1. பி.ஜே.பி.யின் தொழிற்சங்கமே எதிர்க்கிறதே, என்ன பதில்? – கி.வீரமணி
விவசாயிகள் போராட்டம்: மக்கள் மன்றமும் – உலகமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ளன தன்முனைப்பை கைவிட்டு கீழே இறங்கி வராவிட்டால் வரலாறு ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது!
டில்லி தலைநகரை முற்றுகையிட்டு கடந்த 25 நாள்களாக கட்டுப்பாட்டுடன் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் – பல்லாயிரக்கணக்கான மக்கள், குழந்தை கள், பெண்கள் உள்பட உணர்வுடன் ஈடுபட்டு அறவழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய அனுமதிக்காத நிலையில், சுற்றுப்புற புறநகர் எல்லைப் பகுதிகளின் சாலைகளில், தாங்கள் வந்த டிராக்டர் களிலும், டெண்ட் அமைத்தும், உணவுகளை அங்கேயே தயாரித்தும், வாட்டும் மைனஸ் டிகிரி கடுங்குளிரிலும், கட்டுக்கோப்பாக வன்முறைக்குத் துளியும் இடந்தராமல், மிகவும் அறவழியில், சட்டம் – ஒழுங்கு, பொது அமைதிக்கு சிறிதும் கேடு ஏற்படுத்தாத வகையிலும் நடைபெற்று வருவதைக் கண்டு உலக நாடுகள் மூக்கில் விரலை வைத்து அதிசயப்படுகின்றன.
அதன் காரணமாக, அனைத்துத் தரப்பி னரும் அறவழிப்பட்ட ஆதரவினைத் தந்து, அவர்களது கோரிக்கையின் நியாயத் தின்பால் நிற்கின்றனர்!
விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் மூன்று சட்டங்களை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய முறையேகூட தெளிந்த ஜனநாயக முறைக்கு எதிரானது!
வேளாண் சட்டங்கள் பிறக்கும்போதே சிக்கல்!
மாநிலங்களவையில் நடந்த அமளி துமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பில் அம்மசோதாக்களை நிறைவேற்றியதாக அதன் துணைத் தலைவர் அறிவித்த முறை ஜனநாயக, நாடாளுமன்ற முறைக்கு விரோதமானது என்று அத்துணை எதிர்க் கட்சியினரும் குடியரசுத் தலைவரை சந்தித்து, அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்த நிலையில்தான், இது சட்டமானது.
எனவே, பிறக்கும்போதே சிக்கல்!
இந்த சட்டங்களை எதிர்த்து ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.)யிலிருந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்மித் கவுர்பாதல் பதவியை இராஜினாமா செய்தார் – தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய!
SAD என்ற சிரோன்மணி அகாலிதளக் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது!
பா.ஜ.க.வினரும் – பாரதீய கிஷான் சங் அமைப்பும் எதிர்ப்பு!
பல பா.ஜ.க.வினரும், முக்கிய பொறுப் பாளர்களும்கூட எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளின் பக்கம் நிற்கின்றனர்!
அவ்வளவு தூரம் போவானேன், ஆர்.எஸ்.எஸ்.சின் ஓர் அங்கமான (பாரதீய கிஷான் சங்) BKS அமைப்பு இந்தச் சட்டம் விவசாயிகளின் நலனை முழுமையாகப் பாதுகாக்கவில்லை என்று கூறி, திருத் தப்படவேண்டும் என்று பகிரங்கமாகவே கூறுகிறது!
78 முக்கிய ஓய்வு பெற்ற மூத்த அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள், நிர்வாகப் பிரமுகர்கள் இதில் உள்ள ஓரவஞ்சனை, குறைபாடு, அரசமைப்புச் சட்ட விரோத, ஜனநாயக விரோதப் போக்குபற்றி விரிவாக விளக்கி, அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பஞ்சாபில் வாங்கிய அரசுவிருதுகளைத் திருப்பித் தருவது தொடர்கிறது. இதைவிட மத்திய மோடி அரசுக்கு மிகப்பெரும் அவமானம் வேறு இருக்க முடியாது!
விவசாயிகளுக்கு ஆதரவாக முன்னாள் போர் வீரர்கள் விருதுகளை திருப்பி அளித்துள்ளனர்
25 ஆயிரம் முன்னாள் போர் வீரர்கள் (War Veterans) தங்களது விருதுகளைத் திருப்பி அளித்து – தாங்கள் விவசாயிகளின் பக்கம் நிற்கிறோம் என்று பகிரங்கமாக அறிவிப்பு விடுத்துள்ளனர்!
இதுவரை சுமார் 30 பேருக்குமேல் இந்தப் போராட்டத்தில் களத்தில் நின்று, கடும் பனி போன்றவற்றால் பாதிக்கப்பட்டும், இவர்களுக்கு ஆதரவாக ஒரு சிலர் தற் கொலை செய்துகொண்டும் தங்களது உயிர்களைப் பணயம் வைத்து – மத்திய அரசின் கல் மனத்தைக் கரைக்க முயன்று உள்ளனர்!
இதுவரை அவர்களது பிரதிநிதிகளை நேரில் அழைத்து பிரதமர் மோடி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைத்து, ஜனநாயகத் திற்குப் பெருமை சேர்க்கத் தயாராக இல்லாதது மிகவும் வருந்தத்தக்கது!
நாட்டில் நடைபெறுவது மக்களாட்சி தானே! மக்களாட்சி, மக்களின் குறைகளைக் கேட்டு, அதனைத் தீர்ப்பதுதானே நியாயம்? மக்கள் வாக்களித்துதானே பதவிக்கு வந்துள்ளனர். அந்த மக்களை இப்படி நடுத்தெருவில் 25 நாள்களாக அவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றப் போராடுவதிலிருந்து வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளலாமா?
‘ஜெய்ஜவான், ஜெய் கிசான்’ என்பதில் விவசாயின் பங்கும் பணியும், வாழ்வும் இல்லாவிட்டால், மக்கள் – அரசியல்வாதிகள் உள்பட வாழ முடியுமா?
அப்படி இருக்கையில், அவர்கள் தாங்கள் விளைவிக்கும் பொருளுக்குரிய குறைந்தபட்ச ஆதார விலைக்கான (MSP – Minimum Support Price) உத்தரவாதம் இல்லாத ஒரு சட்டம் – தங்கள் நலனைக் கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடகு வைத்து, நாளடைவில் தாங்கள் வெறும் விவசாயக் கூலிகளாகும் நிலைக்குக் கொண்டு போய் நிறுத்திவிடும் என்று அச்சம் தெரிவிக்கும் நிலையில், அதனைப் போக்கி, அவர்கள் நெஞ்சில் பால் வார்த்து உத்தரவாதம் தந்து, இந்தச் சட்டங்களைப் பின்வாங்கினால் என்ன கேடு ஏற்பட்டு விடும்?
தன்முனைப்பிற்கோ, வீண் வறட்டுப் பிடிவாதத்திற்கோ இடம் ஏது?
ஜனநாயகத்தில் தன்முனைப்பிற்கோ, வீண் வறட்டுப் பிடிவாதத்திற்கோ இடம் ஏது? சர்வாதிகாரத்தில் இதைக் கடைப் பிடித்தவர்கள் சரித்திரத்தில் பெற்றுள்ள இடம் எது? எங்கே? என்பதை இன்றைய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் புரியாதவர்களா?
சட்ட அறிஞர் சாய்நாத்
‘‘அவசர காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்று மார்தட்டும் இவர்கள், அதைவிட மோசமான மூன்று சட்டங்களை விவசாயிகளுக்கு மட்டும் எதிராகஅல்ல, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உ ரி ¬ மக ளையே பறிக்கும் வகையிலும், எந்த நிலையிலும் இந்த ஒப்பந்தம்பற்றி எந்த ஒரு நீதிமன்றத்திற்கும் சென்று நியாயம் கேட்கும் உரிமை கிடையாது என்பதைவிட மிகப் பெரிய மனித உரிமை, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைப் பறிப்பு உண்டா?” என்று சாய்நாத் என்ற ஒரு சட்ட அறிஞர் கேள்வி கேட்டு, விவசாயிகளை மட்டும் இது பாதிக்கவில்லை; குடிமக்களின் மனித உரிமைகளையும் பாதிக்கிறது என்று விரிவாக எழுதியுள்ளார் – உச்சநீதிமன்றத்திலும் விளக்கியுள்ளார்!
எரியும் நெருப்பை அணைக்கவேண்டிய நேரத்தில், அதற்குப் பெட்ரோல் ஊற்று வதுபோல, பாகிஸ்தானும், சீனாவும் போராட்டத்தைத் தூண்டி விடுகின்றன என்று சில பா.ஜ.க.வினர் பொறுப்பற்று பேசிவருவது ‘‘வெந்த புண்ணில் வேலைச் சொருகும்” கொடுமையாகும்.
அல்லற்பட்டு ஆற்றாத விவசாயி களுக்காக மக்கள் அழுதிடும் கண்ணீருக்கு எவ்வளவு சக்தி என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்; வீண் பிடி வாதத்தை கைவிட்டு, இறங்கிவந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழக முதலமைச்சர் சரியாகப் புரிந்துகொண்டுள்ளாரா?
நாட்டில் உள்ள இத்துணை அறிஞர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து கூறுகின்றனர். தான் ஒரு விவசாயி என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பேசுவது, அவர் சரியானபடி சட்டங்களைப் புரிந்து கொண்டுள்ளாரா? அவருக்கு விளக்கி யவர்கள் அதுபற்றி சரியான தகவல்களைத் தரவில்லை என்பது புரிகிறது.
விவசாயம், மாநில அதிகாரத்தின்கீழ் உள்ளது. அதில் சட்டம் செய்யும்முன் மாநில முதலமைச்சர்களைக் கலந்து ஆலோசித்ததா மத்திய அரசு? மாநில உரிமை பறிப்புக்கு இது ஒன்றே போதுமே! இதைவிட பெரிய பாதிப்பு வேறு வேண்டுமோ!
ரேஷன் கடை நீடிக்குமா? என்ற கேள்வியும், பதில் பெற முடியாததாக உள்ளது.
வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது!
எனவே, மக்கள் மன்றமும், உலகமும் இந்த அதிகார ஆணவத்தினைப் பார்த்துக் கொண்டுள்ள நிலையில், உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைளை ஏற்று, அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்தினால், வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது!
ஜனநாயகம் இத்தகைய கார்ப்பரேட் காவலர்களை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பது போகப் போகபுரியும்!
இனியும் காலந்தாழ்த்தாது, விவசாயி களின்அரசியல் கலவாத இந்த அறப் போரின் நியாயத்தினை உணர்ந்து, சரியான முடிவு எடுக்கத் தவறக்கூடாது – மத்திய பா.ஜ.க. அரசு!
பிரதமரின் பேச்சுக்கு தக்க பதிலடி!
கடந்த வெள்ளியன்று (18.12.2020) பிரதமர் மோடி மத்திய பிரதேச விவ சாயிகளின் காணொலி கூட்டத்தில் உரை யாற்றுகையில்,
‘‘புதிய வேளாண் சீர்திருத்தங்கள் ஒரே நாளில் உருவானதல்ல; விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண இருபதாண் டுகளுக்கும் மேலாக நடந்துவரும் முயற்சி இது. ஆனால், டில்லியில் போராடும் விவசாயிகளை அரசியல் ஆதாயங் களுக்காக எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன” என்று கூறினார்.
இதற்குத் தக்க பதிலளித்து, மறுப்புத் தெரிவித்து- 40 தொழிற்சங்கங்களில் ஒன்றான அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) பிரத மருக்கும், மத்திய விவசாய அமைச்சர் தோமருக்கும் தனித்தனியே ஹிந்தியில் எழுதியுள்ள கடிதத்தில்,
‘‘டில்லி எல்லைகளில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டப் பின்னணியில் எந்த அரசியல் கட்சியும் இல்லை. உண்மை என்னவென்றால், அரசியல் கட்சிகளின் கருத்துகளை மாற்றிக் கொள்ளும்படி விவசாயிகளின் போராட்டம் அவர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளது.
எந்த ஓர் அரசியல் கட்சியுடனும், எந்த ஒரு கோரிக்கையும் இணைக்கப் படவில்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
பா.ஜ.க.விலிருந்து சிலர் இதற்கு ஆதரவு தருவதும் மற்றொரு சான்றாகும்.
2. அமைச்சர்கள் ஊழல்கள் 97 பக்க அறிக்கை – மு.க.ஸ்டாலின்
தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களை தி.மு.க. சார்பில் சந்தித்து முதலமைச்சர் திரு.பழனிச்சாமி மற்றும் அவரது அமைச்சர்கள் மீதான, லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுக்கப்பட்டு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத ஊழல்கள், சொத்துக்குவிப்பு புகார்கள் குறித்த விவரங்கள் அடங்கிய 97 பக்கங்கள் கொண்ட விரிவான மனுவினை அளித்திருக்கிறோம்.
முதல் பகுதி மட்டும்தான் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல புகார்களும் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றையும் தொகுத்து 2-ஆவது பகுதியையும் விரைவில் வழங்குவோம்!
2018-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து – மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிடுமாறு ஆளுநரிடம் வலியுறுத்தினோம்!
3. கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வேண்டும் – கே.எஸ்.அழகிரி
கொரோனா தொற்று உலகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கொரோனா தடுப்புப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். கொரோனாவை கண்டு கொஞ்சமும் அஞ்சாமல், துணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பாக பணியாற்றியதில் அரசு மருத்துவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறப்பாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டதை எவரும் மறுக்க இயலாது. ஆனால், கொரோனா தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய மருத்துவர்களின் நலனை தமிழக அரசு காப்பாற்றியதா என்றால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தமிழக அரசு மருத்துவர்கள் அரசுக்கு நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, முதல் கோரிக்கை, மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி 12 ஆண்டுகளுக்கான தகுதிக்கு ஏற்ற ஊதியம், இரண்டாவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்கள், மூன்றாவது, மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இடங்கள் மீண்டும் தரப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், நான்காவதாக, மருத்துவ பட்ட மேற்படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
தமிழக முதல்வர் அறிவித்த, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், தொற்று ஏற்பட்ட மருத்துவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டதற்காக மருத்துவர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியமும் இதுவரை தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டள்ளது. முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையிலும் அரசு மருத்துவர்கள் தங்களது பணியில் அயராது பணியாற்றி வருகிறார்கள். ஆனால், தமிழக முதலமைச்சர் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது நியாயமா ?
இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழகம் இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம். தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய மருத்துவ கல்லூரிகளையும், புதிய மருத்துவமனைகளையும் தொடங்குவதாலேயே நமது பெருமையை அடைந்துவிட முடியாது. அதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். தமிழக மக்கள் தொகை 7 கோடிக்கு மேலே இருக்கிற நிலையில், அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக இருப்பது குறித்து அ.இ.அ.தி.மு.க. அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஆனால், மருத்துவ கல்லூரிகளை அதிகமாக தொடங்கியிருக்கிறோம், மருத்துவ படிப்பிற்காக அதிக இடங்களை உருவாக்கியிருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதால் என்ன பயன் ஏற்படப் போகிறது ?
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவர்கள் தான் மிகுந்த துணிவுடன் களப்பணி ஆற்றினார்களே தவிர, கொரோனாவை எதிர்கொள்ளாமல் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்படியே சில மருத்துவமனைகள் செயல்பட்டாலும், நோயாளிகளால் தாங்க முடியாத அளவிற்கு வசூல் வேட்டை நடத்தியதை எவரும் மறுக்க முடியாது. இதில் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு செயல்பட்டது அரசு மருத்துவர்களே தவிர, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகிற மருத்துவர்கள் அல்ல.
கண்ணுக்கே தெரியாத கிருமியை, மருந்தே கண்டுபிடிக்காத நிலையில், ஆயுதமின்றி களமிறங்கும் போர் வீரனைப்போல, உயிரை பணயம் வைத்து பணி செய்தவர்கள் அரசு மருத்துவர்கள். கொரோனா உச்சத்தில் இருந்தபோதும் கூட, பணியிலிருந்து ஒதுங்கவில்லை. இரவு-பகல் பாராமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெருமை அரசு மருத்துவர்களுக்கு உண்டு. அவர்களின் கடுமையான உழைப்பின் காரணமாகவே கொரோனா தொற்றுப் பரவலையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் தமிழகத்தில் குறைக்க முடிந்தது. இத்தகைய சாதனைக்கு சொந்தம் கொண்டாடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன ?
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற வகையில் 7 கோடி மக்கள் தொகைக்கு தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 70 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இருப்பதோ 18 ஆயிரம் மருத்துவர்கள் தான். ஆனால், தமிழக முதலமைச்சர் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பது குறித்தும், 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்குவது குறித்தும் தேர்தலை மனதில் கொண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில் எந்த கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்காதபோதும், அரசு மருத்துவர்களின் கோரிக்கையை புறக்கணிக்கிற நிலையில், இதுபோன்ற அறிவிப்பால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது ?
2 ஆயிரம் மினி கிளினிக்குகளுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் மருத்துவர்களாவது நியமனம் செய்யப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை இங்கே அமர வைப்பதன் மூலம் மொத்த பொது சுகாதார கட்டமைப்பே சீர்குலைந்துவிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
எனவே, கொரோனா தொற்றுக் காரணமாக கடுமையான பாதிப்பிலிருந்து மக்களின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்களின் நீண்டகால நான்கு அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென தமிழக முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
– கே.எஸ். அழகிரி
4. எளிதான வர்த்தகம் செய்வதற்கான சீர்த்திருத்தம்: தமிழக பொருளாதாரத்தை மீளமுடியாத நெருக்கடியில் தள்ளி விடும் – வேல்முருகன்
எளிதான வர்த்தகம் செய்வதற்கான சீர்த்திருந்தங்களை தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் நிறைவேற்றியுள்ளன. இதன்படி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் எளிதான வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன. இதனால், தமிழகத்திற்கு ரூ.4,813 கோடி கூடுதல் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழகத்திற்கு, மத்திய அரசு தர வேண்டிய நிதியை தராமல் இருப்பதற்குதான் இந்த கடன் உதவி. மேலும், பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு திணிக்கும் நடவடிக்கைகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதற்காகவே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது சலுகையல்ல, கூடுதல் சுமை. கொரோனா காலத்தில் கூட தமிழகம் கோரிய நிவாரண உதவியை மத்திய அரசு வழங்கவில்லை என்பது தான் உண்மை.
ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் பேரிடர் ஏற்படும்போது, நாம் கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு ஒதுக்குவதே கிடையாது. ஆனால், நம்மிடமிருந்து அதிக அளவிலான வரிப்பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். உற்பத்தி வரி, சுங்க வரி , சுங்க வரி , சேவை வரி, நிறுவன வரி, தனிநபர் வருமான வரி இவற்றின் மூலம் ஆண்டுக்கு 1.5 இலட்சம் கோடி மத்திய அரசுக்குப் போகிறது. இது மட்டுமல்லாமல் என்.எல்.சி., தென்னக இரயில்வே, சேலம் உருக்காலை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், தபால் நிலையச் சேவைகள் போன்றவற்றின் மூலமாகவும் வரி போகிறது.
ஆனால், இயற்கைப் பேரிடர்க் காலங்களில் நமக்கு மத்திய அரசு கைகொடுப்பதில்லை. நாம் மொத்த பணத்தையும் மத்திய அரசுக்குக் கொடுத்துவிட்டு நமது உரிமைக்காகவும் உதவிக்காகவும் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கிறோம்.
ஜிஎஸ்டி வரியில் தமிழகத்திற்கு உரிய பங்கையும் தரவில்லை. மாறாக மின்துறையை தனியார்மயமாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் கூடுதலாக கடன் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு ஜிஎஸ்டி வரி நிலுவை உள்ளிட்டவற்றை வாதாடிப் பெற வக்கில்லை. அதற்கு மாறாக, மத்திய அரசின் உத்தரவை ஏற்று பல்வேறு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏதுவாக நடந்து கொண்டதற்காக அளிக்கப்பட்டுள்ள சலுகை தான் கூடுதல் நிதி என்பது. இதனால் தமிழகம் மீள முடியாத கடன் சுமையில் சிக்குவதோடு, தனியார்மய நடவடிக்கைகளால் பெரும் பாதகத்தை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்.
ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, மின்துறையை தனியார்மயமாக்குதல், முதலாளிகளின் விருப்பத்திற்கேற்ப, நகர உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் போன்றவற்றை நிறைவேற்றியதற்காக இந்த சலுகை வழங்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் வெளிப்படையாகவே கூறியுள்ளது.
எனவே, மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைகளை பெறாமல், மேலும் மேலும் கடன் வாங்கி குவிப்பது தமிழக பொருளாதாரத்தை மீள முடியாத நெருக்கடியில் தள்ளி விடும். இது குறித்து அதிமுக அரசு கவலைப்படாமல், மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக செயல்பட்டு வருகிறது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
5. தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளை பணி நியமனம் செய்யவேண்டும் – தினகரன்
தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாக பணி நிரந்தரம் கோரி போராடி வருகிறார்கள்.
கடவுளின் குழந்தைகளான அவர்களிடமும் ஆதாயமடைவது பற்றி ஆட்சியாளர்கள் யோசிக்காமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதைக் கடமையாகக் கருத வேண்டும். மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை @CMOTamilNadu உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
6. தஞ்சையில் கூடுவோம்! உணவு உரிமைகாக்க தில்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தும் உழவர்களுக்கு வலுச் சேர்ப்போம்! – கி.வே.பொன்னையன்,
உலக வரலாறு கண்டிராத வகையில் பாஜக மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களையும்,இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்மசோதா -2020 ஐ யும்
திரும்பப் பெறக்கோரி ஒரு மாத காலமாக பல இலட்சக்கணக்கான உழவர்கள் குடும்பத்தோடு தில்லியின் பல்வேறு நுழைவு வாயிலில் முகாமிட்டு தங்கியுள்ளனர்.
இது போல ஒரு மனித முற்றுகை அறவழிப் போரை இந்திய நாடு இது வரைக் கண்டது இல்லை. இந்தப் போராட்டம் உழவர்கள் முன்னின்று நடத்தினாலும் இந்த நாட்டின் உணவு உரிமையை கார்பரேட்கள் கைப்பற்றுவதை தடுக்கும் போராட்டமாகும். இந்தப் போராட்டத்தின் சமூகத் தேவையை உணர்ந்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தஞ்சை நோக்கி செல்வோம் என்ற அறை கூவலை முன் வைத்துள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளும் தஞ்சை நோக்கி வருகை தர அழைக்கின்றோம்.
- கி.வே.பொன்னையன், செயற்குழு உறுப்பினர், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு AIKSCC, தமிழ் நாடு.
7. ’காவிரியின் கூக்குரல்’ என்ன ஆனது? – சுந்தர்ராஜன் கேள்வி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜக்கி வாசுதேவ் அறிவித்த “காவிரியின் கூக்குரல்” என்ன ஆனது? அதற்கு்முன்னர் அறிவித்த “நதிகளை மீட்போம்” சத்தத்தையே காணோம், அதைப் பற்றியெல்லாம் சொல்லாமல் இப்போது விவசாயிகளா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.