சு.வெங்கடேசன்

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? கலாச்சார நிபுணர் குழுவினை எதிர்த்து சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்

12,000 ஆண்டுகளுக்கு முன்பான இந்திய கலாச்சாரத்தின் தொன்மையான வரலாற்றினை ஆய்வு செய்து நிறுவுவதற்காக, 16 உறுப்பினர்களைக் கொண்ட கலாச்சார நிபுணர் குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளதாக மத்திய கலாச்சார சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் படேல் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்தியத் தொல்பொருள் துறைத் தலைவர் கே.என்.தீட்சித், டாக்டர் ஆர்.எல்.பிஷ்த், டாக்டர் பி.ஆர்.மணி, பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, டாக்டர் ரமேஷ்குமார் பாண்டே, பேராசிரியர் மக்கன்லால், டாக்டர் ஜி.என்.ஸ்ரீவத்ஷவ, நீதிபதி முகுந்த்காந்த் சர்மா, பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, பேராசிரியர் ஆர்.சி.சர்மா, பேராசிரியர் கே.கே.மிஸ்ரா, டாக்டர் பல்ராம்சுக்லா, பேராசிரியர் ஆஷாத் கௌசிக், பண்டிட் எம்.ஆர்.சர்மா, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், தொல்பொருள் ஆய்வுத் துறை ஆகியவைகளின் இரண்டு பிரதிநிதிகள் ஆகியோரை இக்குழுவின் உறுப்பினர்களாக மத்திய  அரசு அறிவித்துள்ளது.

இந்த குழு முறையாக அமைக்கப்படவில்லை என்று பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்திருந்தது. இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வேங்கடேசன் இந்த குழுவை கலைக்க வேண்டும் என்று பேசினார்.. 

மக்களவை பூஜ்ஜிய நேரத்தில் சு.வெங்கடேசன்  பேசும்பொழுது, ”இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக கலாச்சாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த குழுவில் பன்முகத் தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, தலித்தோ, பெண்களோ இல்லை. இந்து உயர்சாதியினர் மட்டுமே இந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். 

மத்திய அரசு செம்மொழி என்று அங்கீகரித்த தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் ஆய்வாளர்கள் யாருக்கும் இதில் இடமில்லை, ஆனால் சாதி சங்கத் தலைவருக்கு இடமிருக்கிறது. விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா?

வேத நாகரீகத்தைத் தவிர வேறு நாகரீகம் இல்லையா? சமஸ்கிருதத்தைத் தவிர வேறு ஆதி மொழி இல்லையா?

ஜான் மார்சல், சுனில் குமார் சாட்டர்ஜி துவங்கி ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர் பாலகிருஷ்ணன் வரை பல் வேறு ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளெல்லாம் நிராகரிக்கப்பட்டு புராணங்களை வரலாறு என்று மாற்ற இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதா?  

எப்படி மண்ணுக்குள் இருக்கும் வேர்களை விமானங்களில் பறந்து கொண்டு பார்க்க முடியாதோ, அதேபோல இந்த மண்ணின் பண்பாட்டினை சாதியத்தின் பீடங்களின் மேலே இருப்பவர்களால் ஒரு போதும் எழுத முடியாது. எனவே இந்தக் குழுவை கலைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று ஆவேசமாகப் பேசினார்.

இந்தியத் துணைக்கண்டத்தின் தேசிய இனங்களின் வரலாற்றை மறைத்து விட்டு, தொன்மையான சமய தத்துவங்களை திரித்துவிட்டு, இந்திய வரலாற்றினை தவறாக திருத்தி எழுதுவதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு மட்டங்களிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 

One Reply to “விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? கலாச்சார நிபுணர் குழுவினை எதிர்த்து சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *