சாலை இளந்திரையனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
“அணைக்கட்டால் மறித்தாலும் வாய்க்காலாகி
அதிகவளம் தருகின்ற ஆற்றைப் போல,
இணையில்லா ஈகத்தால் எளியோர் தம்மை
ஏற்றெடுத்துக் காப்பாற்றும் சான்றோர் போல,
கணிப்பரிய பெரும்புகழை ஈட்டி வைத்துக்
காலத்தை வென்றிருக்கும் தமிழனோடு
தணிப்பரிய அன்புடனே பழகுகின்றேன்.
தனியன்புத் தாயன்பைக் காணு கின்றேன்.”
-சாலை இளந்திரையன்
பேராசிரியர் சாலை இளந்திரையன் தமிழ் பேராசிரியர்; திறனாய்வாளர்; சொற்பொழிவாளர்; கவிஞர்; எழுத்தாளார்; இதழாளர்; அரசியல் செயற்பாட்டாளர் என பல முகங்களில் தமிழ் பணியாற்றியவர். இடதுசாரி தமிழ்த்தேசிய சிந்தனையின் முன்னோடிகளில் ஒருவர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகில் சாலை பள்ளிவாசல் என்ற கிராமத்தில் வ.இராமையா, அன்னலட்சுமி தம்பதியினருக்கு மகனாக 1930-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் நாள் பிறந்தார். இவரது பள்ளிக் கல்வியை களக்காட்டிலும், டோனாவூரிலும், பாளையங்கோட்டையிலும் படித்தார்.
1948 முதல் 1950 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை படிப்பில் பயின்றார். அங்கு பேராசிரியர் மு.வரதராசன் அவர்களின் மாணவர் ஆனார். 1950 முதல் 1952 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று கலை இளவர் பட்டமும், அதே கல்லூரியில் 1952 முதல் 1954 வரை பயின்று கலை முதுவர் பட்டமும் பெற்றார். பச்சையப்பன் கல்லூரி படிக்கும் போது அவருக்கு திராவிட இயக்கத்தின் அறிமுகம் கிடைத்தது. அன்று முதல் தனது இறுதி நாள் வரை பெரியாரின் தொண்டராக வாழ்ந்தார்.
1954-ம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் முதன்முறையாக இலக்கிய முதுவர் பட்டத்திற்கான ஆய்வு வகுப்பு தொடங்கப்பட்டது. அவ்வகுப்பில் 1954-55ம் கல்வி ஆண்டில் முதல் மாணவராக சேர்ந்தவர், அங்கு பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரை நெறியாளராகக் கொண்டு ஆய்வு செய்து பட்டம் பெற்றார். ’தமிழ்நாட்டுப் பழமொழிகள்’ எனும் தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தில், 1971-ம் ஆண்டில் முனைவர் பட்ட ஆய்வினை முடித்து முனைவர் பட்டம் பெற்றார்.
சமூக மாற்றத்திற்காகவும் தான் இயங்கி கொண்டிருந்த திராவிட இயக்கக் கருத்தியலுக்காகவும் தனது இயற்பெயரான மகாலிங்கம் என்பதை சங்ககால மன்னனான இளந்திரையன் பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார். பிரசண்ட விகடன் பத்திரிக்கைக்கு இரா.இளந்திரையன் என்று கவிதை மற்றும் இலக்கிய கட்டுரைகள் எழுதினார். பின்னாளில் தனது சொந்த ஊரின் பெயரை சேர்த்து சாலை இளந்திரையன் ஆனார்.
சுயமரியாதை வாழ்வியல், இந்திய தேசிய மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தமிழ் ஈழ விடுதலை ஆதரவு, தமிழர் தன்னுரிமை ஏற்பு ஆகிய கொள்கைகளை வெளிப்படுத்தும் உரைகளை, படைப்புகளை, அறிக்கைகளை, கடிதங்களை சாலை இளந்திரையன் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
1991-ம் ஆண்டில் பழ.நெடுமாறன் தடையை மீறி தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார். அம்மாநாட்டில் கலந்துகொள்ள தஞ்சாவூருக்கு வந்தபோது சாலையாரும் பழ.நெடுமாறனும் கைது செய்யப்பட்டார்கள். ’தமிழ், தமிழன், தமிழ்நாடு’ எனும் நூலை எழுதியதற்காக இவர்மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது.
உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துகிற உலக தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை 1964-ம் ஆண்டு உருவாக்கியவர்களில் பேரா.சலையார் முக்கியமானவர். 1968-ம் ஆண்டு இந்திய பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம் இளந்திரையனார் முயற்சியில் உருவாக்கப்பட்டது.
1971-ல் ‘அறிவியக்கப் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கினார். குத்தூசி குருசாமி, நாத்திகம் நந்தனார் ஆகியோருடன் இணைந்து தமிழ்த்தேசியப் பணியாற்றினார். 1986-ம் ஆண்டு நடைபெற்ற, ஓராசிரியர் பள்ளிகள் சீரமைப்பு மாநாடு,1989-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்பு மாநாடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநாடுகளை இந்த அமைப்பு நடத்தியது.
1954 சூலை முதல் 1957 ஏப்ரல் வரை சென்னை மாநிலக் கல்லூரி விரிவுரையாளராக தற்காலிக பணியில் இருந்தார். 1959-ம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் விரிவுரையாளராக சேர்ந்தவர், 1983-ம் ஆண்டு பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1985-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று தமிழகம் வந்தபோது சாலை அச்சகம் அவரால் உருவாக்கப்பட்டது.
தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுடர் பத்திரிகையும், அறிவியக்கப் பேரவையின் சார்பில் 1975 அக்டோபர் முதல் 1987 ஏப்ரல் வரை அறிவியக்கம் எனும் இதழும், மே 17 முதல் 1993 ஏப்ரல் வரை வீரநடை அறிவியக்கம் எனும் இதழும் சாலையாரை சிறப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது.
1989-ல் கூடங்குளம் கொதிக்கிறது, 1992-ல் ஈழத்துப் புலிகளுடன் 28 நாட்கள் உட்பட கிட்டதட்ட 77 புத்தகங்களை எழுதியும், ஐந்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். பேராசிரியரின் மறைவிற்குப் பிறகு அவரது நான்கு புத்தகங்கள் வெளிவந்தன. இன்னும் தொகுக்கப்படாத பல கட்டுரைகளும் இருக்கின்றன.
பேராசிரியர் 4.10.1998 அன்று நாள்பட்ட நெஞ்சக நோய் காரணமாக இயற்கை எய்தினார்.
இடதுசாரி தமிழ் தேசியத்தின் முன்னத்தி ஏர்களில் ஒருவரான சாலையார் நினைவு நாள் இன்று.