ராஜ்யசபா விவசாய மசோதா

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பாராளுமன்ற ஜனநாயகம்! விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை சரியா?

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும் முதலில் மசோதாக்களாக முன்மொழியப்படும். பின் பாராளுமன்ற விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பின் வழியாக சட்டமாக்கப்படும். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்ற பிறகுதான் மசோதாக்களை முறையாக சட்டமாக்குவது வழக்கம்.

மசோதாக்கள் குறித்தான பாராளுமன்ற விவாதங்கள் ஒவ்வொரு மசோதாவின் தன்மைக்கு ஏற்றார்போல் வேறுபடும். குறிப்பாக நேற்று ஆகஸ்ட் 20 அன்று விவசாய மசோதாவுக்கு எதிராக குரலெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்ற நடைமுறை விதி 252-ஐ தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மசோதா நிறைவேறியதாக பாஜக அரசு அறிவித்தது மிகப்பெரும் சர்ச்சைக்கு உள்ளானதுடன், பாராளுமன்றம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதா என்ற கேள்வியினையும் எழுப்பியிருக்கிறது.

பாராளுமன்ற அவையின் நடைமுறை விதி 252, 253 மற்றும் 254 ஆகியவை ராஜ்யசபாவில் ஒரு மசோதாவை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களை பரிந்துரைக்கிறது. அதன்படி குறிப்பிட்ட துறையின் அமைச்சர் அல்லது அந்த துறையைச் சார்ந்தவர்கள் முன்மொழியும் மசோதாவானது பாராளுமன்ற அவையின் முன் விவாதத்திற்கு வைக்கப்படும். விவாதத்தின் கால அளவு மசோதாவின் தன்மையைப் பொருத்து அமைத்துக் கொள்ளப்படும். 

குரல் வாக்கெடுப்பு முறை

இந்த முறையினைப் பொறுத்தவரை ஒரு மசோதாவின் மீதான விவாத காலத்தின் நிறைவுக்குப் பின் அவையின் தலைவர், ”இந்த மசோதாவை ஆதரிப்பவர்கள் ”ஆம்” என்று குரல் எழுப்பவேண்டும், மறுப்பவர்கள் ”இல்லை” என்று குரல் ஏழுப்பவேண்டும்” என்று கூறுவார். 

ஆம் என்பதற்கு அமோக ஆதரவு இருந்தால் அதனை ஏற்றுக் கொண்டு அதையே இறுதி முடிவாக அறிவித்து மசோதாவை நிறைவு செய்வார். இந்த முறையில் வாக்குகள் பதிவு செய்யப்படாது மற்றும் வாக்கு எண்ணிக்கையையும் வெளியிடத் தேவை இல்லை.

ஒரு குறிப்பிட்ட மசோதாவிற்கு அதிபெரும்பான்மையான ஆதரவு இருந்து, பெருமளவில் எதிர்ப்பே இல்லாத போதுதான் குரல் வாக்கெடுப்பின் வழியாக ஒரு மசோதா நிறைவேறியதாக உறுதி செய்ய முடியும். ஆனால் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய முக்கியமான சிக்கல் வாய்ந்த  மசோதாவினை இந்த முறையில் நிறைவேற்றுவது அடிப்படையிலேயே தவறான உதாரணமாக நிற்கிறது. 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் விவசாய மசோதாக்களை எதிர்த்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இம்மசோதாவை திரும்பப் பெறக் கோரி தங்கள் குரலை எழுப்பி வருகிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவிற்கு குரல் வாக்கெடுப்பு முறையில் முடிவினை அறிவித்தது அடிப்படையில் பாராளுமன்ற ஜனநாயகத்தினை கேள்விக்கு உள்ளாக்கும் செயலாக உள்ளது.

இதையும் படிக்க:

  1. WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்
  2. விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்

அவை பெரும்பான்மை இல்லாத பாஜக

சிக்கலான விவகாரங்களில் குரல் வாக்கெடுப்பின் மூலமாக அவைத் தலைவர் துல்லியமான முடிவுக்கு வர முடியாது.  எந்த பக்கம் சத்தம் அதிகமாக வருகிறது என்பதை  வைத்து நாடே காத்திருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையில் முடிவெடுக்க முடியாது. 

மேலும் ராஜ்யசபாவைப் பொறுத்தவரை பாஜகவிற்கு அனைத்து மசோதாக்களையும் தனியாக நிறைவேற்றக் கூடிய அளவிற்கு ’மூன்றில் இரண்டு’ என்ற பெரும்பான்மையும் கிடையாது. பாஜகவின் கூட்டணியைச் சேர்ந்த அகாலி தளத்தின் சார்பாக அமைச்சராக இருந்தவரே இந்த விவகாரத்தில் பதவி விலகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளும், பாஜகவின் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியுமே இந்த மசோதா விவகாரத்தில் சந்தேகத்தினை எழுப்பியுள்ள போது, குரல் வாக்கெடுப்பின் மூலம் எப்படி முடிவு செய்ய முடியும்?

குரல் வாக்கெடுப்பில் ஒருமித்த கருத்து இல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்து இல்லாத நிலையில் குரல் வாக்கெடுப்பின் முடிவினை உறுப்பினர்கள் கேள்விக்கு உட்படுத்தி, சந்தேகத்தினை எழுப்பும்போது, நேரடி வாக்கெடுப்பு முறைக்கு (Division method) அவைத்தலைவர் உத்தரவிட வேண்டும். பாராளுமன்ற ராஜ்யசபாவின் நடைமுறை விதி இதனை தெளிவாக வரையறுக்கிறது. ”குரல் வாக்கெடுப்பிற்கு உள்ளாக்கப்பட்ட ஒரு கருத்தானது, மீண்டும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டால், தானியங்கி வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலமாகவோ அல்லது லாபிகளுக்கு உறுப்பினர்களை வரச் சொல்வதன் மூலமாகவோ வாக்கெடுப்பினை மீண்டும் நடத்த வேண்டும்.”

”If the opinion so declared [for a voice vote] is again challenged, votes shall be taken by operating the automatic vote recorder or by the members going into the Lobbies.”

குரல் வாக்கெடுப்பிற்கு மாற்றான வழிமுறைகள்

குரல் வாக்கெடுப்பு முறைக்கு மாற்றாக விதி 252 மசோதாவிற்கு ஆதரவானவர்களையும், எதிரானவர்களையும் எழுந்து நின்று ஆதரவு தெரிவிக்கும் வழிமுறையைப் பரிந்துரைக்கிறது.

விதி 253 தானியங்கி வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு நடத்தும் வழிமுறையைப் பரிந்துரைக்கிறது.

விதி 254 லாபிமுறை என்றழைக்கப்படும் கூட்டுமுறையில் வாக்கெடுப்பு நடத்துவதை பரிந்துரைக்கிறது. மசோதாவை ஆதரிப்பவர்கள் வலது பக்கமும், எதிர்ப்பவர்கள் இடது பக்கமும் பிரித்து நிறுத்தப்பட்டு அவர்களின் நிலைப்பாடுகளை குறியூட்டு எண்களினூடாக பாராளுமன்றத்தின் Division Clerk பதிவு செய்வார். பின் அந்த பட்டியல் பாராளுமன்றத்தின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும். அவர் எண்ணி முடிவை அவைத்தலைவரிடம் ஒப்படைப்பார்.

விவசாய மசோதா தொடர்பான வாக்கெடுப்பில் நடந்தது என்ன?

விவசாயம் தொடர்பான மசோதா ராஜ்ய சபாவில் விவாதத்திற்கு வந்த போது அவையின் துணைத் தலைவர் ஹரிவான்ஷ் (Harivansh) விதி 252-ன் அடிப்படையில்  இந்த மசோதாவை ஏற்கிறீர்களா என்று குரல் வாக்கெடுப்பைக் கோரினார். எதிர்க்கட்சிகள் ”இல்லை” என்று குரல் கொடுத்ததை பொருட்படுத்தாமல் ஹரிவான்ஷ் பெரும்பான்மை ”ஆம்” என்று ஏற்றுக்கொண்டது என்று சொல்லி விவசாய மசோதா நிறைவேறியதாக அறிவித்தார். இதனை எதிர்த்து பாஜக அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜ்யசபா அரங்கிற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மசோதாவினை கிழித்தெறிந்து வீசினர்.

போராட்டத்தில் ஈடுபடும் மாநிலங்களவை உறுப்பினர்கள். மசோதாவினை கிழித்தெறியும் திருச்சி சிவா எம்.பி

பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப கோரிக்கை

சில முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன் பாராளுமன்றத்தின் நிலைக் குழுவிடம் (Standing Committe) ஒப்படைக்கப்பட்டு விரிவாக ஆய்வு நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படுவது வழக்கம். எனவே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவிடம் ஒப்படைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஏறத்தாழ 24 பாராளுமன்ற நிலைக் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 21 கீழ்சபை உறுப்பினர்களும், 10 மேல் சபை உறுப்பினர்களும் பங்கு பெறுவார்கள். மசோதா, நிதிநிலை அறிக்கை, சில முக்கிய கொள்கைகள் ஆகியவை நிலைக்குழுவால் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்படும். அவ்வறிக்கையை கருத்தில் கொள்வதும், தவிர்ப்பதும் அரசின் விருப்பம். ஆனால் மசோதா குறித்தான ஆய்வறிக்கை விவாதிக்கப்படும். அதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மசோதா குறித்து தெளிவு பெறுவார்கள்.

ராஜ்யசபா தொலைக்காட்சி நிறுத்தம் 

அந்த வகையில் விவசாய மசோதாக்களையும் பாராளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று பாஜக அல்லாத ராஜ்யசபா உறுப்பினர்களால் கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் அவையின் துணைத்தலைவர் அதையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகமற்ற முறையில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக மசோதாவை நிறைவேற்றுவதிலேயே கவனமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. மேலும் ராஜ்யசபா தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டெரிக் ஓ ப்ரைன், ”பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை மக்கள் பார்த்துவிட கூடாது என்பதற்காக ராஜ்யசபா தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நிறுத்திவிட்டனர். ராஜ்யசபா நிகழ்வை முழுமையாக ஒளிபரப்பாமல்  தணிக்கை செய்தனர்”.என்று குறிப்பிட்டுள்ளார்.  

துணைத்தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

மாநிலங்களவை துணைத்தலைவரின் இந்த போக்கைக் கண்டித்து 12 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். ஆனால் மாநிலங்களவையின் தலைவரான வெங்கைய நாயுடு அதை நிராகரித்துள்ளார்.

8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்

அதுமட்டுமல்லாது மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவான்ஷின் ஜனநாயகமற்ற செயலினைக் கண்டித்த 8 மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து பாராளுமன்ற விவகார அமைச்சர் முரளீதரன் உத்தரவிட்டுள்ளார். 

அவையின் விதிகளை மீறியதாகவும், அவைத்தலைவரிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும் கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சதாவ், ரிபுன் போரா மற்றும் நசீர் ஹூசைன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இளமாறன், கரீம் மற்றும் கே.கே.ராகேஷ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ ப்ரைன் மற்றும் டோலா சென், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஜனநாயகமற்ற முறையில் மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பதன் மூலம் பாராளுமன்ற ஜனநாயகம் பாஜகவினால் மிகப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சத்தினை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *