799-இல் உள்நாட்டு நீதிநெறிகளைத் தொகுக்குமுகமான நிர்ப்பந்தத்தால் மனுநீதி முதலாம் தர்மசாத்திரங்களின் அடிப்படையில் சர்.வில்லியம் ஜோன்ஸ் இந்து சட்டம் (‘Hindu Law’) எனப் பெயரிட்டு உருவாக்கியதன் மூலமே Hindu எனும் சொல் அரசியல் அங்கீகாரம் பெறலாயிற்று.
மாக்ஸ் முல்லர் பதிப்பித்த ரிக்வேதம் 1848-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வெளியீடாக வெளியாயிற்று. அவர் மனுநீதியையும் ஆங்கிலவாக்கம் செய்தார். இவ்வாறெல்லாம் காலனிய ஆட்சியாளர்களின் அரசியல் தேவை நிமித்தமாக இங்கு இந்துப் பெருந்தேசியம் கட்டமைக்கப்பட்டது.
இன்னொரு பக்கம் ஒப்பியல் மொழியியல் ஆய்வாளர்களால் ஐரோப்பிய மொழி பேசுவோர் அனைவரும் ஆரிய இனத்தார் எனவும், இந்தியாவில் இவற்றைப் பேணி நிற்போர் பிராமணராகவும் கருதப்படலாயினர் என பா.மதிவாணன் எடுத்துரைப்பதும் இத்தொடர்பில் இங்கு நோக்கத்தக்கதே (‘அடிவானம் நோக்கிச் சில அடிகள்’).
அவைதிக மரபு
இந்திய வரலாற்றின் மறுபக்கமான மற்றொரு செல்நெறி குறித்து காண்போம். முன்னது வைதீக மரபெனின், பின்னது அவைதீக மரபே. அதற்கூடாக மேலை அறிவொளி மரபுசார் மத நீக்கக்(Secular)கூறும், தமிழற மரபின் மதச்சார்பின்மையும் சங்கமித்ததென்பது ஒரு முகாமைத் திருப்புமுனையேயாகும்:
“1812-ல் சென்னை ஜார்ஜ் கோட்டை கல்லூரி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் திராவிட மொழி சார்ந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. இம்மரபு சமசுகிருத மரபுக்கு வேறானது என்ற புரிதல் ஏற்பட்டது.” “இதற்கு மூலமாக எல்லீஸ் இருந்தார். தமிழ் மரபின் நீதி தொடர்பான பாரம்பரியப் பனுவல்களைக் கண்டறிவதில் முனைப்பு காட்டினர். இவர்களுக்குத் திருக்குறளும் நாலடியாரும் கிடைத்தன.” – வீ. அரசு (‘திருக்குறள் பன்முக வாசிப்பு’)
கொல்கத்தாவில் கட்டமைக்கப்பட்ட, இந்து சட்டத்திற்கு முற்றிலும் மாறான, மனுதர்ம நூலுக்கு வேறுபட்ட பிரதியாக திருக்குறளைக் கண்டுபிடித்தனர் எனவும்; வீரமாமுனிவர் இலத்தீனிலும்; 1818-ல் எல்லீஸ்-ம், 1866-ல் துறு துறு & போப்பும் மொழிபெயர்த்ததையும் சுட்டிக்காட்டித் தொடர்வாரவர்.
“திருக்குறளை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்த ட்ரூ, கிரால் போன்றவர்களால், மேனாட்டுக்காரர்களுக்கும் ரோமில் இருந்த. போப்பாண்டவருக்கும் மற்றும் பலநாட்டுப் பாதிரிகளுக்கும் பைபிளைப் போன்ற சிறப்புடைய நூல் திருக்குறள் என்ற கருத்து உருவானது. இந்த கருத்தானது இந்தியாவில் வழங்குகின்ற தமிழ் மொழியானது கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகளுடன் சேர்த்து வைத்துப் பேசத் தகுதியான மொழியாகும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்கியது.”
– பொ.வேல்சாமி (‘ தீராநதி’ மார்ச் 2014)
இத்தகு மொழிபெயர்ப்பு முயற்சிகள் ஒரு பக்கம் குறளுக்கு அன்று சர்வதேச அங்கீகாரத்தை அளித்ததென்றால் பெரியார் குறளை வைதீக ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் முகமாக உயர்த்திப் பிடித்தது தமிழக அளவில் அதனைப் பரவலாகக் கொண்டு செலுத்த உறுதுணையானது.
திருக்குறளை மையப்படுத்திய அரசியல் செயல்பாடுகள்
“பெரியார் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் தூணாக விளங்கிய திருக்குறளைப் போற்றினார். தன் கலகச் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு திருக்குறளையும் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு கலகப் பிரதியாகவே பெரியார் கண்டுபிடித்தபோது, தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்குத் திருக்குறளின் பங்களிப்பு பெரிய அளவில் போய்ச் சேர்ந்தது”
– க. பஞ்சாங்கம் (‘காக்கைச்சிறகினிலே’ ஜுன் 2014)
திருக்குறளைத் ‘திரிக்குறளெனச் சுட்டி அயோத்திதாசப் பண்டிதர் பவுத்த தரும நோக்கில் விரிவாகப் பொருள் கண்டிருப்பதனை அவர் காலத்திய தலித் அரசியல் செயல்பாடென்பார் ராஜ்கௌதமன் (‘தமிழினி’ செப்.2010).
இவ்வாறே பரிமேலழகர் வர்ணதர்மத்தைப் பாதுகாக்கும் முகமாக அன்று குறளுக்கு உரை வகுத்ததும் அவர் காலத்திய வைதீக அரசியல் செயல்பாடே. ‘தண்டமிழின் மேலாந்தரமெனத் தொல்காப்பியத்தோடும்; சைவசமயச் சாத்திர, தோத்திர, புராண நூல்களோடும் சந்தானகுரவர் உமாபதி சிவத்தாலும், ஈசான சாமிநாத தேசிகராலும் சைவ சமய பிரமாண நூலாகப் பரிமேலழகர் உரை அங்கீகரிக்கப்பட்டது அக்காலத்திய சைவ சமய அரசியல் செயல்பாடே.
பரிமேலழகர் உரையே எதிர்த்தலைக் காரணியாக புலவர் குழந்தையும், பாரதிதாசனும் உரை எழுதியது அவர்கள் காலத்திய திராவிடஇயக்க அரசியல் செயல்பாடே. பாரதிதாசனின் குறளுரை, ‘பாவேந்தர் பார்வையில் வள்ளுவம் திருக்குறள் உரை’ எனும் பெயரில் 1994-ல் வெளியானது. அதில் 83 குறள்களுக்கு மட்டுமே உரை காணப்பட்டுள்ளது. இத்தொடர்பில் உரை எழுத முற்பட்ட நோக்கமும் நோக்கத்தக்கதாகும்.
“பெரியார் திருக்குறளில் காணுகின்ற குறை குறளில் இல்லை. குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் உரையில் தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவே தன் உரைமூலம் முயன்றார் எனத் தெரிகிறது.” என்பார் க.பஞ்சாங்கம் (அச்சுவடிவம் பெறா ‘திருக்குறள் உரைவளம்’ பயிலரங்கக் கட்டுரை-பிப்.2014).
‘பரிமே லழகர் உரையோ, வள்ளுவர் திருவுள் ளத்தின் திரையே ஆனது’- (‘பாரதிதாசன் கவிதைகள்’)
இத்தொடர்பில் திருக்குறளின் பெருமையைத் தமக்குணர்த்திய இரு தமிழறிஞர்களாக பா.வே.மாணிக்க நாயகரையும், நாவலர் சோமசுந்தர பாரதியாரையும் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலம் முதலிய அயல்மொழிகளின் மொழிப்பெயர்ப்பெல்லாம் பரிமேலழகர் உரையைக் கொண்டு மொழிபெயர்த்தனவே என்பார் குழந்தை. இவையெலாம் வள்ளுவரை பரிமேலழகர் கண்களால் காண நேர்ந்த அவலங்களே.
திருவள்ளுவர் திருவிக பார்வையில் சமணர் எனில் இரா.குப்புசாமியின் பார்வையில் ஓகசித்தர். ச.தண்டபாணித்தேசிகர் தம்முடைய ‘திருக்குறளில் மெய்ப்பொருட்சுவடுகள்’ நூலில் வெவ்வேறு சமயத்தவராக தனித்தனி கட்டுரைகளாக எழுதி கடைசியில் அவற்றை மறுத்து சமயங்களின் தோற்றத்துக்கு முந்தைய பழந்தமிழர் கடவுட்கொள்கைகளே என நிறுவுவார்.
திருக்குறள் இவ்வாறு பன்முகப் பார்வைகளுக்கும் இடந்தரவல்ல பனுவலே என்பது இவற்றால் போதரும். இவ்வாறு எல்லாம் இந்தியத் தலைமையதிகாரமான வேதமரபையும் அதற்கு முற்றிலும் மாறுபட்ட. குறளற அவைதீக மரபையும் காலனியாதிக்கம் தமதாட்சி நலன்களுக்கேற்ப திறம்படவே கையாண்டது என்று காலனியாதிக்கச் சூழலின் கதையை வரையறுத்து முடித்தார்.
கடந்த 70 ஆண்டுகளில் இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று அறிஞர்கள் தென்னிந்திய வரலாற்றுக்கு போதிய முக்கியத்துவம் அளித்துள்ளனரா என்பது குறித்த பொதியவெற்பன் அவர்களின் விவாதம் அடுத்த பாகத்தில் தொடரும்…