2016 செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு 75 நாட்களாக அளிக்கபட்ட சிகிச்சை பலனளிக்காமல்,2016 டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன் இரண்டு நாட்களாக 4 ஆம் தேதி மாலை முதல் இன்று வரை நடக்கும் நிகழ்வுகள் தமிழக மக்களுக்கு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
நான்காம் தேதி மாலை ஆறு மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு பதட்டமான சூழல் நிலவத் துவங்கியது.அன்றிரவே அரசின் சில அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்தனர். மாலை 6.30 மணிக்கு சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் வருகை தந்தார். இரவு ஏழு மணிக்கு ஜெயலலிதாவின் அனைத்து அரசு பொறுப்புகளையும் நிர்வகிக்கும் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வருகை தந்தார்.அதற்கு பின் 7.15 மணியளவில் ஆயுத படையினர் அப்பலோ முன்பு குவிக்கபட்டதை தொடர்ந்து, ஊடகங்களில் முதல்வரின் உடல்நிலை குறித்த விவாதங்கள் பரபரப்பாக நடந்தது.
அதனால் தமிழகம் முழுவதும் ஒரு அசாதாரன சூழல் உருவாகி அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ நோக்கி படையெடுக்க முனைந்தனர்.
இரவு ஒன்பது மணிக்கு அப்பல்லோ மருத்துவமனை செயல் அதிகாரி, ‘மாலையில் முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.அதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு,மருத்துவ குழு கண்காணித்து வருகிறது’, என தெரிவித்தார்.
மகாராஷ்டிர ஆளுநராகவும் தமிழகத்தின் பொறுப்பாளுனராகவும் இருந்த வித்தியாசாகர் ராவ் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தார்.இரவு 12 மணிக்கு அப்பல்லோவிற்கு வித்யாசாகரும் அப்பல்லோவின் தலைவர் பிரதாப் ரெட்டியும் வந்தனர்.முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்த ஆளுநர் எந்த தகவலும் சொல்லாமல் ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.
அமைச்சரவையை புறக்கணித்த மத்திய அரசு
இதன் பின் நடந்தவைகளை, நாம் உற்றுப் பார்க்கின்ற போதுதான் சில விடையங்களை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அரசின் உள்துறை அமைச்சரை கலந்தாலோசிக்காமல்,அன்று இரவு வரை மும்பையில் இருந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகரிடம் தமிழகத்தின் நிலை குறித்து அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசிப்பதாகவும்தேவைபட்டால் துணை ராணுவம் வரும்,என்று செய்திகளை பரப்பியதை தொடர்ந்து இந்த செய்தியின் மூலமாக பரபரப்பை அதிகப்படுத்தி கொண்டே இருந்தார்கள்.
அதே வேலையில் சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரத்தை மாற்றி அமைப்பதாகவும் மத்திய அரசின் இரயில்வே துறை அறிவித்தது.தமிழகத்தில் பதட்ட சூழலை உருவாக்க பல முயற்சிகள் நடந்துக்கொண்டிருந்த பொழுதே தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து தமிழக காவல்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் என அனைவரையும் புறக்கணித்து விட்டு ஆளுநரை மையப்படுத்தி மத்திய பா.ஜ.க அரசு செயல்படத் துவங்கிறது.
மறுநாள் காலையில் தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
ஜெர்மனுக்கு செல்ல வேண்டிய தனது பயணத்தை தவிர்த்து விட்டு அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை அப்பல்லோ வந்தார்.வெங்கையா நாயுடு மாலை சென்னை வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. கூடவே தமிழக ஆளுநரிடம் சட்டம் ஒழுங்கு குறித்து விசாரிப்பதாகவும் தேவைப்பட்டால் துணை ராணுவம் வருவதாகவும் செய்திகள் மீண்டும் வெளியிடப்பட்டன.
அதிமுக சடடமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைமையை தேர்ந்தெடுக்காமல் தடுத்தது யார்?
காலை 11 மணியளவில் அப்பல்லோ வளாகத்திலேயே அதிமுக முன்னனியினர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,எம் எல் ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கபடவில்லை.
அதே நேரத்தில் அன்று மாலையில் அதிகாரபூர்வ எம் எல் ஏ-க்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிமுக-வினரின் அதிகாரபூர்வ எம் எல் ஏ-க்கள் கூட்டம் நடப்பதாக அறிவிக்கபட்ட மாலை ஆறு மணிக்கு ஜெயலலிதா குறித்த தகவல்கள் வரும் என்று பா.ஜ.க-வின் சுப்ரமணியன் சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
‘வதந்தி பரப்புபவர்களை கைது செய்வோம்’, என்று சொன்ன தமிழக காவல்துறை சுப்பிரமணியசாமி மீது வழக்கு பதிவு செய்ததா என்று தெரியவில்லை.காவல் துறையினர் விடுப்பு எடுக்க வேண்டாம் என்று காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் அறிவிப்பு வெளியிட்டார்.தமிழகத்திற்கு கூடுதலாக இரண்டு ஐ.ஜி-க்கள் நியமிக்கபட்டார்கள். அப்போதும் கூட மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்புவதாக தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தது.
மாலை 5.30 மணி அளவில் அதிமுக-வின் எம் எல் ஏ-க்கள் கட்சி அலுவலகத்தில் கூடியிருந்த போது,திடிரென முதல்வர் மரணம் என்று தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் ‘இது தவறான செய்தி ‘,என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனால் மாலையில் நடைபெற இருந்த எம் எல் ஏ-க்கள் கூட்டம் இரவு பதினோரு மணிக்கு மாற்றபட்டது. அதற்குள் வெங்கையா நாயுடுவும் வந்துவிட்டார் .
ஒரு முதல்வரின் மரணச் செய்தியை எப்படி ஊடகங்கள் தவறாக சொல்லும்..? அரசின் நிறுவனங்களோ, உள்துறையோ அல்லது உளவு துறையோ தெரிவிக்காமல் இந்த தகவல் பரவி இருக்காது.
ஒரு வேலை தெரியாமல்தான் பரப்பபட்டது என்றால் இந்நேரத்திற்குள் அதை செய்தது யார் என்று கண்டுபிடித்து,நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் அதனை மிக எளிதாக கடந்து செல்ல முடிகிறது எனில் இந்த வதந்தியானது எதோ ஒரு காரணத்திற்காக பரப்பப்பட்டிருக்கிறது.
அப்படியென்றால் மத்திய அரசிற்கு தெரிந்தேதான் இது நடந்துள்ளது.
இந்த தகவல் பரவியதால் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வு அதிமுக
எம் எல் ஏ-க்கள் சந்திப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டதுதான். வெங்கையா நாயுடு வருகைக்கு முன்னால்,இரவு பதினோரு மணிக்கு அதிமுக எம் எல் ஏ-க்கள் மீண்டும் சந்தித்த போது முதல்வரின் இறப்பு செய்தியானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது .
அதிமுக ஒன்று கூடி தனது தலைவரை தேர்ந்தெடுப்பதை தடுப்பற்காகவே மாலை 5.30 மணிக்கு பாஜக தான் இந்த வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். வெங்கையா நாயுடு சென்னை வந்த பிறகு,மத்திய அரசானது சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநரை ஆலோசிப்பதாக சொல்லிக்கொண்டிருந்த செய்தி நிறுத்தப்பட்டது.
அப்படியென்றால் ஆளுநரிடம் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசிப்பதாக பரப்பட்ட செய்தியென்பது அதிமுக-வினருக்கு ஆளுநர் ஆட்சி குறித்த அச்சத்தை ஏற்படுத்ததான் என்பதும்,வெங்கையா நாயுடு வருவதற்கு முன் தங்கள் தலைவரை அவர்கள் தேர்வு செய்யக்கூடாது என்றும் பி.ஜெ.பி விரும்பியுள்ளது.
முதல்வர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட அந்த இரவிலேயே,மாலை 6 மணிக்கு நல்ல அடக்கம் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?.
தமிழக முழுவதும் பேருந்துகள் இல்லாத போது ஒன்னரை கோடி உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவரைக் காண, இறுதி அஞ்சலி செலுத்த அவரின் தொண்டர்கள் வருவதை தடுத்து,ஜெயலலிதா என்கிற மக்கள் தலைவரின் கதையை ஒரே நாளில் முடித்து வைக்க வேண்டிய அவசியம் யாருக்கு வந்தது?.
இன்றும் அப்பாவி அதிமுக தொண்டன் மெரினாவிற்கு வந்து மொட்டை போட்டுக்கொண்டிருக்கிறான்.
ஆறாம் தேதி இராஜாஜி அரங்கில் முதல்வர் வைக்கப்பட்டிருந்த மேடையில் சசிகலாவும் மறுபக்கம் வெங்கையா நாயுடுவும் இருந்தார்கள்.முதல்வரின் உடலுக்கு அருகில் அவர் கட்சிக்காரர்கள் நண்பர்கள் இருப்பதுதான் நடைமுறை. ஆனால் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவோ,’ யார் எங்கு இருக்க வேண்டும்; எங்கு நிற்கவேண்டும்’, என்று அந்த இடத்தின் மேற்பார்வையாளர் போல அங்கு அனைவருக்கும் உத்தரவிட்டு கொண்டிருந்தார்.
நடைமுறையில் அதிமுக-வின் முன்னனியினரை தவிர மற்ற எம்எல்ஏ-க்கள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்தனர். மாற்றுக் கட்சியினருக்கென்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.அஞ்சலி செலுத்திவிட்டு அவர்கள் அங்கு செல்வதும்,மத்திய அமைச்சர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அவர்கள் செல்வதும்தான் வழக்கம். நடைமுறையை மீறி வெங்கையா நாயுடு முதல்வரின் உடல் அருகில் நாற்காலி போட்டு அமர்ந்து, தன் ஆதிக்கத்தை காட்டிக்கொண்டே இருந்தார்.அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் படிகட்டுகளில் தான் அமர்ந்து இருந்தார்.
இறுதியாக எம்ஜியார் நினைவிடத்தில் இறுதி மரியாதை செலுத்தும் போதுக் கூட ஆளுநருக்கு அடுத்து பொறுப்பு முதல்வர்தான் அஞ்சலி செலுத்த வேண்டும். அதுதான் நடைமுறையாக இதுவரை இருந்துள்ளது.ஆனால் அப்பொழுதும் கூட முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு முன் வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.நீங்கள் எங்களுக்கு பிறகுதான் என்று குறிப்பால் உணர்த்துவதுதான் அது.
இறுதி நிகழ்வில் ஆதிக்கம் செலுத்தியதை,’முதல் நாள் மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பை தடுக்க முதல்வர் இறந்ததாக பரப்பியது முதல் வெங்கையா நாயுடு வரும்வரை ஆளுநர் ஆட்சி குறித்த அச்சத்தினை உருவாக்கியது,ஐந்தாம் தேதி காலையிலேயே மற்ற மாநில பேருந்துகளை நிறுத்தி பதட்டத்தை உருவாக்கியது,முதல்வர் குறித்த தகவல் வரும் என்று சுப்பரமணியசாமியின் டிவிட்டர் பதிவு,முதல்வர் இறந்ததாக 5.30 மணிக்கு வதந்தி பரப்பிய தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டே முதல்வர் இறுதி ஊர்வலத்தின் போது வெற்றி சிரிப்போடுவந்தது’,என எல்லாவற்றையும் சேர்த்து நாம் பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சி முதல்வர் மரணத்தை முன்வைத்து நடத்திய சதிகளை நாம் புரிந்துக் கொள்ளமுடிகிறது.
மா.நடராசன் திராவிட இயக்கத்தின் ஆட்சியை,’அண்ணா, புரட்சி தலைவர் எம்ஜியார், புரட்சி தலைவி அம்மா உள்ளிட்டவர்கள் விதைத்த விதைகள் இருக்கும்வரை இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது’, என்று பேட்டி கொடுக்கும் போதே அருகில் ஆசிர்வாதம் ஆச்சாரியா நின்றுக்கொண்டிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் தமிழக அதிமுக பிரதிநிதிகளுடன் பா.ஜ.க-வினர் தங்கள் உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.கேரள பாஜகவின் பொது செயளாலர் சுரேந்திரன், ‘தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’,என்று வெளிப்படையாகவே கூறினார்.
பாஜகவின் சுப்ரமணிய சாமி,’இந்த இடைவெளியை பாஜக-வினர் பயன்படுத்த வேண்டும், மேலும் அதிமுக உடையும்’, என்றும் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை பயன்படுத்தி தமிழகத்தில் தங்கள் அரசியலை விதைத்து விடலாம் என்று பிஜேபியினர் நினைப்பதனை புரிந்து கொண்டதால்தான் என்னவோ, முதல்வர் இறந்த செய்தி வந்தவுடனே அப்பல்லோ வாசலில் நின்றிருந்த ஜெயலலிதாவின் தொண்டன் பாஜக-வை திட்டி கொண்டிருந்தான் போல.