தமிழ்நாடு உருவான நாள் சிறப்புப் பதிவு – Madras Radicals
சுதந்திர இந்தியாவில் 1956 நவம்பர் முதல் நாள் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழர் தாயகமாகவும், சென்னையை தலைநாகராகவும் கொண்ட சென்னை மாகாணம் கிடைத்தது.
மொழிவாரி மாநிலங்கள் குறித்த ஆணையங்கள்
வெள்ளையர் வெளியேற்றத்திற்கு பின்னர் மொழிவாரி மாநில சீரமைப்புப் பற்றி ஆய்வதற்காக 1948 ஜூன் 17 அன்று ‘தார்’ ஆணையம் அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநில சீரமைப்பு தற்போது தேவையில்லை என தார் ஆணையம் பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரை அறிக்கையை காங்கிரஸ் கட்சி சார்பில் வல்லபாய் படேல், நேரு, பட்டாபி சீதாராமையா ஆகியோரைக் கொண்ட ‘ஜே.வி.பி’ குழு ஆய்வு செய்து, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதை கிடப்பில் போட்டுவிட்டது.
ஆந்திர மாநிலத்தின் பொட்டி ஸ்ரீராமுலு போராட்டம்
ஆந்திர மாநிலம் மொழி அடிப்படையில் பிரிக்கப்படும் வரை உண்ணாநோன்பு மேற்கொள்வேன் என்று பொட்டி ஸ்ரீராமுலு அறிவித்து, 1952 அக்டோபரில் போராட்டத்தைத் தொடங்கி 58 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து 1952 டிசம்பர் 16-ல் உயிர் துறந்தார். இதனால் பற்றி எரிந்த மொழிக்கனல் பிரதமர் பண்டித நேரு அவர்களை உலுக்கியதால், ஆந்திரா எனும் தெலுங்கு மாநிலம் 1.10.1953-ல் மலர்ந்தது.
பசல் அலி குழுவின் பரிந்துரையில் பிரிக்கப்பட்ட மாநிலங்கள்
ஆந்திராவைப் போலவே பிற தேசிய இனங்களும் மொழிவாரி மாநிலங்களாக உருவாகக் குரல் எழுப்பியவுடன், பசல் அலி தலைமையில் மாநில சீரமைப்புக் குழுவை இந்திய அரசு அமைத்தது. இக்குழு 1955 செப்டம்பரில் தனது பரிந்துரையை வழங்கியது. அதன் அடிப்படையில்தான் 1956 நவம்பர் 1ஆம் நாள் முதன்முதலில் 14 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
சென்னை மாகாணத்தில் இடம்பெற்றிருந்த தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அந்தந்த மொழி மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. சென்னை மாகாணம் தமிழ்மொழி பேசும் மக்கள் கொண்டதாக சீரமைக்கப்பட்டது.
பறிபோகும் நிலத்தை மீட்க தமிழர்கள் நடத்திய போராட்டம்
மாநிலப் பிரிவினையின் போது தமிழர்கள் தங்கள் நிலத்தையும், தலைநகர் சென்னையையும் மீட்க நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.
திருவாங்கூர் கொச்சி மாநில முதல்வராக பதவி வகித்த பட்டம் தாணுபிள்ளை தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு பகுதி தமிழர்கள் மலையாள போலீசாரின் அராஜகங்களுக்கு ஆளாகி வந்தனர். போலீசாரின் அத்துமீறல்களை கண்டித்து நாகர்கோவில் பகுதி தி.த.நா.கா. தலைவர்கள் மூணாருக்கு சென்று தடையை மீறி போராட்டம் நடத்தி கைதாயினர்.
அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து ஆகஸ்ட் 11-ம் தேதியன்று தி.த.நா.கா. அறிவித்திருந்த ‘விடுதலை நாள்’ போராட்டத்தின் போது ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஊர்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
தமிழர்கள் இழந்த நிலப்பகுதி
மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போதே தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான சித்தூர், திருப்பதி ஆகியவை ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. கேரளாவிடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளையும், கர்நாடகாவிடம் ‘வெங்காலூர்’ என்னும் பெங்களூரு, கோலார் தங்கவயல் போன்றவற்றையும் இழந்தது தமிழ்நாடு.
தமிழர்களின் பகுதிகளை அண்டை மாநிலங்களோடு மத்திய அரசு இணைத்துவிட்டதால், நதிநீர் சிக்கல்கள் அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தொடருகின்றன.
மொழிவாரி மாநிலத்திற்காகவும், எல்லை மீட்புக்காகவும் போராடிய தலைவர்கள்
மொழிவாரியாக பிரிக்காமல் தென்மாநிலங்களை இணைத்து தட்சிணப் பிரதேசம் என்ற கட்டமைப்பை உருவாக்க முயன்ற போது அதை எதிர்த்துக் குரல் எழுப்பினார் தந்தை பெரியார். பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தெற்கு எல்லையில் குமரியும், வடக்கு எல்லையில் திருத்தணியும் தமிழகத்தோடு இணைப்பதற்கு ம.பொ.சி, மார்ஷல் நேசமணி, சென்னை மங்களகிழார், விநாயம், பி.எஸ்.மணி, குஞ்சன் நாடார், ரசாக், சட்டநாதகரையாளர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்
1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்து ராஷ்டிரா எனும் ஒற்றை தேசமாக இந்த நாடு உருவாக வேண்டும் என்றும், மாநில உரிமைகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் தொடக்கம் முதலே எதிர்த்து வந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.
தமிழ்நாடு எனும் பெயர் சூட்டல்
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று 1956 ஜூலை மாதம் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் துவங்கி, 76 நாட்கள் உணவை மறுத்து உயிர்த்தியாகம் செய்தார். பின்னர் 1968-ம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழ்நாடு எனும் பெயரை சூட்டுவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
டிஜிட்டல் ஓவியம்: நன்றி – SivaDigitalArt