தேசிய புலனாய்வு முகமை ஜூலை மாதம் 28-ம் தேதி டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹனி பாபுவை கைது செய்தனர். 11 முக்கிய நபர்களைத் தொடர்ந்து இவரும் பீமா கொரேகான் சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர்கள், அறிவுஜீவிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், தலித் செயல்பாட்டாளர்கள் என இந்த கைது நீண்டு கொண்டே போகிறது.
ஹனிபாபு கைது செய்யப்படுவதற்கு முன் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்ற செயல்பாட்டாளர்கள் மீது, பொய்யான வாக்குமூலங்கள் கொடுக்க மிரட்டப்பட்டுள்ளதாகவும், அதேபோல் மாவோயிஸ்ட்களுடன் தொடர்புள்ளதாக வாக்குமூலங்கள் கொடுக்க மிரட்டப்பட்டுள்ளதாகவும் தலித் கேமரா இணையதளம் தெரிவித்துள்ளது. ஹனிபாபு அவர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க மறுத்த சூழ்நிலையில்தான் ஜூலை 28-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து ஐந்து நாட்கள் நடந்த துன்புறுத்தலுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹனிபாபுவின் வீட்டை சோதனையிட்டு அவருடைய மடிக்கணிணி, புத்தகம், செல்போன் போன்றவற்றை தேசிய புலனாய்வு முகமை அபகரித்துச் சென்றது. அவர் சமுக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. பீமா கொரேகான் சம்பவத்திற்கும், இவருக்கும் எந்த தொடர்பும் இல்லாத போதும் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து அரசு செய்து வருகிறது.
பீமா கொரேகான் நிகழ்வில் கலவரத்தை உருவாக்கிய இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், 12-க்கும் அதிகமான தலித் செயல்பாட்டாளர்களை கைது செய்து அச்சுறுத்தி வருகிறது.
ஹனிபாபு பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர் மற்றும் சாதி எதிர்ப்பு கழத்தில் செயல்படக்கூடியவர். கைது செய்யப்பட்ட 12 முக்கிய நபர்களின் பொருத்தப்பாடும் இதுவே. அவர்கள் அனைவரும் இந்தியாவின் மிக சிறந்த அறிவுஜீவிகள், பல்வேறு ஆய்வுகளையும் இலக்கியங்களையும் படைத்தவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து களத்தில் குரல் கொடுப்பவர்கள்.
ஹனிபாபு கல்விக் கூடங்களில் சமுக நீதிக்காக குரல் கொடுப்பவர். ஒடுக்கப்பட்டட சமூகத்தில் இருந்து உயர்கல்விக்கு வரும் மாணவர்களுக்கான முறையான இடத்தைப் பெற்றுத் தருபவர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தங்கும் வசதி, உதவித்தொகை போன்றவற்றை முறைபடுத்தித் தருபவராகவும் இருந்திருக்கிறார்..
2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சாய்பாபாவுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். அதுமட்டுமல்லாது கடந்த ஒரு ஆண்டு காலமாக கைது செய்யப்படடவர்களின் விடுதலைக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருபவர்.
இதுபோன்ற சாதி ஒழிப்பு செயல்பாட்டாளர்களை கொரோனா போன்ற பெருந்தொற்று காலக்கட்டத்திலும் பாஜக அரசு நசுக்கி வருகிறது. சமூக நீதிக் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் கல்லூரி, அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்களை இந்துத்துவா சக்திகள் வெளிப்படையாக அச்சுறுத்துகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூகத்தில் பெரும் மதிப்புடையவர்களும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் இதே காலக்கட்டத்தில் தீவிரவாத செயல்களில் தண்டிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள் விடுதலை செய்யப்படும் போக்கு இயல்பாகி வருகிறது.