சி.இலக்குவனார்

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த இலக்குவனார்

முனைவர் இலக்குவனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு – Madras Radicals

“ஆரியத்தை எதிர்த்த முதலாவது புரட்சிப் புலவர் திருவள்ளுவர். மக்களின் வாழ்வுக்கேற்ற அறம், பொருள், இல்லறம் பற்றித்தான் வள்ளுவர் எழுதினாரே ஒழிய, ஆரியக் கருத்துப்படி இருக்கும் மோட்சம் பற்றி எழுதவில்லை
என்று சொன்ன இலக்குவனாரின் நினைவு நாள் இன்று.

நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் வாய்மேடு எனும் கிராமத்தில் சிங்காரவேலர் – இரத்தினம் அம்மையார் எனும் தம்பதிக்கு மகனாக 17.11.1910-ல் பிறந்த இலட்சுமணன் தான் பின்னாளில் பேராசிரியர் இலக்குவனார் ஆனார்.

சொந்த ஊரான வாய்மேட்டில் திண்ணைப்பள்ளியிலும், தொடக்கப் பள்ளியிலும் படித்த இலட்சுமணனின் கல்வி, தந்தையின் மரணத்தால் ஐந்தாம் வகுப்போடு தடைபட்டது.

மீண்டும் தாயாரின் முயற்சியால் தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் இராசாமடத்தில் தொடக்கப்பள்ளியில் தமிழறிஞர் சாமி சிதம்பரனாரின் மாணவராகப் படித்தார். அப்பொழுது சாமி சிதம்பரனார் அவர்கள் இலட்சுமணன் என்ற பெயரை தமிழ்ப்படுத்தி இலக்குவன் என்று மாற்றினார்.

திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1936-ம் ஆண்டில் புலவர் பட்டமும் சென்னையில் பி.ஓ.எல் பட்டமும் படித்தவர். Origin and Growth of Tamil Language எனும் தலைப்பில் ஆய்வுசெய்து எம்.ஓ.எல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

புலவர் பட்டம் பெற்றதுமே ஆசிரியர் பணிக்குச் செல்லத் துவங்கினார். முதல் பணியினை தஞ்சாவூர் மாவட்டத்தின் நிர்வாக உயர்நிலைப் பள்ளியில் திருவாரூரில் துவங்கினார். நீதிக்கட்சியின் முன்னோடித் தலைவரான செ.தெ.நாயகம் அவர்கள் துவங்கிய குலசேகரன்பட்டினம் தமிழ் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். அதன் பின் நெல்லை ம.தி.தா இந்து கல்லூரி, விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி, ஈரோடு மகாசன கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி, நாகர்கோயில் இந்து கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, ஆந்திராவிலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம் என பல இடங்களில் பணியாற்றிய இலக்குவனார், நாகர்கோவில் இந்து கல்லூரி முதல்வராக பணியில் இருந்தபோது ஓய்வு பெற்றார்.

இவரது மாணவர்களில் முக்கியமானவர்கள் கலைஞர் மு.கருணாநிதி, விடுதலைப் போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு, இந்தி எதிர்ப்பு தளபதிகளாக இருந்த காளிமுத்து, பாவலர் இன்குலாப், பா.செயபிரகாசம், நா.காமராசன் உள்ளிட்டவர்கள் ஆவர்.

கருணாநிதி அவர்கள் தனது நெஞ்சுக்கு நீதியில், உயர்நிலைப் பள்ளி இறுதி வகுப்பு பயின்றபோது தமக்கு தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர் என்று இலக்குவனார் அவர்களைக் குறிப்பிடுகிறார்.

ஆர்.நல்லகண்ணு அவர்கள் ”தமிழ் வகுப்புகளில் வருகைப் பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி ’உள்ளேன் ஐயா’ என கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர் இலக்குவனாரே” என கூறியுள்ளார்.

1961 முதல் 1965 வரை மதுரை தியாகராசர் கலை கல்லூரியில் பணியாற்றியபோது இந்தி எதிர்ப்புப் போரில் முன்னணியில் தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நின்றதற்கு இவரே காரணம். அதனால் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.

அதேபோல் தமிழே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நெடும் நடைபயணத்தை மேற்கொண்டபோது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் பேராசிரியர் இவரே.

இலக்குவனாரின் நடைபயணம்

பலமுறை பணிநீக்கம், இடமாற்றம் காரணமாக அவரது முனைவர் பட்ட ஆய்வு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. தனது 53-வது வயதில் 1963-ம் ஆண்டு தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து “Tholkappiyam in English with critical studies” எனும் தலைப்பில் ஆய்வை முடித்து முனைவர் பட்டம் பெற்றார்.
தொல்காப்பியத்தின் காலம் ‘கி.பி. 2-ம் நூற்றாண்டு’ என்று பல அறிஞர் பெருமக்கள் கூறிய நிலையில் “கி. மு. 7-ம் நூற்றாண்டே தொல்காப்பியத்தின் காலம்” என்று ஆதாரங்களோடு நிருபித்தவர் இலக்குவனார்.

முனைவர் பட்டம் பெற்றதற்காக தமிழ்நாடு முழுவதும் இவருக்கு பாராட்டு விழாக்கள் நடந்தது. முனைவர் பட்ட ஆய்விற்காக வேறு யாருக்கும் இதுவரை இப்படி பாராட்டு விழாக்கள் நடந்தது இல்லை. இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை எழுதினார்.

அது மட்டுமல்ல அண்ணா தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றபின் சென்ற வெளிநாட்டு பயணங்களில் போப் ஆண்டவர், யேல் பல்கலைக்கழகம் என பல இடங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவுப் பரிசாக இலக்குவனாரின் தொல்காப்பிய புத்தகத்தையே வழங்கினார்.

சங்க இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியராக இருந்தவர். திராவிடன் ஃபெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தினார்.

சங்க இலக்கியத்தை சிறுகதையாக, நாடகங்களாக மாற்றும் முயற்சியை இவர்தான் துவங்கி வைத்தார்.

தொல்காப்பியம் உட்பட ஒன்பது ஆங்கில நூல்களும், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் தமிழ் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள் உள்ளிட்ட பதினான்கு தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதல் பாடமொழியாகவும், ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் பாடத்தேர்வில் திருக்குறளுக்கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்ற கல்விக் கொள்கையை முன்வைத்தவர் இலக்குவனார்.

கல்லூரி பேராசிரியர்கள் சார்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழக புலவர் குழுவின் செயலாளராகவும் பொறுப்பேற்று செயல்பட்டவர்

”தமிழகத்தின் உரிமை உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது உறு கடனாம் என்று உறுதி கொள்ளச்செய்து; தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பயன் இதுவே யாகும். அதுவே என் இலக்கு”
என்று வாழ்ந்தவர் 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ம் நாள் இயற்கை எய்தினார்.

அவர் நினைவாக சொந்த ஊரான வாய்மேடு உயர்நிலை பள்ளிக்கு இலக்குவனாரின் பெயர் சூட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ் காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல், தமிழ் அரிமா, 20-ம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல் என பல அடைமொழிகளால் புகழப்பட்டவர் இலக்குவனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *