செம்மொழி தமிழாய்வு நிறுவனம்

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை முடக்குவதா? ஒன்றிய அரசை எதிர்த்து குரல் உயர்த்தும் எதிர்கட்சிகள்

இந்தியாவில் முதன்முதலாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து 2004-ம் ஆண்டில் கிடைத்தது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் சமஸ்கிருதம் (2005), தெலுங்கு, கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

சென்னையில் 2008-ம் ஆண்டு முதல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படுவதற்கு முன்பாக, 2006 மார்ச் முதல் 2008 மே 18 வரை கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் எனும் பெயரில் செயல்பட்டு வந்தது.

தமிழகத்தில் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது அந்த நிறுவனம், தமிழ் அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சியால் மைசூரில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது.

அதன் பிறகு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அந்தஸ்துள்ள நிறுவனமாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தகுதிபெற்றது.

2005 முதல் 2015-ம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருது, தொல்காப்பியர் விருது, குறள் பீட விருது என மூன்று பிரிவுகளில் தகுதி வாய்ந்த அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் செம்மொழி விருதுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புக்களை கவனத்தில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டி இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முக்கிய பணிகள் 

  • பல்துறை அறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழின் தொன்மை குறித்து ஆய்வு செய்தல். 
  • தமிழ் பிற திராவிட மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விரிவாக ஆய்தல்.
  • பண்டைத் தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல் சார்ந்த செய்திகளைக் குறும்படங்களாக உருவாக்குதல்.
  • இணையவழிச் செம்மொழித் தமிழ் கற்பித்தல் 

என தமிழ் ஆய்விற்கும், வளர்ச்சிக்கும் பல பணிகளை நோக்கமாகக் கொண்டதாகும்.

ஏற்கனவே செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனற்கு முழு நேர இயக்குநரை நியமிக்காமல் அதன் செயல்பாட்டை ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது என்ற குற்றசாட்டு இருக்கிறது. இந்த சூழலில் இந்திய மொழிகள் ஆய்வுக்காக, மைசூருவில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை, பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்ற மத்தியப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டி, அத்துடன் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்திட ஒன்றிய அரசு முடுவெடுத்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

திமுக ஆட்சி இருக்கும் வரை உயிரூட்டத்துடன் நிதி ஆதாரத்துடன் தமிழ்மொழி வளர்ச்சிக்காகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது செம்மொழித் தமிழாய்வு நிறுவனம். ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த மத்திய ஆய்வு நிறுவனம் அனைத்து வழிகளிலும் திட்டமிட்டு முடக்கப்பட்டது.

ஏற்கனவே இருக்கின்ற செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைச் செயல்பட விடாமல் முடக்கி ஒரு நிறுவனமாக இருக்கும் மொழியின் அந்தஸ்த்தை, ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் “துறை” என்ற அளவில் சுருக்கி, சிறுமைப்படுத்தும் இன்னொரு தந்திர வேடமும் அணிந்து, மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் நடந்து கொள்வது கடுமையான கண்டனத்திற்குரியது. என்று கூறியுள்ளார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

கடந்த ஆண்டு ஒரே நாளில் சமஸ்கிருதத்துக்கு என மூன்று முக்கியப் பல்கலைக்கழகங்களை 2019 டிசம்பரில் பாஜக அரசு அமைத்தது. சமஸ்கிருதத்திற்கு முன்பே செம்மொழித் தகுதி பெற்ற தமிழின் வளர்ச்சிக்கென இதுவரை எதையும் அது செய்யவில்லை.

அதற்கு மாறாக, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சென்னையில் அமைக்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இப்போது மைசூருவில் செயல்பட்டுவரும் இந்திய மொழிகளின் மத்திய மையத்தின் ஒரு துறையாக மாற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக செம்மொழி நிறுவனத்தை மாற்றுவதற்கு முயற்சித்தார்கள். கடுமையான எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக அந்த முயற்சியைக் கைவிட்டார்கள். இப்போது மைசூரிலுள்ள நிறுவனத்தின் துறையாக செம்மொழி நிறுவனத்தை மாற்றுவதென்பது தமிழுக்கு செய்யப்படும் அவமதிப்பு மட்டுமன்றித் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் இன்னொரு துரோகமும் ஆகும். இந்தத் தமிழ்விரோத முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.

முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த வைகோ:

‘பிபிவி’ என்று பெயர் மாற்றப்பட்டு, அதனுடன் சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை இணைப்பது என்று மேற்கொள்ளப்பட்டு  வரும் நடவடிக்கையால் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு பெரும் தடை ஏற்பட்டுவிடும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவர் பொறுப்பு  வகிக்கும் தமிழக முதல்வர், மத்திய பாஜ அரசின் இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *