சி.வை.தாமோதரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு
“தமிழீழம் தந்த தாமோதரனார்
காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்
நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த
தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர்
தாமோ தரமுடை யார்”
– என்று பரிதிமாற் கலைஞர் தாமோதாரனாரை புகழ்ந்து பாடினார்.
தமிழீழத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் அருகில் சிறுப்பிட்டி எனும் கிராமத்தில். வைரவநாதர் – பெருந்தேவி தம்பதியருக்கு 1832-ம். ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மூத்த மகனாய் பிறந்தார் தாமோதரன். அவரின் பெயரோடு அவரது ஊரின் பெயரும் முன்னொட்டாக சேர்க்கப்பட்டு சி.வை.தாமோதரன் என்று அழைக்கப்படுகிறார்.
தந்தையார் ஆசிரியர் என்பதால் தொடக்கக் கல்வியை அவரிடம் கற்கும்போதே அற நூல்களையும், நிகண்டு நூல்களையும் படிக்கத் துவங்கிவிட்டார். சுன்னாகம் முத்துக்குமர நாவலர் என்பவரும் இவரது முக்கியமான ஆசானாவார்.
எட்டாண்டுகள் தெல்லிப்பழை மிசன் பள்ளி, வட்டுக்கோட்டை கல்வி நிலையம், யாழ்ப்பாண பல்கலைக் கல்லூரி ஆகியவற்றில் தனது 12-வது வயது முதல் ஆங்கிலக் கல்வியைக் கற்றார். அதன் பின் 1852-ல் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் தாமோதரர் ஆசிரியர் பணியை துவங்கினார். அவரை பெர்சிவல் பாதிரியார் தான் துவங்கிய தின வர்த்தமானிக்கு ஆசிரியராக பொறுப்பு கொடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்தார். பெர்சிவல் பாதிரியார் ஆறுமுக நாவலர் மொழிபெயர்த்த தமிழ் பைபிளை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் பி.ஏ பட்டதாரி
தாமோதரர் 1857-ல் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழாசிரியர் பொறுப்பேற்றார். அதே ஆண்டு அங்கு தொடங்கிய இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்து தேர்வெழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் பி.ஏ பட்டாதாரி இவர்தான் என்பது பலருக்கும் தெரியாத விடயமாகும்.
மாநிலக் கல்லூரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்கு பணிமாற்றம் பெற்றுச் சென்றார். 1871-ல் பி.எல். பட்டமும் பெற்றார். 1882-ம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
பதிப்புத் துறையில் தாமோதரனார்
உ.வே.சாமிநாத அய்யர் ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்து தமிழ் இலக்கியங்களை பதிப்பித்தார் என்று நாம் அறிந்திருப்போம். ஆனால் அவருக்கு முன்னரே தனது இளம் வயதிலேயே தமிழ்நாட்டில் சுவடிகளைத் தேடி அலைந்தவர் ஈழத்து அறிஞர் தாமோதரனார்.
அதனால்தான்
”பதிப்புத் துறைக்கு ஆறுமுக நாவலர் கால்கோள் நாட்டினார். தாமோதரம் பிள்ளை சுவர் எழுப்பினார்; உ.வே.சா. மேற்கூரை இட்டார்”
என்று திரு.வி.க. கூறுவார்.
முதல் நூலாக நீதிநெறி விளக்கத்தை 1854-ல் வெளியிட்ட போது தாமோதரருக்கு அகவை 22. இளம் அகவையான 22-ல் பதிப்பு பணியைத் தொடங்கிய சி.வை.தாமோதரனார், அதற்கும் முந்தைய கழியிளம் பருவத்திலேயே தமிழ் ஏடுகளைத் தேடும் பணியை மேற்கொண்டிருந்தார் என்பதை 1887 அவர் பதிப்பித்த கலித்தொகை முன்னுரையில் எழுதியிருக்கிறார்.
தொல்காப்பிய பதிப்பு
அவரது காலத்தில் கிடைத்த தொல்காப்பிய நூல்கள் மிகச் சிலதான் என்பதையும், அவை மிக மோசமாக சித்திலமடைந்து இருப்பதால் இன்னும் சில நாட்களில் அழிந்துவிடும் என்பதாலேயே பதிப்புகிறேன் என்று தாமோதரனார் கூறியுள்ளார்.
அவரின் வரிகளிலேயே சொல்வது என்றால்,
”தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவையாவும் நான் தேடிக் கண்டவரை ஈனஸ்திதி அடைந்திருப்பதால், இன்னும் சில வருடங்களுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே உலோகோபகாரமாக அச்சிடலானேன்”
என தமது தொல்காப்பியச் சேனாவரையர் உரையின் பதிப்பின் முன்னுரையில் எழுதியுள்ளார் சி.வை.தா.
தமோதரனார் பதிப்பித்த நூல்கள்
1 நீதிநெறி விளக்கம் 1854
2. தொல் சேனாவரையம் 1868
3. வீரசோழியம் பெருந்தேவனார் உரையுடன் 1881
4. இறையனார் களவியல் 1883
5. தணிகைப் புராணம் 1883
6. தொல்பொருள் நச்சினார்கினியம் 1885
7. கலித்தொகை 1887
8. இலக்கண விளக்கம் 1889
9. சூளாமணி 1889
10. தொல் எழுத்து 1891
11. தொல் – சொல் (நச்) 1892
சி.வை.தா. வெளியிட்ட 11 நூல்களில் மழவை மாகலிங்க ஐயரின் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தின் நச்சினார்கினியம் உரை 1848-ம் ஆண்டளவில் வெளியாகியிருக்கிறது. மற்ற அனைத்தும் தாமோதரனால் மட்டுமே முதன்முதலாக ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. அவரின் “கற்றோர் ஏற்றுங் கலித்தொகை” பதிப்பேயாகும். மேலும் உ.வே.சா-விற்கு பல சுவடிகளை தந்துதவியவர் சி.வை.தாமோதரனார் ஆவார்.
சி.வை.தாமோதரனார் அவர்களின் பணி குறித்து வையாபுரிப்பிள்ளை, ”இவரது தமிழார்வம் இவர் உள்ளத்தில் மங்கள ஒளியாய்த் திகழ்ந்து ஒரு காலைக்கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிழம்பாகச் சுடர்விட்டு எரிந்தது’ என்று குறிப்பிட்டிருப்பார்.
யாரும் செய்யாத பணியை செய்தவர்
ஆனால் தனது பணி குறித்து எழுதிய வேறு யாரும் இந்த பணியை செய்யாததால்தான் இந்த பணியை செய்ய வந்ததாகவும், தமிழ் நூல்களின் நிலைகண்டு செய்தேன் என்கிறார்.
”நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும், அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத் தொழிலில் வலிப்பது”
தொல்காப்பியத்தை அச்சிடுவதற்கு முழுமையாக அச்சிட முடியாமல் போனால் அவப்பெயர் வந்துவிடுமோ என்று அஞ்சியே பல அறிஞர்கள் அச்சிடுவதை தவிர்த்ததால், தாமோதரனார் தான் அச்சிடும் பணியை செய்ததாக சொல்கிறார்.
“பல பெரும் வித்துவான்கள் இந்நூலை அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும், தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களால் இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால் பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும்பட்ட சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று” என்றும் கூறுகிறார்.
அகநானூற்றை வெளியிடும் பொருட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தார். அந்த ஆய்வும், பதிப்பும் நிறைவேறும் முன்னர் 01-01-1901-ல் இயற்கை எய்தினார்.
”தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்து தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன. ஆனால் ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரை தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு”
என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் கூறிருப்பார். அந்த குறையைப் போக்கும் கடமை நமக்கு இருக்கிறது.
உதவிய நூல்
தமிழீழம் தந்த தாமோதரனார் – பேரா.கு.அரசேந்திரன்