ஏ.பி.ஷா

சரிவு நிலையில் உச்சநீதிமன்றம் – ஓய்வுபெற்ற நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா ( பகுதி-1)

படம்: அஜித் பிரகாஷ் ஷா

செப்டம்பர் 18, 2020 அன்று நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் டெல்லி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், சட்ட ஆணையத்தின் (Law Commission of India) முன்னாள் தலைவருமான ஏ.பி.ஷா, ”சரிவு நிலையில் உச்சநீதிமன்றம் : மறக்கபட்ட சுதந்திரமும் அழிக்கபட்ட  உரிமைகளும்” என்ற தலைப்பில் இணையதளம் வழியாக உரையாற்றினார். அதன் சுருக்கம் பின்வருமாறு. 

இந்திய உச்சநீதிமன்றத்திற்கென்று ஒரு மாண்பு இருந்தது. புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் கிரான்வில் ஆஸ்டின் (Granville austin) கூறியதைப் போல அரசியலமைப்புக்கான முதன்மை பாதுகாவலனாக அது தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து காலம் செல்லச் செல்ல, அது ஒரு செயற்பாட்டாளருக்கான பரிமாணத்தை வளார்த்துகொண்டே வந்தது. சில நேரங்களில் உச்சநீதிமன்றத்தின் பணி விமர்சிக்கப்பட்டாலும் 80-90 களில் அதனுடைய மாண்பு ஓரளவு நிலைநிறுத்தப்பட்டது எனலாம். ஆனால் தற்கால அரசியல் சூழலில் நிலைமை மிகவும் மோசமானதாகவே உள்ளது. இப்போது அது விழித்துக்கொண்டால் மட்டுமே நம்மால் அவசர நிலை காலம் போன்ற சீரழிவு வராமல் தவிர்க்க முடியும்.

இந்தியா ஏட்டளவில் ஒரு ஜனநாயக நாடுதான். அதன் நிர்வாக அலுவலர்கள் (executives) அனைவரும் மக்கள் பிரதிநிதிகளாலும், அரசியலமைப்பாலும் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இது வெறும் எழுத்தில் மட்டுமே உள்ளது. இன்று இந்த அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அனைத்து கட்டமைப்புகளும் உறுப்புகளும் கட்டமைப்பு ரீதியாகவே சிதைக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இது தொடங்குகிறது எனலாம். இப்போது நடப்பவை இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தில் நடந்ததை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. 

இந்திய நாடாளுமன்றத்தின் எல்லை என்ன என்பதை நம்மால் சமீப கால நடவடிக்கைகளில் இருந்து உணரமுடிகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அது ஒரு முறைகூட கூடவில்லை என்பது மட்டுமல்ல, கூடிய பின்பு ‘கேள்வி நேரம்’ முற்றாக நீக்கப்பட்டது. பாராளுமன்றம் பலவீனப்பட்டாலும் மற்ற அமைப்புகள் இந்த அதிகார அமைப்பை கேள்விக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.

அதிகார அமைப்புகள் செயலற்று கிடக்கிறது

லோக்பாலிடம் இருந்து எந்த சலனத்தையும் காணவில்லை. தேசிய மனித உரிமை ஆணையம் செயலற்றுக் கிடக்கிறது. புலனாய்வு அமைப்புகளை தவறான வழியில் மிக எளிதாக இவர்களால் பயன்படுத்த முடிகிறது. தேர்தல் ஆணையமும் சமரசத்துக்கு உட்பட்டுவிட்டது. மத்திய தகவல் ஆணையம் முற்றிலும் செயலற்று கிடக்கிறது. இப்படி சீரழிந்துவிட்ட ஜனநாயகத்தை காக்கும் அமைப்புகளைப் பற்றி இன்னும் சொல்லி கொண்டே போகலாம். 

குறிவைக்கப்படும் கல்வியாளர்கள்

கல்வியாளர்கள், சமூக முன்னணியாளர்கள் என அனைத்து தரப்பும் மிக தந்திரமாக அமைதியாக்கப்படுகிறார்கள். அவர்களின் குரல்வளை பல வழிகளில் நெறிக்கப்படுகிறது. பல்கலைகழகங்கள் தினம்தினம் தாக்குதலுக்குள்ளாகிறது. ஒன்று மாணவர்கள் கலவரக்காரர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் அல்லது பேராசியர்கள் சதிகாரர்களாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார்கள். உண்மையின் பக்கம் நிற்கும் ‘ஊடகம்’ என்ற நான்காவது தூண் இறந்து பல காலம் ஆகிறது. ஆனால் இது எல்லாவற்றுக்கும் மேலாக நீதிதுறையே மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு

பாராளுமன்றம் விவாதமற்று இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் பல விஷயங்களை நாம் பேசி இருக்க முடியும். ’காஷ்மீரின் அந்தஸ்து பறிக்கப்பட்ட விவகாரம்’, ’அரசியலமைப்புக்கு உட்பட்டதுதானா குடியுரிமை திருத்தச் சட்டம்?’ ‘அந்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை அடக்கிய விதம்’, ’ஊபா, தேசத் துரோகம் போன்ற அடக்குமுறை சட்டங்கள் தவறாக எதேச்சிகாரமாக பயன்படுத்தப்படும் விதம்’, ’கட்சிகளின் நிதிக்காக வழங்கப்படும் தேர்தல் பத்திரங்கள்’ ஆகிய விவாதங்கள் அனைத்தும் புறம்தள்ளப்பட்டது. அல்லது காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது. 

நாம் அவசர கால நிலையில் இருக்கிறோம்

நாம் போர் புரியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் நாம் ஒரு அவசர கால நிலையில்தான் (state of emergency) இருக்கிறோம் என்பது உறுதி. இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமானதற்கு காரணமாக நான் பார்ப்பது உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளைத்தான்.

2014-ம் ஆண்டு மோடி ஆட்சி தொடங்கியதிலிருந்தே ஒரு புதிய அரசியல் அலை நாட்டில் வீசுவதை நாம் உணர முடிகிறது. அதன் முந்தைய ஆட்சியை விட இப்போது அதன் வலதுசாரி சிந்தனை தீவிரமடைந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் சரிவை நாம் தனியாக பார்க்க முடியாது. வலதுசாரிகளின் யாரும் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்தை அடைவதற்கான பல திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த நாட்டின் கட்டமைப்புகளின் அதிகாரத்தை வலதுசாரி தத்துவம்தான் இப்போது வைத்திருக்கிறது. நீதிபதிகளின் பணிமாற்றங்கள் சட்ட அமைச்சகத்தின் ஆணைக்கிணங்க நடக்கிறது. அதற்கான எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை.

நீதிபதி அகில் குரேஷி (மோடியும் அமித் ஷாவும் குஜராத்தில் இருந்த போது அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்தவர்), நீதிபதி முரளிதர் (சிஏஏ போராட்டத்தை ஒட்டி காவல்துறை-வலதுசாரிகளால் நடந்த வன்முறைக்கு எதிராக இருந்தவர், டெல்லியிலிருந்து மாற்றப்பட்டவர்), நீதிபதி ஜெயந்த படேல் (குஜராத்தில் 2004-ல் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட இஷ்ராட் ஜஹான் வழக்கை மத்திய புலனாய்வுக்கு மாற்றி உத்தரவிட்டவர்) என நீதிபதிகள் அரசியல் காரணங்களுக்காக தூக்கியடிக்கப்பட்டதை சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றம் எதிர்கொள்ளவில்லை. மாறாக இந்த தூக்கியடிப்புக்கு எதிரான வழக்குகளை அது தள்ளுபடி செய்தது. 

முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாக தலைமை நீதிபதிகள் 2018-ல் நீதித்துறையின் நிர்வாகத்திலும் மேலாண்மையிலும் மத்திய அரசின் தலையீட்டைப் பற்றி பத்திரிக்கைகளில் வெளிப்படையாக பேசினார்கள். 66A சட்ட நீக்கத்தை தவிர இந்த அதிகார கட்டமைப்புக்கு எதிராக எந்த ஒரு துரும்பையும் உச்ச நீதிமன்றம் நகர்த்தவில்லை.

மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு என முற்போக்கான அம்சங்கள் சில தென்பட்டாலும் இந்த விஷயங்கள் எதிலும் அதிகார வர்க்கம் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை. அவர்கள் எதிர்த்த எதையும் நீதிதுறை நடைமுறைப்படுத்தவில்லை. ‘பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான கடந்த 10 தீர்ப்புகளிலும் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது’ என்கிறது ஒரு செய்தி. சமீபத்தில் பிரசாந்த் பூஷன் மீதான நடவடிக்கையில் கூட உச்ச நீதிமன்றத்தின் பேச்சுரிமை மீதான ‘சகிப்புத்தன்மை’ வெளிப்பட்டது. 

பெரும்பான்மைவாதத்திற்கு ஆதரவாக நீதிமன்றம்

நீதிமன்றத்தின் தோல்வியாக நான் பார்ப்பது பெரும்பான்மை வாதத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததைத் தான். ஒரு நீதிமன்றத்தின் முக்கியப் பணியே சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாப்பதுதான். ஏனென்றால் ஜனநாயக அமைப்பில், அதிகாரம் பெரும்பான்மையிலிருந்து வந்தாலும் அதன் மதிப்பும் சட்ட ரீதியான அங்கீகாரமும் சிறுபான்மை பிரிவை அந்த அதிகாரம் எப்படி கையாள்கிறது என்பதில் இருந்தே வருகிறது. அதன்படி ஜனநாயக நாட்டில் சிறுபான்மைக்கு எதிரான சட்டங்களில் இருந்தும் நடைமுறையிலிருந்தும் அந்த மக்களைப் பாதுகாக்கும் முதன்மை பொறுப்பும் கடமையும் நீதித்துறைக்கே உரியது. அந்த அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் நீதித் துறைக்குதான் வழங்கியிருக்கிறது. ஆனால் அயோத்தியா வழக்கிலும், சபரிமலை வழக்கிலும் இந்த மாண்பு மீறப்பட்டுவிட்டது. பெரும்பான்மைக்கு ஆதரவாகவே நீதிமன்றம் நடந்துகொண்டது. 

கொரானா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவெங்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிதிமன்றத்தை பலர் நாடிய போது ‘அரசாங்கம் என்னதான் செய்ய வேண்டும்’ என பொறுப்பற்ற முறையில்தான் பதில் வந்தது. அந்த வழக்குகள் விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தொடரும்…

ஏ.பி.ஷா அவர்களின் உரையின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் வெளிவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *