கமல்ஹாசன் சூரப்பா

சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!

நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே!

நீங்கள் இன்னும் இந்த பட்டத்திலிருந்து வெளியில் வரவில்லை என்றே நினைக்கிறோம். ஏனென்றால் உங்கள் அரசியல் பிரச்சாரங்களில் எல்லாம் இயல்பை மீறிய நடிப்பு வாடை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. கடந்த பல மாதங்களில் மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பான ஏராளமான போராட்டங்களை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. இவற்றில் எந்த பிரச்சினைக்காகவாவது நீங்கள் வீடியோ வெளியிட்டது நினைவிருக்கிறதா? கடைசியாக மக்கள் பிரச்சினைக்காக நீங்கள் எப்போது வீடியோ வெளியிட்டீர்கள் என்றாவது நினைவிருக்கிறதா? 

இறுக்கமான முகத்துடன் சினிமா பஞ்ச் பேசுவது போல் நீங்கள் காட்டும் முகச்சாடை, அது உங்கள் இயல்புக்கு மீறிய நடிப்பு என்பதை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. 

விசயத்துக்கு வருவோம். இன்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக உங்கள் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளீர்கள். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உட்பட அனைத்தும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் நேரத்தில், நீங்கள் ஒரு யூ டர்ன் அடித்து அவரை நேர்மையின் சிகரம் என்று பாராட்டியிருக்கிறீர்கள். நேர்மையின் சிகரம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு சூரப்பா அப்படி என்ன நேர்மையாக இருந்திருக்கிறார் என்று நீங்கள் சொல்ல முடியுமா? பஞ்சாப் IIT-யிலிருந்து மாணவர்களின் தொடர் புகார்கள் காரணமாக அவர் பாதியிலேயே அனுப்பப்பட்டது உங்களுக்கு தெரியாதா? 

சூரப்பா சாமானியரா?

”இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள், இப்போது மதிப்பெண்களைக் கொடுத்து மாணவர்களை வாங்க நினைக்கிறார்களா?” என்று போகிற போக்கில் சொல்லிச் சொல்கிறீர்கள். சூரப்பாவின் மீதான எதிர்ப்பு என்பது அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் அரியர் சம்மந்தப்பட்டா எழுப்பப்பட்டது? எதற்காக சூரப்பாவை தமிழ்நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்த்தார்கள் என்பதைப் பற்றி நீங்கள் ஏன் அந்த வீடியோவில் ஒரு வினாடி கூட பேசவில்லை?

இதையும் படிக்க: சூரப்பாவை பதவி நீக்க வலுக்கும் கோரிக்கை – அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை கடந்து வந்த பாதை

சூரப்பாவிற்குப் பின்னால் இந்தியாவின் வலிமையான ஆளுங்கட்சி இருக்கிறது. அவர் மீதான ஊழல் புகாரில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தண்டனை பெற வேண்டும். அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் சொன்னால் அவர் வெளியில் வரப் போகிறார். சூரப்பா என்ன இப்போது சிறையில் செக்கிழுத்துக் கொண்டா இருக்கிறார்? இடையில் உங்களுக்கு ஏன் இந்த பதற்றம்? தமிழக அரசு அடக்குமுறையை ஏவினால் கேட்பதற்கு ஆளில்லாத அளவிற்கு சாமானியரா என்ன சூரப்பா?

நேர்மையானவர்கள் ஒடுக்கப்படும்போது நீங்கள் பேசியிருக்கிறீர்களா?

இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அடக்குமுறையினால் எந்த குற்றமும் செய்யாத சமூக ஆர்வலர்களும், செயல்பாட்டாளர்களும், மனித உரிமைப் போராளிகளும் ஊபா சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் உள்ளிட்ட கொடும் வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு ஆண்டுக்கணக்கில் வெளியில் வர முடியாமல் இருக்கிறார்கள். இந்த உண்மையான நேர்மையாளர்களும், சாமானியர்களும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து நீங்கள் என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா? மக்களுக்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக நீதிமன்ற வாசல்களுக்கும், விசாரணை ஆணையங்களுக்கும் தினந்தோறும் ஏறி இறங்குபவர்கள் இங்கே ஏராளம் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எப்போதாவது நீங்கள் கவலைப்பட்டதுண்டா? #நான்_கேட்பேன் என ஹேஷ்டேக் போட்டு கேட்டதுண்டா?

ஆனால் அதிகார துஷ்பிரயோகம் செய்து அதன் மூலமாக அண்ணா பல்கலைக்கழகத்தினை தமிழக அரசின் அனுமதியே இல்லாமல், டெல்லி பாஜக அரசின் கைகளில் கொடுக்க முயன்ற சூரப்பாவிற்காக மட்டும் நீங்கள் பேசுவதன் நோக்கம் என்ன?

சூரப்பாவிற்கு அரசியல் இல்லையா?

”தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை. கரை வேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்?” என்று கேட்டிருக்கிறீர்கள். சூரப்பா ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தைச் சார்ந்தவர் என்று அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் அவரது நியமனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது உங்களுக்குத் தெரியாதா? நியாயப்படி நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டியது சூரப்பாவை துணைவேந்தராக நியமித்தவர்களை நோக்கித்தானே! 

சூரப்பாவிற்கு ஒரு அரசியல் பின்புலம் இருக்கிறது என்பதை நீங்களே ஏற்றுக் கொண்டு, ”சூரப்பாவின் கொள்கைச் சார்பிலும், அரசியல் நிலைப்பாடுகள் மீது நமக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் ஒருவன் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் கமலஹாசனாகிய நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்” என்று பேசியிருக்கிறீர்கள். சூரப்பாவின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள் கரை வேட்டிகளாகத் தெரிந்த உங்களுக்கு, சூரப்பாவின் அரசியல் நிலைப்பாடு மட்டும் கரை வேட்டியாகத் தெரியாமல் போவது எப்படி? 

இதையும் படிக்க: பறிபோகிறது அண்ணா பல்கலைக்கழகமும் கூடவே தமிழ்நாட்டு மாநில உரிமையும்!

கல்வியாளர்கள் சூரப்பா மீது நடவடிக்கை கோருவது உங்களுக்கு தெரியாதா?

சூரப்பாவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் பெயரை வீடியோவில் சொல்லத் தெரிந்த உங்களுக்கு அனந்தகிருஷ்ணன் அவர்களின் பெயரை சொல்வதற்கு ஏன் வாய் வரவில்லை?

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, தில்லி பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையின் முன்னாள் தலைவர் அனில் சட்கோபால் உள்ளிட்டோர் அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்க முயலும் சூரப்பாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூரப்பாவின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் நேர்மையானவராகத் தெரியாத சூரப்பா, உங்கள் கண்ணுக்கு மட்டும் நேர்மையாளராகத் தெரிவது எப்படி?

இதையும் படிக்க: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க அனுமதிக்க மாட்டோம் – கல்வியாளர்கள் இணைந்து அறிவிப்பு

மாநில உரிமைக்கு எதிராக செயல்படும் சூரப்பாவை நீங்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை மதிக்காமல், தானே ஒன்றிய அரசின் பிரதிநிதியைப் போல அதிகார துஷ்பிரயோகம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினாரே சூரப்பா, அது தமிழ்நாட்டின் மாநில உரிமையை அவமானபடுத்தும் குற்ற நடவடிக்கை இல்லையா? அதிகார துஷ்பிரயோகக் குற்றத்திற்காக அவர் மீது நடவடிக்கை கோரிய போது நீங்கள் எங்கிருந்தீர்கள்?

சூரப்பாவை அண்ணாமலையுடன் ஒப்பிடுங்கள்

சகாயம் ஐ.ஏ.எஸ் தொடங்கி சூரப்பா வரை நேர்மையானவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். யாரை யாரோடு ஒப்பிடுவது? ஆட்சியாளர்களின் அழுத்ததிற்கு அடிபணியாமல் நேர்மையாக நின்ற சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை, ஆர்.எஸ்.எஸ்-ன் பின்புலமாய் செயல்படும் சூரப்பாவோடு ஒப்பிடுவது உங்களுக்கே நகைச்சுவையாய் இல்லையா? நல்ல வேளையாக சகாயம் ஐ.ஏ.எஸ்-ஐ, சமீபத்தில் பாஜக-வில் இணைந்த அண்ணாமலையுடன் ஒப்பிடாமல் விட்டீர்களே என்று ஒரு ஆறுதல் மிஞ்சுகிறது. சூரப்பா சகாயங்களுடன் ஒப்பிடப்பட வேண்டியவர் அல்ல. அண்ணாமலைகளுடன் ஒப்பிடப்பட வேண்டியவர். ஒப்பீடுகளில் கவனமாய் இருங்கள் திரு.கமலஹாசன். இல்லையேல் வரலாறு உங்களை கடிந்து பேசும்.

குரலற்றவர்களின் குரலாக நாம்தான் மாற வேண்டும் என்று முடித்த உங்களின் வார்த்தைக்கு இலக்கணமாய் நீங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. மாற்று என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் மாற்றாய் இருந்ததில்லை. நீங்கள் மாற்று என்பதை மக்கள் சொல்ல வேண்டும். மாற்று அரசியலுக்கு நேர்மை முக்கியம். அதுவரை பிக்பாசில் நடக்கும் பஞ்சாயத்துக்களுக்கு நாட்டாமையாய் நின்று தீர்ப்பு சொல்லிக் கொண்டிருங்கள். தயவுசெய்து 3% வாக்குகளை வீணடிக்காதீர்கள்.

இப்படிக்கு, 
சாமானியர்களில் ஒருவன்.

One Reply to “சூரப்பாவை போற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு திறந்த கடிதம்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *