தலித் பெண்கள்

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 15% அதிகரித்துள்ளது

இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த குற்றங்கள் மீதான பெரும்பான்மை  வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் குறைவாகவே உள்ளது என்று பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது.

விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ள 84% வழக்குகள்

கடந்த மாதம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் (2017-2019) தலித் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களில் 15.55% அதிகரித்துள்ள அதே காலகட்டத்தில் இதுபோன்ற குற்றங்களை செய்தவர்கள் மீதான 84%-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலித் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் தொடர்பான முக்கால்வாசி வழக்குகள் இன்னும் ஒரு நீதிபதியால் விசாரிக்கப்படாமல் இருக்கிறது என்கிற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

3 ஆண்டுகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவாகியுள்ள வழக்குகள்

2017 முதல் 2019 வரையிலான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மொத்தமாக 1,31,430 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அதில் 15.73% பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானவை என்று தேசிய குற்றப்பதிவேடு கூறுகிறது. பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு முயற்சி, பெண்களை அடக்கி ஒடுக்கும் போக்கில் பெண்கள் மீதான தாக்குதல்கள், பெண்களின் கண்ணியத்தை அவமதிப்பது, கடத்தல் மற்றும் கட்டாய திருமணம் போன்ற பல்வேறு குற்றங்கள் இதில் அடங்கும் என்று தேசிய குற்றப் பதிவேடு தெரிவிக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

பொதுவாக பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 2017-ல் 6,321 ஆக இருந்து, 2018-ல் 6,800 ஆகவும், 2019-ல் 7,485 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெண்களை வன்முறையினூடாக அடக்கி அவமதிக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பாலியல் வன்புணர்வு முயற்சி 15.32 சதவீதம் அதிகரித்துள்ளது. பாலியல் வன்புணர்வு 22.14 சதவீதம் அதிகரித்துள்ளது. கடத்தல் சம்பவங்கள் 47.61 சதவீதம் பதிவாகியுள்ளது.

2019-ம் ஆண்டில் தலித் பெண்கள் மற்றும் மைனர் பெண்கள் மீது நடந்த குற்றத்தை மையமாக வைத்து இந்திய குற்றப்பிரிவு 376-ன் (பாலியல் வன்புணர்வு) கீழ் பதிவு செய்யப்பட்ட 3,486 வழக்குகளில், 88.9% வழக்குகள் இன்னும் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்குகள் குறித்து எந்தவிதமான முனனேற்றமும் இல்லாமல் நிலுவையில் உள்ளது. 

உத்திரப்பிரதேசத்தில் தான் அதிகம்

தலித்துகளுக்கு எதிராக 45,935 வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 11,829 உத்திரப்பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளன. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டில் 41,793 குற்றங்கள் பதிவாகியுள்ளது. அதில் உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 9,451 குற்றங்கள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2019-ம் ஆண்டு 923 தலித்துகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 219 கொலைகள் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளன.

ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்

கொரோனா ஊரடங்கின்போது தமிழ்நாட்டில் தலித்துகள் மீது 81 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 134 பேர் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

சட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தாமையே காரணம்

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் “தற்போதுள்ள சட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தாதது மற்றும் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தாமை” என்று தேசிய குற்றப் பதிவேடு அறிக்கை கூறியுள்ளது. இதுபோன்று குற்றங்கள் முறையாக தண்டிக்கப்படாதது ஆதிக்க சமூகங்களுக்கு மேலும் வன்முறையின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *