அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ்

அம்பேத்கரை தலித்துகளிடமிருந்து பிரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்

அம்பேத்கர் அடையாளம் என்பது ஒரு சக்திவாய்ந்த அரசியல் நடவடிக்கையாக இன்றைய காலக்கட்டத்தில் இந்தத்துவா சக்திகளால் பார்க்கப்படுகிறது. காலனிய காலத்தில் துவங்கி 1947-க்குப் பிறகும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் சமூகநீதி போராட்டத்தின் வலிமையான ஆளுமையாக இருக்கும் அம்பேத்கரை இந்துத்துவா சக்திகள் தேர்தல் லாபத்திற்காக தங்களுக்கான ஒரு குறியீடாகப் பயன்படுத்த  அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. 

சமகால ஜனநாயகத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை எட்டியுள்ள சமூகநீதி கொள்கையை அடியோடு அழிக்க இந்துத்துவ சக்திகள் பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் அம்பேத்கரை தலித்துக்களிடம் இருந்து பிரிப்பது.

ஆரம்ப காலத்தில் தலித்துகளுடனான ஈடுபாட்டை தவிர்த்துவந்த இந்துத்துவா

ஆர்.எஸ்.எஸ் போன்ற வலதுசாரி இந்துத்துவா சக்திகள் ஆரம்ப காலக்கட்டத்தில் தலித் அடையாளம் இந்துத்துவா திட்டத்திற்கு இடையூறாக இருக்கும் என்று எண்ணி வெளிப்படையாக தலித்துகளுடனான ஈடுபாட்டை தவிர்த்து வந்தனர். ஆனால் பிந்தைய காலக்கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பாஜக சக்திகள் தேர்தல் அரசியலை மையப்படுத்தி இஸ்லாமிய எதிர்ப்பை வடிவமைக்க அனைவரையும் அணிதிரட்ட வேண்டிய தேவை அதிகரித்தபோது தலித்துகளை ஒருங்கிணைந்த இந்து அடையாளத்தின் ஒரு பகுதியாக சேர்க்க அனைத்து முயற்சிகளை செய்து சில வெற்றிகளையும் கண்டுள்ளனர்.

C:\Users\Admin\Desktop\11870898_900221470032792_6452157116548138462_n.jpg
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்துத்துவத்தை தேசிய அடையாளமாக்க தலித்துகளை ஈர்க்கும் முயற்சி

பிராமணிய கலாச்சாரம் மற்றும் மத ஈடுபாட்டை தேசிய அடையாளங்களாக வலதுசாரிகள் பிரபலப்படுத்தியதன் வாயிலாக  தலித்துகளை தங்களுக்குள் ஈர்க்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் இந்த வலதுசாரிகளின் முயற்சிகளுக்கு எதிராக, தலித் மற்றும் அம்பேத்கரிஸ்ட்டுகள் கருத்தியல் தளத்திலும், சமூக நீதிப் போராட்டத்திலும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். எனவே அரசியல் மற்றும் சமூக தளங்களில் தலித் மக்களின் உளவியலை சமன்படுத்த இந்துத்துவா சக்திகள் இரட்டைத் தன்மையில் தங்களது யுக்திகளை வகுத்து செயல்பட்டு வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்-இன் இரட்டை நிலைப்பாட்டு தந்திரம்

ஒருபுறம் தலித்துகள் மீதான வன்முறைகளும் அவமதிப்புகளும் அதிகரிப்பதை ஊக்குவிப்பது; மறுபுறம் அம்பேத்கர் அடையாளங்களை பயன்படுத்துவது; இந்த இரண்டு போக்குகள் மூலமாக தலித்துகளை மிக நுட்பமாகக் குழுப்பி இந்துத்துவா சக்திகள் தனக்கான அரசியல் ஆதாயத்தை அடைய முயற்சிக்கிறது.

பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு பாஜக அரசு எடுத்த முயற்சிகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான ஒரு பெரும் அணிதிரட்டலாக அது பார்க்கப்பட்டது. அதேபோல் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்காக இடஒதுக்கீட்டை தொடர்ந்து தவிர்த்து வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தலித் மக்களுக்கான நியாயமான இடஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்யாமல் தடுத்து வைத்துள்ளது. 

இப்படி ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது. மறுபக்கம் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுவது அம்பேத்கரை முக்கியமான தேசியவாதியாக உருவகப்படுத்துவது. ஒருபுறம் தலித் மாணவர்களுக்கான ஊக்கத்தொகையை தடுக்கிறது. மறுபுறம் அம்பேத்கர் வாழ்ந்த இடத்தை பல கோடிகள் செலவு செய்து புதுப்பித்து புதிய கல்வி நிறுவனமாக அதை மாற்றுகிறது. இதுபோன்ற முரண்பட்ட போக்குகளை இந்துத்துவா சக்திகள் கையாண்டு தலித் மக்களை பின்னுக்கு இழுக்கும் வேலையை செய்து வருகிறது. 

அரசியல் தளத்தில் தலித்துகளை உள்ளடக்கிய தன்மையை வெளிப்படுத்தியும், சமூக தளத்தில் தலித்துக்களுக்கு எதிரான உணர்வுகளை வலுப்படுத்துவதன் ஊடாகவும் வலதுசாரிகள் தங்களுடைய இந்துத்துவா அரசியல் போக்கை வளர்த்து வருகின்றனர்.

அம்பேத்கர் பக்தன் என்று சொன்ன மோடி

“தற்போதைய ஆட்சியை விட வேறு எந்த அரசாங்கமும் அம்பேத்கரை இந்த அளவுக்கு கவுரவிக்கவில்லை”. ”நான் ஒரு அம்பேத்கர் பக்தன்” என்று மேடையில் மார்தட்டிக் கொள்கிறார் மோடி. அதேபோல் மும்பை மற்றும் புதுதில்லியில் அம்பேத்கருக்கு இரண்டு பெரிய நினைவுச் சின்னங்களையும் கட்டப்போவதாக அறிவித்துள்ளார். தலித்துகளை ஈர்ப்பதற்காக பாஜக தனது அரசியல் பிரச்சாரங்களில் அம்பேத்கரின் பெயர் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 

மேலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை எந்த தொந்தரவும் செய்யமாட்டோம் என்று அடிக்கடி பொது மேடைகளில் உறுதியளிக்கிறது. ஆனால் எதார்த்தத்தில் பார்ப்பன உயர் சாதியினருக்குப் புதிய இடஒதுக்கீட்டினூடாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருகிறது. உண்மையில் இந்த போக்கு தலித்துகளின் நியாயமான சமூக நீதி உரிமைகளில் இருந்து அம்பேத்கர் எனும் பிம்பத்தை வெகு தொலைவிற்கு நகர்த்தும் யுக்தி. இதைதான் கடந்த 10 ஆண்டுகளாக இந்துத்துவா சக்திகள் செய்து வருகிறது.

குடியரசுத் தலைவராக தலித்; ஆனால் தலித் செயல்பாட்டாளர்களுக்கு ஒடுக்குமுறை

இந்தியாவின் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக நியமித்து தனது அரசியலில் தலித்துகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. மேலும் தலித் தலைவர்களான ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக பாஜக வெளிப்படுத்தியது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடிவந்த ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு முனைவர் பட்டப்படிப்பு மாணவர் ரோகித் வெமுலா இந்துத்துவா சக்திகளால் அடக்கி ஒடக்கி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளப்பட்டார். 

இதனை மையமாக வைத்து எழுந்த எழுச்சியை அன்றைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி போராட்டக் குழுக்கள் வளாகத்தில் சாதி மோதல்களைத் தூண்டுவதாக குற்றம்சாட்டினார். இதனூடாக தலித் செயல்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் கருத்தியல் எதிரிகளாகக் கருதப்படுவார்கள் என்பதுபோல் வெளிப்படையாக செயல்பட்டார். 

அம்பேத்கரை ராம்ஜீ என்று அழைக்கச் சொன்ன யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து இனிமேல் அம்பேத்கரை ராம்ஜீ என்று அழைக்க வேண்டும். அவர் ”பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்” என்றுதான் அரசியலமைப்பு சட்ட நகலில் கையெழுத்து இட்டுள்ளார் என்று பேசுகிறார். ஆனால் இந்தியா முழுவதும் மாட்டுக்கறி சாப்பிட்டதால் தலித்துகளை அடித்து கொலை செய்ததில் முதல் மாநிலமாக இருப்பது இதே யோகியின் அரசுதான்.

அதேபோல் யோகி உ.பி.யின் குஷினகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் மக்களை சந்திக்க வருவதாக திட்டமிடப்பட்டபோது யோகி வருவதற்கு முன்பு, அதிகாரிகள் சோப்பு மற்றும் ஷாம்புகளை விநியோகித்து தலித்துகள் தங்களை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளனர். 

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

உயர்சாதி தாக்கூர்களின் சுரண்டல் மேலாதிக்கத்திற்கு எதிராக தலித்துகளை ஒழுங்கமைத்ததற்காக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.  

பீமா கொரோகான் வன்முறையும், தலித் அறிவுஜீவிகள் மீதான அடக்குமுறையும்

மகாராஷ்டிர அரசு பீமா-கோரேகான் நிகழ்வில் வன்முறையை திட்டமிட்டு உருவாக்கிவிட்டு பல்வேறு தலித் அறிவுஜீவிகளை சிறையில் அடைத்து துன்புறுத்தி வருகிறது. ஆனால் இதே மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்சி செய்துவந்த பாஜக 2018-ம் ஆண்டு ரூ.40 கோடி செலுத்தி ‘அம்பேத்கர் லண்டன் ஹவுஸை’ வாங்கி அம்பேத்கர் குறித்த சர்வதேச ஆராய்ச்சிகளை நடத்தும் மையமாக மாற்றியுள்ளது. 

தலித் – தலித் அல்லாதோர் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தும் இந்துத்துவா

பாஜகவின் இந்துத்துவா சக்திகளின் அடிமட்டத்தில் உள்ள நடுத்தர வர்க்க சாதிய மனோபாவம் உள்ளவர்கள் தலித்துகளுடன் ஒரு சமூக ஒன்றிணைவில் இல்லை. இது வெளிப்படையான எதார்த்தம். ஒவ்வொரு நாளும் தலித்துக்கள் மீது பெரும் வன்முறையும் அவமானங்களும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அதுகுறித்து எந்தவித ஆக்கப்பூர்வமான எதிர்ப்பும் இந்துத்துவா சக்திகளிடம் இருந்து வருவது கிடையாது. இன்னும் மோசமாக தலித் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை மறைமுகமாக மூர்கப்படுத்துவதில் இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. இப்படி செய்வதினுடாக பார்ப்பன பனியாக்கள்  தங்கள் சமூக அரசியல் உயர்வை பாதுகாத்துக் கொள்கின்றனர். 

ஆர்.எஸ்.எஸ் தலித்துகளின் மனதைக் கட்டுப்படுத்த முடியாது – பிரகாஷ் அம்பேத்கர்

இந்துத்துவ சக்திகள் சக இந்துக்களைக் கொல்லும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் நேர்காணலில் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.

பிரகாஷ் அம்பேத்கர்
பிரகாஷ் அம்பேத்கர்

”அடிப்படையில் பாஜகவும் அதன் சங்பரிவாரங்களும் தலித் மக்கள் அதிகாரம் பெறுவதற்கு எதிரானவை. இந்துத்துவா சக்திகள் தலித் சமூகத்தினருக்கு எதிராக வன்முறை உருவாக்குகின்றன. பி.ஆர்.அம்பேத்கரின் பாரம்பரியத்தை நினைவுகூறும் வகையில் உயரமான நினைவுச் சின்னங்களைக் கட்டுவதன் மூலம் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை மறந்துவிடுவார்கள் என்று பாஜக நம்புகிறது. பி.ஆர்.அம்பேத்கரின் பாரம்பரியத்தைக் கொண்டாட ஐந்து மத மையங்களை நாட்டில் கட்டுவதாக சொல்கிறார்கள். இவர்கள் தலித்துகளின் மனதை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவை விட தலித் மக்கள் புத்திசாலி”.

இந்துவாக நான் இருக்க முடியாது – ஆர்.எஸ்.எஸ் இல் ஒரு தலித்

முன்னாள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பொறுப்பாளர் பன்வர் மெக்வன்ஷி தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்த காலத்தில் இந்துத்துவா சக்திகள் எவ்வாறு தலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பது குறித்த  தனது அனுபவத்தை ’இந்துவாக நான் இருக்க முடியாது – ஆர்எஸ்எஸ்-ஸில் ஒரு தலித்தின் கதை’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். அப்புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.

”வெளிப்படையாக பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ்-சின் நிகழ்ச்சி நிரல் அனைத்து தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களை ‘இந்து மதம்’ என்ற குடையின் கீழ் ஒன்றுதிரட்டுவதாக இருக்கும். இந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றின் சொந்த வரலாறுகள், தெய்வங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மரபுகள் இருக்கின்றன  அவற்றில் இருந்து பிடுங்கி எடுத்து பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள ஒரு புதிய ஆதிக்க மரபில் நட்டுவைத்து அந்த ஆதரிக்க ஏற்கச் செய்வதே அவர்களின் நோக்கம்”.

சாதிய உளவியலை அழித்தொழிக்க திட்டமில்லாத இந்துத்துவா

சாதிய பெருமைகளும் சாதிய உளவியலையும் அழித்தொழிக்க இந்துத்துவா அமைப்புகளிடம் எந்தவித திட்டமும் இல்லை. மேலும் பிராமணிய சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கு எதிராக நின்றவர்களை இந்து சமூகத்தின் விரோதிகளாக கட்டமைத்து வருகிறது. அரசியலமைப்பு பாதுகாப்புகள், இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற தலித்துகளின் அடிப்படை கோரிக்கைகள் தேவையில்லாத தகுதியற்ற மக்களின் கோரிக்கைகளாகக் கருதப்படுகின்றன. இந்த்துவா சக்திகள் தனது பழமைவாதத்தை பாதுகாக்க அதேபோல் தலித்துகளின் வாக்குவங்கியைப் பெற தந்திரோபாயமாக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

தலித்துகளை புதிய சிறுபான்மையினராக மாற்றும் முயற்சி

ஒருபுறம் அம்பேத்கரை உயர்த்துவதாகக் கூறுகிறது. மறுபுரம்  தலித்துகளை குற்றவாளிகள், சட்டத்தை மீறுபவர்கள், நக்சல்கள் மற்றும் தேச விரோதிகள் போன்ற குறிச்சொற்களை தொடர்ந்து திணித்து வருகிறது. இத்தகைய சொற்கள் தலித்துகளை மேலும் சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தவே செய்கிறது. சமூக முனைகளில் இதுபோன்ற நடவடிக்கைகளால் அம்பேத்கரிடம் இருந்து தலித்துகளைப் பிரித்து ஒரு புதிய சமூக சிறுபான்மையினராக மாற்ற இந்துத்துவா சக்திகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பாஜகவின் பார்ப்பனிய பனியா முகத்தை மூடி மறைப்பதற்கான முகமூடியாக அம்பேத்கர் என்னும் பெரும் புரட்சியாளரின் பெயரைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் இது ஒருபோதும் சாத்தியப்படாது. இறுதியில் இந்துத்துவா சக்திகள் தோல்வியை சந்திப்பார்கள்.

– சத்தியராஜ் குப்புசாமி, Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *