காஷ்மீர் AFSPA

காஷ்மீரிகளை அச்சுறுத்தும் AFSPA எனும் கொடும் சட்டம்

கடந்த மாதம் காஷ்மீரின் ஷோப்பியன் (Shopian) மாவட்டத்தில் ஆயுதக் குழுவைச் சார்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்தது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கையில், “தெற்கு காஷ்மீர் பகுதியில் ஆயுதக் குழுவைச் சார்ந்தவர்கள் ஒளிந்திருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் ஜீலை 18-ம் தேதி தேடுதல் வேட்டையில் ஈடுபடும்போது ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ராணுவத்தினர் திருப்பி தாக்கியதில் காஷ்மீர் ஆயுதக் குழுவைச் சார்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். பின் அவர்களின் உடல் பாரமுல்லா மாவட்டத்தில் புதைக்கப்பட்டது“ என்று கூறினர்.

ஆனால் இறந்த மூவரின் குடும்பத்தினர் பேசும்போது. “மூன்று பேரும் கடந்த மாதம் 17-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் ஆப்பிள் மற்றும் வால்நட்ஸ் சாகுபடி செய்யும் பண்ணையில் வேலை பார்க்கும் தினக்கூலிகள். கடந்த ஒரு ஆண்டாக நீடிக்கும் ஊரடங்கால் வேலையில்லாமல் தவித்து, வேறு வேலை எதாவது தேடச் சென்றனர். ஆனால் அவர்கள் வீடு திரும்பவே இல்லை. பத்து நாட்களுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் அவர்களின் புகைப்படத்தைப் பார்த்துதான் மூவரும் கொல்லப்பட்டதை அறிந்தோம்’‘ என்று கூறுகின்றனர்.

இந்த மூன்று நபர்களும் தீவிரவாதி என்று கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. பின் அரசியல் கட்சிகளின் அழுத்தத்தால், மூவரின் கொலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆகஸ்ட் 10-ம் தேதி ராணுவத்தின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

AFSPA பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள்

செங்கோட்டையில் கொடியேற்றும்போது, குடிமக்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வோம் என்று பத்திரிக்கையாளர்களிடம் பேசுவது மட்டுமல்ல சுதந்திரம். அதை நடைமுறையிலும் நிறைவேற்ற வேண்டும். சம காலத்தில், அடிப்படை மனித உரிமைகள் கேள்விக்குள்ளான இடமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு இருக்கிறது. கடந்த காலங்களிலும் இதேபோன்று பொதுமக்கள் பலர் கொல்லப்படுவதும், பின் விசாரணை என்ற பெயரில் ராணுவத்தினரின் அத்துமீறல்களை மறைக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளதாக மனித உரிமை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் நடைமுறையில் உள்ள ஆயுதப் படைக்கான சிறப்பு அதிகார சட்டம் Armed Forces (Special Power) Act (AFSPA) ராணுவத்தினருக்கு எல்லைமீறிய அதிகாரங்களைத் தந்துள்ளது. எந்தவித அடிப்படை மனிதாபிமானத்தையும் பொருட்படுத்தாமல், பொதுமக்களையும் அப்பாவிகளையும் துன்புறுத்துவதை அனுமதித்திடும் வகையில் இந்த சிறப்பு சட்டம் அமைந்துள்ளது. யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யலாம், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். சுட்டுக் கொன்றாலும் கூட அதிகாரிகளை தண்டனைக்கு உட்படுத்த முடியாத அளவுக்கான பாதுகாப்பினை இந்த சிறப்பு சட்டம் வழங்குகிறது. இதுபோன்ற கட்டற்ற அதிகாரம் அப்பாவி பொதுமக்களை வாழ்வை மோசமான நிலையில் தள்ளியிருக்கிறது. இந்த சட்டம் 1990-களில் இருந்து நடைமுறையில் உள்ளது. 

ஆயுதப்படையினரின் இதுபோன்ற அத்துமீறல்களை அரசியல் கட்சிகளின் துணையுடன் பொதுமக்கள் எதிர்கொண்டு வந்தனர். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக அதுவும் இல்லை. காஷ்மீரில் மாநில அரசு கலைக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்ட பிறகு ஆயுதப் படையினர் எல்லையற்ற வகைகளில் அதிகாரத்தை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. 

AFSPAவிற்கு தொடரும் எதிர்ப்பு

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், சர்வேதச மனித உரிமை அமைப்புகள், அரசால் நியமிக்கப்பட்டட குழு போன்றவர்கள் இந்த சட்டம் தவறானறு என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்களை துன்புறுத்தும் போக்குதான் தொடர்கிறது. பாதுகாப்புப் படையால் நடத்தப்படும் அனைத்து கொலைகளையும் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதுபோன்ற சட்டவிரோதக் கொலைகள் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடந்து வருகிறது. இதுகுறித்து தீவிரமான கேள்விகள் எழும்போது கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும், அக்கொலைகளுக்கு பொறுப்பேற்றல் (accountability) எதுவும் தேவையில்லை என்பதே நிலையாக இருக்கிறது. 

இதற்கு உதாரணம், 2000-ம் ஆண்டு காஷ்மீரில் 36 சீக்கியர்களைக் கொன்ற தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறி பதிர்பால் (pathirbal) பகுதியில் ராணுவத்தினர் ஐந்து பேரை சுட்டுக் கொன்றனர். பின் மாநில அரசின் தலைமையில் நடந்த தடயவியல் சோதனையில் அந்த ஐவரும்  அப்பாவி கிராமவாசிகள் என்று தெரியவந்தது. ஆனால் ஆயுதப்படையினர் செய்த சட்டவிரோத கொலைக்கு போதிய ஆதாரம் இல்லை என்று அந்த வழக்கு பின்னர் முடிக்கப்பட்டது. 

தண்டனைக்குள்ளாக்கப்பட்டவர்களை விடுதலை செய்த பாஜக அரசு

2010-ம் ஆண்டு மச்சில் (machil) என்ற பகுதியில் மூன்று அப்பாவிகள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு 2014-ம் ஆண்டு அந்த சட்டவிரோத கொலையில் ஈடுபட்ட 5 ராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் பாஜக அரசு 2017-ம் ஆண்டு அவர்களை விடுதலை செய்தது.

இதுபோன்ற அப்பட்டமான சட்டவிரோதப் போக்கு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீரின் மாநில அதிகாரம் பறிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாவது கேள்வி கேட்பதற்கு மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஜனநாயக சக்திகள் இருந்தன. ஆனால் தற்போதும் அதுவும் இல்லை. 400-க்கும் அதிகமான அரசியல் பிரமுகர்கள் வீட்டு சிறையில் இருக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் நேரடியாக ராணுவத்தினர் பொதுமக்களை கைது செய்கின்றனர் என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்(Human Rights Watch) தெரிவித்துள்ளது.

இதுபோன்ற போக்குகளைத் தடுக்க AFSPA எனும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பதே ஜனநாயகத்தை விரும்புவோரின் குரலாக இருக்கிறது. அதேபோல் இதுவரையிலும் நடந்த சட்டவிரோத கொலைகள் மற்றும் கைதுகளை உரிய விசாரணைக்கும் உட்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *