கவிஞர் தமிழ் ஒளி

மே தினம் குறித்து முதன்முதலில் தமிழில் கவிதை எழுதிய கவிஞர் தமிழ் ஒளி

கவிஞர் தமிழ் ஒளி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

”சீரற்ற சமுதாயம் எதற்கு?
வாழ்வின் சிறுமைகளை 
நொறுக்குவதில் தயங்க வேண்டாம்”

– தமிழ் ஒளி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள ஆடூர் எனும் கிராமத்தில் 21-9-1924 அன்று சின்னையா – செங்கேணி அம்மாள் இணையரின் மகனாகப்  பிறந்தார் தமிழ் ஒளி. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விஜயரங்கம். பாவேந்தர் பாரதிதாசன் தான் இவருக்கு தமிழ் ஒளி என்று தமிழ்ப் பெயர் சூட்டினார்.

தமிழ் ஒளி ஆரம்பக் கல்வியை புதுவை முத்தியால்பேட்டை  அரசு நடுநிலைப் பள்ளியில் படித்தார். உயர்கல்வியை பாவேந்தர் பாரதிதாசன் பணியாற்றிய புதுவை கல்வே கல்லூரியில் பாரதிதாசனின் மாணவனாக புகுமுக வகுப்பு படித்தார். பட்டப்படிப்பை கரந்தை தமிழ் கல்லூரியில் முடித்து பட்டம் பெற்றார். 

கல்லூரி நாட்களில் திராவிடர் கழகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். திராவிடர் கழகத்தின் மாணவர் மாநாட்டில் பங்கெடுத்து கவிதை வாசித்தார்.

தடை செய்யப்பட்ட முரசு இதழ்

பின்னாளில் பாரதிதாசன் அவர்களின் மகனான மன்னர் மன்னன் அவர்களுடன்  இணைந்து தமிழ் ஒளி ‘முரசு’ என்ற  இதழை நடத்தினார். இந்த இதழ் பல்வேறு சீர்திருத்த கருத்துகளையும், விடுதலை உணர்வையும் ஊட்டியதால் அரசினால் தடை செய்யப்பட்டது. மேலும் இதழ் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. மன்னர் மன்னன் இளம் வயது காரணமாக விடுதலை செய்யப்பட்டார். தமிழ் ஒளி இரண்டு வாரங்கள் சிறைவாசத்திற்குப் பின்  வெளிவந்தார். 

தமிழ்நாடு பத்திரிக்கையில் இந்தி எதிர்ப்பு கவிதை

முதல் மொழிப்போர் காலத்தில் தமிழ்நாடு பத்திரிகையில் இவர்,

“இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்-கூர்
ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்”
காரிருள் இன்றும் விடியவில்லை-எம்
காற்றனை இன்றும் ஒடியவில்லை!
இதர்மிசை இந்தி உயர்குவதோ-எங்கள்
செந்தமிழ் அன்னை அயர்குவதோ?” 

என்று எழுதிய பாடல் போராட்டக் களங்களில் பாடப்பட்டது. 

பெரியாரின் ‘குடியரசு’, அண்ணாவின் ‘திராவிட நாடு’, சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர்  இயக்கத்தின் சார்பாக ஈரோடு சின்னசாமி நடத்திய ’சமநீதி’ மற்றும் ’தமிழன்’ ஆகிய பத்திரிக்கைகளில் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து  தொடர்ச்சியாக கவிதைகள் எழுதினார்.

பொது உடைமைக் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தமிழ் ஒளி

1947-ம் ஆண்டிற்குப் பின் பொதுஉடைமை இயக்கத்தின் தலைவர்  ஜீவா அவர்களால் ஈர்க்கப்பட்ட கவிஞர் தமிழ் ஒளி திராவிட இயக்கத்தில் இருந்து பொதுஉடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.  

1948-ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. “ஜனசக்தி” பத்திரிகை அலுவலகமும் மூடி சீல் வைக்கப்பட்டது. கட்சித் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். அந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் “முன்னணி” எனும் இதழ் தலைமறைவாளர்களுக்கு தொடர்பு சாதனமாக விளங்கியது. இவ்விதழை ‘கவிஞர் குயிலன்’ தொடங்கினார். அவருடன் இணை ஆசிரியராகப் பொறுப்பேற்று கவிஞர் தமிழ் ஒளி கடுமையாக உழைத்தார்.

பொதுவுடைமையை நேரடித் தமிழில் படைப்பிலக்கியமாய்

பொதுவுடைமைக் கருத்துக்கள் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் வாயிலாக மட்டுமே மக்களிடம் சென்று கொண்டிருந்த காலத்தில், தமிழ் ஒளி அந்த நிலையை மாற்றியமைத்தார். தமது படைப்பிலக்கியத்தின் மூலம் பொதுவுடைமைக் கருத்துக்களை பரப்பினார். ’முன்னணி’ இதழில் வராம்தோறும் தமிழ் ஒளி கவிதை, கதை, ஓரங்க நாடகம் என இலக்கியப் பணி செய்தார். முன்னணி பத்திரிகையில் மட்டுமன்றி எழுத்தாளர் ‘விந்தன்’ நடத்திய ‘மனிதன்’ பத்திரிக்கையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

1952-ம் ஆண்டு மே தினம் குறித்து முதன்முதலில் தமிழ் ஒளி தமிழில் கவிதை எழுதினார். அதனால் தான் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், “பாரதி-பாரதிதாசன் இருவரையும் தாண்டி உலகத் தொழிலாளர்களின் இயக்கமாகிய பொதுவுடைமை போர்க்களத்தில் களப்போர் வீரனாக விளங்கியவன்” 

என்று தமிழ் ஒளியைப் புகழ்ந்தார் 

”கோழிக்கு முன்னெழுந்து
கொத்தடிமைப் போலுழைத்துக்
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!”
“மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி
விண்ணில் மழையிறக்கி
மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி
வாழ்க்கைப் பயிரிட்டு
வாழ்ந்த தொழிலாளிகையில்
விலங்கிட்டுக் காலமெலாம்
கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க
பொங்கிவந்த மே தினமே!”

மே தினம் குறித்தான கவிதை நூலின் விற்பனையில் பாதித்தொகையை அக்காலகட்டத்தில் மலேசியாவில் நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்காக தமிழ் ஒளி வழங்கியது குறிப்பிடத்தக்கது. பொதுஉடமை இயக்கத்தில் இருந்த போதும் தமிழக எல்லைப் போராட்டம் குறித்து கவிதை எழுதினார். 

தொழிலாளர் போராட்டத்தில் தமிழ் ஒளி

ஆலைத் தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், மெட்ராஸ் எலக்ட்ரிக் ட்ராம்வே தொழிலாளர்கள், புதுவைத் தொழிலாளர்கள் ஆகிய தொழிலாளர்களின் போராட்டங்களை தனது கனல் தெறிக்கும் கவிதை வரிகளால் ஆதரித்தார். சென்னை மின்ட் பகுதி தொழிற்சங்க அலுவலகங்களே இவரது வசிப்பிடமாக இருந்தது. 

எழுத்தாளர் நண்பர்களே! தமிழ்நாடு இன்றைக்கு எதிர்பார்ப்பது வாழ்க்கையை வளப்படுத்தும் கலையைத்தான். ‘கலை கலைக்காகவே’ என்று சொல்லும் கற்பனை சிந்தாந்தத்தையல்ல. மக்களுக்காக, மக்கள் உயர, மக்கள் காலத்து கதைகளை எழுதுங்கள். உலகம் முழுவதும் உருவாகிக் கொண்டு வரும் உழைக்கும் இனத்தின் கூட்டு முன்னணிக்கு உங்கள் எழுத்து உறுதுணையாகட்டும் என்று எழுதி கலை மக்களுக்கானது என அறிவிக்கும் கொள்கை கொண்டவர்.

திருமணமே செய்யாமல் தொழிலாளர்களின் துயர் துடைக்க உழைத்த கவிஞர் இறுதி காலத்தில் காசநோய்க்கு உள்ளாகி தான் பிறந்த ஆடூர் கிராமத்தில் 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் நாளன்று மறைந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *