வெறுப்பை காட்டுவதாலோ அச்சுறுத்தல்கள் செய்வதாலோ ஒருபொழுதும் விவசாயிகளுக்கான ஆதரவு மாறாது

தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ததாக வெளியான தகவல்களுக்குப் பிறகும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் வியாழக்கிழமை மீண்டும் கருத்து தெரிவித்து உள்ளார்.

“நான் விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறேன்; நீங்கள்
வெறுப்பை காட்டுவதாலோ அச்சுறுத்தல்கள் செய்வதாலோ ஒருபொழுதும் அது மாறாது”
என்று கூறியுள்ளார்.

புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில் தன்பெர்க், ” இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்” என்று எழுதினார். அதன்பின் தான் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவரது பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இருக்கிறது என்று செய்திகள் பரப்பப்பட்டது. அதன் பின் மீண்டும் அவர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பாப் பாடகி ரிஹானா ட்வீட் செய்ததையடுத்து புதன்கிழமை முதல் விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனத்தை பெறத் துவங்கியது. அதன்பின் உலக அளவில் பிரபலமானவர்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

சர்வதேச கண்டனத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தவர்களின் கருத்துக்களுக்கு ஒரு உள்நோக்கத்தை கற்பித்திருந்தது.

மேலும் பல நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் கூடி நடத்தும் போராட்டத்தை இந்தியாவின் சில பகுதிகளில் “மிகச் சிறிய எண்ணிக்கையிலான விவசாயிகளால்” நடத்தப்பட்டதாக கூறியது.

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்குப் பிறகு இந்திய நடிகர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், உழவர் போராட்டங்கள் குறித்து நீண்ட காலமாக மௌனமாக இருந்தவர்கள், அரசுக்கு ஆதரவாக ட்வீட் செய்யத் தொடங்கினர். அவர்களில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோர் அடங்குவர். இவர்கள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தியிருந்தனர்.

இதே காலகட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான ஹேஷ்டேக்கைப் பதிவிட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.

அந்தக் கணக்குகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக இந்திய அரசு புதன்கிழமை ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுபோன்ற 250 கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு மைக்ரோ பிளாக்கிங் தளத்திற்கு அரசாங்கம் திங்களன்று உத்தரவிட்டது.

விவசாயிகள் போராட்டத்தில் ஆதரவான கருத்துக்கள் எதுவும் வெளியாவதை தடுப்பதற்காக அடிப்படை கருத்துரிமைக்கு எதிரான செயல்பாடுகளில் தற்பொழுது இந்திய அரசு இறங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *