சுவாமி அக்னிவேஷ்

காவி உடையுடன் இந்துத்துவ அரசியலை எதிர்த்து நின்ற சுவாமி அக்னிவேஷ் மறைந்தார்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் வடகிழக்கு மாவட்டமான பகுர் பிரதேசம் அடர்ந்த மலைகளால் சூழப்பட்டது. பல்வேறு பழங்குடியின மக்களை உள்ளடக்கிய அந்த மலைப் பகுதியில் பகாரியாஸ் மற்றும் சந்தால்ஸ் (Paharias and Santhals) பழங்குடியின்ர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் மிகவும் கலாச்சார அழுத்தம் கொண்டவர்கள். அவர்களுடைய பண்பாட்டு நிகழ்வுகள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

2018-ம் ஆண்டு ஜுன் மாதம் பகாரியா பழங்குடியினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சுவாமி அக்னிவேஷ் அழைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் அக்கரையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த அவர், அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தங்கியிருந்த விடுதியை விட்டு வேளியே வந்தார். மறைந்திருந்த ஐந்து, ஆறு இளைஞர்கள் அவர் மீது பாய்ந்து தாக்கத் துவங்கினார்கள். 

காவி முண்டாசும் காவி உடையும் தரித்து எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் அவர் நிலைகுலைந்து போனார். அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தில் சரிந்து கீழே விழுந்தார். ஆடை கிழிக்கப்பட்டு அரை நிர்வாணமாக கீழே கிடந்த அவரை அடியுங்கள் என்று உரத்து முழங்கிய அந்த வெறிக்கூட்டம் Bharatiya Janata Yuva Morcha (BJYM) and Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) இயக்கத்தை சார்ந்தவர்கள். 

2018-ம் ஆண்டு இந்துத்துவ அமைப்பினரால் தாக்கப்பட்ட சுவாமி அக்னிவேஷ்

சுவாமி அக்னிவேஷை ஏன் இந்துத்துவ அமைப்புகள் தாக்க வேண்டும்?

79 வயது மதிக்கத்தக்க இந்துமத சாமியாரை ஏன் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சக்திகள் தாக்கியது? அவருடைய இருப்பு ஏன் இந்துத்துவா கும்பலுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது? 

ஆர்ய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் மத நல்லிணக்கம், சாதிய சமத்துவம், பெண் விடுதலை போன்ற பல முற்போக்கு கருத்துகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்தவர். அவருடைய செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தில் இருந்து இந்துக்களை வேறுபடுத்திக் காட்ட முயற்சித்தது. இந்து மதம் என்ற போக்கில் அடிப்படைவாத செயல்படுகளில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் போக்கை வன்மையாகக் கண்டித்தார். 

சுதந்திரம், சமத்துவத்தின் மீது ஆழமாக நம்பிக்கை கொண்டவர். சாமானிய மக்களின் உரிமைக்குப் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்படும்போது காவல்துறையால் பொது இடத்தில் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். நக்சல்பாரிகள் தேடுதல் என்ற பெயரில் மக்கள் மீது நடத்திய ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் எழுப்பினார். பதல்கார்கி (Pathalgarhi movement) இயக்கத்தில் பழங்குடியினப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது பெரும் கரிசனை கொண்டிருந்தார். அவர்களின் நியாயத்தை ஆதரித்தவர். அரசுக்கு எதிராக நடந்த பல்வேறு போராட்டங்களில் நேரடியாக கலந்து கொண்டார். காஷ்மீர் போராட்டம்,  மனித உரிமை பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள், இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பு போன்ற பல்வேறு தளங்களில் வேலை செய்தவர். 

இந்தியாவில் கொத்தடிமைகளை மீட்டெடுக்க குழந்தை தொழிலாளர்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான பல போராட்டங்களை முன்னெடுத்தார். கொத்தடிமை முறையை அடியோடு ஒழிப்பதற்காக 1981-ம் ஆண்டு பந்துவா முக்தி மோர்ச்சா (Bandhua Mukti Morcha (Bonded Labor Liberation Front)) எனும் அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டார். 

1939-ம் ஆண்டு ஆந்திராவில் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்த அவர் கல்கத்தாவில் சட்டம் மற்றும் வணிகவியல் பயின்றார். பின் கலகத்தாவில் புகழ்பெற்ற புனித சேவியர்ஸ் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினர். பின் 1968-ம் அண்டு ஆரிய சமாஜ் அமைப்பில் சேர்ந்தார். நேரடியாக தேர்தல் அரசியலில் ஈடுபடும் நோக்கத்தோடு 1970-களில் ஆரிய சபா என்ற அரசியல் கட்சியை துவங்கினார். 

தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்காக விலகியவர்

1977-ம் ஆண்டு ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1979-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தின் கல்வியமைச்சராக பதவியேற்றார். ஃபரிதாபாத் (Faridabad) பகுதியில் நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டை எதிர்த்து ஐந்தே மாதத்தில் பதவி விலகினார். தொடாந்து சாமனிய மக்களுடன் நிற்பதும் அவர்களின் நலனில் அக்கரை கொள்வதும் தான் ஆன்மீகம் என்று நம்பினார். அதனால் மக்களுடன் இணைந்து அரசுக்கு எதிரான பல போராட்டங்களில் பங்கேற்றார். ஏறத்தாழ 14 மாதங்கள் சிறையில் இருந்தார். 

இஸ்லாத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்

2005-ம் ஆண்டு பெண் சிசுக் கொலையை எதிர்த்து இந்தியா முழுவதும் பயணித்தது பரவலாக பெரும் ஆதரவைப் பெற்றது. 2008-ம் ஆண்டு Jamiat Ulema-e-Hind எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த Anti-Terrorism Global Peace Conference எனும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பான உரை நிகழ்த்தினார். ஒரு சிலர் செய்யும் தீவிரவாத செயல் அனைத்து மக்களின் மீது சுமையாக விழுந்துவிடுகிறது என்று ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய குழுக்களுக்கு அறைகூவல் விட்டார். இஸ்லாமியர்கள் வந்தேமாதரம் பாடவேண்டாம் என்று Jamiat Ulema-e-Hind இயக்கத்தின் கோரிக்கையை அவர் ஆதரித்தார். 

இஸ்லாமியர்களின் மீது அளவுகடந்த கரிசனை வைத்திருந்தார் என்பதற்கு பின்வரும் அவருடைய சொற்களிலிருந்து நாம் புரிந்து கொள்ளாம். 

”அமெரிக்காதான் உலகின் முதல் பயங்கரவாதி என்று சொல்ல நான் தயங்க மாட்டேன். குரானையும் இஸ்லாத்தையும் அவதூறு செய்வது பயங்கரவாதத்தின் மோசமான வடிவமாகும். இஸ்லாம் அமைதி மற்றும் சகோதரத்துவத்தைக் குறிக்கிறது. முஸ்லீம்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வதை விட ஒரு பெரிய பொய் வேறெதுவும் இருக்க முடியாது”   

மாவோயிஸ்ட்களுடனான பேச்சுவார்த்தை

2011-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 2011-ம் ஆண்டு மாவோயிஸ்ட் பகுதியில் இருந்த கிராமம் அரசுப் படையினரால் கொளுத்தப்பட்டு சேதம் ஏற்படுத்தப்பட்ட போது, அவர்களுக்கு நிவாரணப் பொருளை எடுத்துச் சென்ற சுவாமி அக்னிவேஷ் கடுமையாக தாக்கப்பட்டார். பல தடைகளைத் தாண்டி அந்த மக்களுடன் ஒன்றிணைந்து நின்றார். நக்சல்பாரிகளின் நியாயத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று 2013-ம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். 

காஷ்மீர் மக்களுக்கான குரல்

பாஜக அரசு 2015-ம் ஆண்டு காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தனியான மறுவாழ்வு மையத்தை ஒதுக்க நினைத்தபோது அதை எதிர்த்தார். இது காஷ்மீரிகளுக்குள் பிளவை ஏற்படுத்தும் யுக்தி என்று கண்டித்தார். அத்தோடு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தினை அளிக்கும் சரத்து 370 நீக்கப்பட்டபோது அதனை எதிர்த்து குரல் கொடுத்தார். 

2018-ம் ஆண்டு இந்துத்துவ சக்திகளால் கொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். 

டெல்லியில் 48,000 வீடுகளை இடிக்க உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டார். 

மதக் கலவரத்தை தூண்ட முயன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு எதிரான குரல்

பூரி ஜெகன்நாதர் ஆலயத்தை இந்துக்கள் அல்லாதவர்களும் வழிபட திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால், இந்து மதத்தின் புனிதத்தை கெடுத்துவிட்டதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அமர்நாத் கோயில் நில விவகாரத்தை சர்ச்சையாக்கி கலவரத்தைத் தூண்ட முயற்சித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை நோக்கி ”சிவன் வெறும் ஒரு துண்டு பனிக்கட்டிதான”  என்று விமர்சித்தற்காக கடுமையாக எதிர்க்கப்பட்டார். வலதுசாரி தீவிரவாத அமைப்புகளால் அவருடைய தலைக்கு 20 லட்சம் ரூபாய் விலை வைக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடைபெற்ற இடிந்தகரைப் போராட்டத்தில் மக்களுடன் கலந்து கொண்டார். 

இந்துத்துவா சக்திகள் இஸ்லாமியர்களை முன்னிறுத்தி செய்யும் வெறுப்புப் பிரச்சாரம் வெறும் வெளித்தோற்றமே. அடிப்படையில் சாதிய ஏற்றத்தாழ்வையும், பெண் அடிமைத் தனத்தையும் மீட்டேடுக்கவே அவர்கள் விரும்புகிறார்கள் என்று வெளிப்படையாக ஆர்எஸ்எஸ்-சை விமர்சித்தார்.

சுவாமி அக்னிவேஷ் காவி நிறம் தொன்மையான சமண, பௌத்த  துறவிகளின் அன்பை வெளிக்காட்டியது.  அதிகாரத்துடன் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளாமல் மக்களுடன் மக்களாக நிற்பதே ஆன்மீகம் என்ற குறியீட்டை வெளிப்படுத்திய சுவாமி அக்னிவேஷ் நேற்று மாலை 6:55 மணிக்கு  காலமானார். 2018-ம் ஆண்டு பகுரில் அவர் மீது நடந்த தாக்குதலில் முதுகுத் தண்டு மற்றும் நுரையீரல் கடுமையாக பலவீனமடைந்தது கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் உபாதையில் இருந்தபோதும். இந்ததுவா சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *