கவிக்கோ அப்துல் ரகுமான்

நான் கவிஞனாக இல்லாமல் வேறு யாராகவும் இருக்க முடியாது என்று சொன்ன கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

“கவிதை தான் என்னை தேர்ந்தெடுத்தது. நான் கவிஞனாக இல்லாமல் வேறு யாராகவும் இருக்க முடியாது” 

என்று சொன்ன கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் மதுரையில் 1937 நவம்பர் 9-ம் நாள் உருதுக் கவிஞர் மஹி (எ) சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

தனது தொடக்கக் கல்வியையும், உயர்நிலை பள்ளிக் கல்வியையும் மதுரையில் பயின்றவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பையும் முடித்தார். அக்கல்லூரியிலேயே இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

முனைவர் மா.இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ.கி.பரந்தாமனார், அவ்வை நடராசன், அ.மு.பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களின் மாணவர் ஆவார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராக இருந்த பேரா ச.வே.சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அப்துல் ரகுமான் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பான ’பால்வீதி’ கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியிட்டு புதுமை செய்தார். தமிழில் ஹைகூ,கஜல் போன்ற கவிதைகளை அறிமுகப்படுத்தியவரும் இவர் தான்.  

1999-ல் ‘ஆலாபனை’ கவிதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார் 

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய ’தமிழ்நாடு’ எனும் நாளிதழில் பிழை திருத்துநராக சிலகாலம் பணியாற்றினார். அதன்பின் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961-ம் ஆண்டில் வாய்ப்பு கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என படிப்படியாக உயர்ந்து 1991-ம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.

எழுதிய நூல்கள்

நேயர் விருப்பம், ஆலாபனை, இறந்ததால் பிறந்தவன், கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லை, பித்தன், தேவகானம், பறவையின் பாதை, பாலைநிலா ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இவரது கஜல் கவிதைகள் ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.  காக்கைச்சோறு, உறங்கும் அழகி, காற்று என் மனைவி உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். 

அப்துல் ரகுமான் அவர்களின் சில கவிதைகள்

இரு பக்கங்கள்

காலையின் ஒளியில்
கண்கள் திறக்கும்
கமலங்கள் ஒரு பக்கம்
மாலையின் இருளில்
சேலையை அவிழ்க்கும்
குமுதங்கள் ஒரு பக்கம்
தண்ணீர் தேடித்
தவிக்கும் வேர்களின்
தாகங்கள் ஒரு பக்கம்
புண்ணீர் நாறும்
பூமியில் பெய்யும்
மேகங்கள் ஒரு பக்கம்
விழிகள் அணைந்தவர்
சமாதியில் எரியும்
விளக்குகள் ஒரு பக்கம்
வழியினில் இருளில்
ஒளியினுக்கேங்கும்
விழிகள் ஒரு பக்கம்
கரிந்த சிறகுடன்
சுடரில் துடிக்கும்
விட்டில்கள் ஒரு பக்கம்
விரிந்த சிறகுடன்
கூண்டில் துடிக்கும்
பறவைகள் ஒரு பக்கம்
புத்தனுக்காகப்
பொன்னிழல் விரிக்கும்
போதிகள் ஒரு பக்கம்
சித்தன் ஏசுவின்
செம்புனல் குடிக்கும்
சிலுவைகள் ஒரு பக்கம்.

பால்வீதி” என்னும் நூலில் அவர் எழுதிய ”தாகம்” என்னும் கவிதை:

”வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?”

தமிழகத்தின் இன்றைய நிலையை இப்படி நாசுக்காக கவிக்கோ சொல்கிறார்.

கங்கை கொண்டவன் தான் 
இன்று காவிரியையும் 
இழந்து விட்டு 
கையைப் பிசைந்து 
நிற்கிறான்

கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ‘சுட்டுவிரல்’ கவிதை தொகுப்பிலிருந்து

உதிரும் சிறகுகள்…

மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி

சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்

குப்பையில் எறிந்து –
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்

சிலப்பதிகாரம்

பால்நகையாள் வெண்முத்துப்
பல்நகையாள் கண்ணகிதன்
கால்ககையால் வாய்நகைபோய்
கழுத்துநகை இழந்தகதை

அவர் பெற்ற விருதுகள்

சாகித்திய அகாதமி விருது மட்டுமல்ல, குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்ட கவியரசர் பாரிவிழா விருது, புதுக்கவிதைக்காக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்ட தமிழன்னை விருது, தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக 2009 மே மாதம் முதல் 2011-ம் ஆண்டு வரை பணியாற்றினார். சூன் 02, 2017 அன்று தனது 80 வது வயதில் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *