அன்னை சத்தியவாணி முத்து அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
திராவிட இயக்க பெண் போராளிகள் வரிசையில் முதன்மையானவராகத் திகழ்ந்தவர் அன்னை சத்தியவாணி முத்து அம்மையார். நாகைநாதன் – ஜானகி அம்மாள் தம்பதியின் மகளாக 1923 பிப்ரவரி 15 அன்று பிறந்தார் சத்தியவாணி.
நீதிக்கட்சி முன்னெடுத்த அரசியலில் ஈர்க்கப்பட்ட நாகைநாதன் சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளிலும் பங்கெடுத்தார். தென்னிந்திய பௌத்த சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். அதனால் சிறுவயது முதலே சுயமரியாதைக் கொள்கையை மகளுக்கு கற்பித்து வளர்த்தார்.
திருமண மேடையே முதல் மேடை
சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய எம்.எஸ்.முத்து என்பவருடன் ஹோமியோபதி மருத்துவம் படித்த சத்தியவாணி அவர்களின் திருமணம் திரு.வி.க தலைமையில் 1943 ஜனவரி 17 அன்று நடந்தது. திருமண விழாவில் நன்றியுரை வழங்க வருமாறு திடீரென எம்.எஸ்.முத்து மனைவியை அழைக்க தனது திருமண மேடையே அன்னை சத்யவாணி அவர்களுக்கு முதல் மேடையானது.
கணவர் காங்கிரஸ் அரசியலில் ஈடுபாடு கொண்டவர் என்றபோதும், அன்னை சத்யவாணி திராவிட இயக்க அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். திராவிட இயக்க மேடைகளில் முக்கிய பேச்சாளராகத் திகழ்ந்தார்.
இந்தி எதிர்ப்புக் குரல்
பல மேடைகளில் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் இயக்கங்களின் வரலாற்றைத் தொகுத்து உரையாற்றியவர். ’அன்னை’ என்னும் இதழின் ஆசிரியர். இந்தி திணிப்புக்கு எதிரான முதல் எதிர்ப்புக் குரல்களில் ஒன்று சத்தியவாணி அவர்களின் குரல். குடியரசு இதழில் ’ஹிந்தியின் ரகசியங்கள்’ என்ற இந்தி எதிர்ப்புக் கட்டுரையை எழுதினார்.
கர்ப்பிணியாக சிறை சென்று சிறைவாசத்தின் போதே பிரசவம்
சத்தியவாணி முத்து 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் உறுப்பினராக இருந்தார். 1953-ல் குலக்கல்வி திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். 1959-1968 காலகட்டத்தில் திமுக-வின் கொள்கை விளக்க செயலாளராக பதவிவகித்தார்.
குலக்கல்வி திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியாக பங்கெடுத்தவர். வேலூர் சிறையிலிருந்து பிரசவத்திற்கு நேரடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டின் முதல் தலித் பெண் அமைச்சர்
1957 சட்டப்பேரவை தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்குப்பிறகு தி.மு.க. சார்பில் இரண்டு முறை பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
1967-ம் ஆண்டு தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார். அவரை தி.மு.க தலைவர் அண்ணா தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சராக நியமித்தார். தமிழ்நாட்டில் முதல் தலித் பெண் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு அலுவல் பயணம் மேற்கொண்ட முதல் அமைச்சர்
அமைச்சராக பதவியேற்ற பின் முதல் அலுவல் சார் வெளிநாட்டுப் பயணமாக சத்தியவாணி மொரீஷியஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார், தன் அமைச்சரவையின் பெண் அமைச்சர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்று அவரை வழியனுப்பவும், மீண்டும் வரவேற்கவும் நேரில் வந்தார் அப்போதைய முதல்வர் அண்ணா.
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கான பல்வேறு திட்டங்கள்
அதற்குப் பின் வந்த கருணாநிதி ஆட்சியிலும் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகத் தொடர்ந்தார். அவரது காலத்தில்தான் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பெண்கள், மாணவர்கள், குழந்தைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
1973-ல் அவரது முயற்சியில்தான் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 508 மாணவர் விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டன. இது தமிழகத்தில் பின்தங்கிய கிராமப்புற பட்டியல் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியது.
இந்தியாவில் அம்பேத்கர் பெயரில் முதல் கல்லூரி தமிழ்நாட்டில் உருவாக்கம்
ஹியூமன் ரைட்ஸ் சொஸைட்டி என்ற மனித உரிமை சங்கத்தையும் நடத்தினார் சத்தியவாணி. முன்னாள் அமைச்சர் ஓ.பி.ராமன், குசேலர் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அந்த சங்கம் டாக்டர் அம்பேத்கர் பெயரில் ஒரு கல்லூரியை வடசென்னை பகுதியில் அமைக்க முடிவெடுத்தது. அதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டு அதன் பொருளாளராக அப்போது தி.மு.க-வில் இருந்த எம்.ஜி.ஆர்-ஐ நியமித்து நிதி திரட்டியது. இந்தியாவில் அம்பேத்கர் பெயரில் உருவான முதல் கல்லூரி தமிழ்நாட்டில் தான் அதுவும் பெரம்பூரில் தான் அமைந்தது.
அண்ணா பெயரில் சமூகப் பணி இல்லம்
டாக்டர் அம்பேத்கருக்கு கல்லூரி அமைக்க முன்னெடுத்ததுபோல பேரறிஞர் அண்ணா பெயரில் ஒரகடத்தில் 1971-ம் ஆண்டு, சமூகப் பணி இல்லம் ஒன்றையும் தொடங்கி நடத்திவந்தார் சத்தியவாணி. குழந்தைகள் காப்பகம், மகளிர் தொண்டகம், தையற்பயிற்சிக்கூடம் என்று பல பணிகள் அங்கு நடைபெற்றன. அந்த இல்லத்தில் தினமும் 700 குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.
மத்திய அமைச்சரான முதல் தமிழ்ப்பெண்
1979-ம் ஆண்டு சரண்சிங் பிரதமராகப் பதவியேற்றபோது மத்திய அமைச்சரானார் சத்தியவாணி முத்து. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவர் மத்திய அமைச்சரானது அதுவே முதன்முறை. திராவிடக் கட்சிகளின் முதல் மத்திய அமைச்சரும் அன்னை சத்தியவாணி முத்து தான்.
’எரிக்கப்ட்டவள்’ என்னும் வரலாற்று நூலை எழுதி 1955 மே மாதம் சென்னையிலிருந்த மதி மன்றம் என்னும் பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார். நவம்பர் 11, 1999 அன்று வயது முதுமையின் காரணமாக இயறக்கை எய்தினார். தமிழ்நாட்டின் முதல் தலித் அமைச்சரின் நினைவு நாள் இன்று.