சதி எனும் உடன்கட்டை ஏறுதல்

உடன்கட்டை ஏற்றுதல் எனும் ஒரு பார்ப்பனிய ’சதி’!

1829-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் நாள் கணவனை இழந்த பெண்களை உயிரோடு எரிக்கும் ‘சதி’ என்ற “உடன்கட்டை ஏற்றுதல்”  இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலாக சட்டரீதியாகத் தடுக்க முன்மொழியப்பட்டது. அதற்கு முந்தைய அரசாட்சிகளில் ‘சதி’யைத் தடைசெய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதாக ஆதாரங்கள் இருந்தபோதும் காலனிய காலத்தில்தான் அதிகாரப்பூர்வமாக அரசு ஆவணத்தில் ‘சதி’ சட்டவிரோதம் என்று பதியபட்டது.

கோவாவில் தடை செய்த போர்த்துக்கீசியர்கள்

போர்த்துகீசியர்கள் கோவாவில் சதியை 1515-ல் தடை செய்தனர். பிரிட்டிஷ் அதிகாரியான வங்காள கவர்னர் வில்லியம் பென்டிங், பெண்களை உயிரோடு எரிக்கும் ‘சதி’யை “சட்டவிரோதமென்றும் அதனை கடைபிடிப்பவர்கள் நீதிமன்றத்தின் வாயிலாக தண்டிக்கபடுவார்கள்” என்ற சட்டத்தை டிசம்பர் 4, 1829-ம் ஆண்டு இயற்றினார். 

மெட்ராஸ், பம்பாய் மாகாணங்களில் இயற்றப்பட்ட சட்டம்

பின்னர் இதுபோன்ற தடைச்சட்டங்கள் 1830-ம் ஆண்டு மெட்ராஸ், பம்பாய் மாகாணங்களிலும் இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. லண்டனில் இயங்கிய ப்ரிவியூ கவுன்சில் இந்த தடைச்சட்டத்தை 1832-ம் ஆண்டு உறுதிசெய்தது. 1861-ம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் ஆணைப்படி பிரிட்டிஷ் ஆட்சிப்பகுதி முழுவதும் ‘சதி’க்கு எதிராக சட்டம் இயற்றபட்டது. 

இந்த மனிதாபிமானமற்ற கொடிய நடைமுறையை தடுப்பதற்காக காலனிய அதிகாரிகளைப் போலவே சமூகசீர்திருத்த அடிப்படையில் ராஜராம் மோகன் ராய் உள்ளிட்டோரும் பாடுபட்டனர். அவரும் வங்க மாகாணத்தைச் சார்ந்தவர். வங்க மாகாணத்தில் தொடர்ந்து நடந்த ‘சதி’ எனும் பழக்கவழக்கம் மேற்கத்தியக் கல்வி கற்ற புதிய மத்திய நடுத்தர வர்க்கத்திடம் சிறு தளர்வை ஏற்படுத்தியது.

இந்திய ‘சதி’ தடுப்புச் (உடன்கட்டை ஏறல்) சட்டத்தின் படி, ”சதி முறைமையை ஆதரித்தல், பின்பற்றுதல், பிரபல்யம் செய்தல் ஆகிய அனைத்துமே தண்டனைக்குரிய குற்றங்களாக வரையறுக்கபபட்டன”.

உடன்கட்டை ஏறுதல் அல்ல ஏற்றுதல்

‘சதி’ என்ற சொல்லுக்கு நல்ல மனைவி என்று பொருள். அதாவது கணவன் இறந்தவுடன் அவரை எரிக்கும் நெருப்பில் மனைவியும் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்ளும் நடைமுறைதான் ‘சதி’. இப்படி செய்யும் பெண் மற்றவர்களை விட மிக உயர்ந்தவர். அவள்தான் கணவன் மீது தீராத அன்பும் மரியாதையும் கொண்டவள் என்ற ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. இக்கொடூரச் செயல் கௌரவத்தின் சின்னமாக மாற்றப்பட்டு, கணவனை இழக்கும் அத்தனை பெண்கள் மீதும் கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. இதுபோன்று உயிரைத் துறக்கும் பெண்களின் நினைவுச்சின்னமாக “சதிகல்” நடுவது வழக்கமாய் இருந்ததுள்ளது. 

இது குறித்து ஆய்வாளர் ச.தமிழ்ச்செல்வன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

”உண்மையைச் சொன்னால் அது உடன்கட்டை ஏற்றுதல்தான், ஏறுதல் அல்ல. காதல் கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் பெண் தானே தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கதை கட்டப்பட்டு, அக்கதை காலங்கள் தாண்டிப் பரப்பப்பட்டும் வருவதால், அப்படிச் சாவதுதான் தலைக்கற்பெனப் பெண்களும் நினைக்கும் அளவுக்கு மூளைச்சலவை நடந்துள்ளது. மதப் பெரியவர்களும் இப்படிக் கணவனோடு தன்னையும் மாய்த்துக்கொள்ளும் பெண்களையே பதிவிரதைகளில் சிறந்தவர்கள் என்று புகழ்ந்துரைத்து வருவதாலும் இக்கருத்து ஆண், பெண் இருவர் மனங்களிலும் அழுத்தம் பெற்றது”.

அடுத்தடுத்த சாதிய வட்டங்களில் பார்ப்பனிய கலாச்சாரத்தின் பாதிப்பு

அண்ணல் அம்பேத்கர் “இந்தியாவில் சாதிகள்” என்ற தனது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 

”இந்து சமூகத்தில் சாதி அந்தஸ்து, சதி, கட்டாய விதவைக் கோலம், பேதைமணம் ஆகிய வழக்கங்களை கடைப்பிடிக்கும் அளவு நேர்விகிதத்தில் வேறுபடுகின்றன. இந்த பழக்க வழக்கங்களை பின்பற்றுவது ஒரு சாதிக்கும், இன்னொரு சாதிக்கும் உள்ள இடைவெளிக்கு தக்கவாறு வேறுபடுகிறது. பிராமணர்களுக்கு மிக அருகில் நெருங்கியுள்ள சாதியினர் மேற்கூறிய மூன்று பழக்கவழக்கங்களைப் பார்த்து ஒழுகுவதோடு கண்டிப்பாகப் பின்பற்றுவதை வலியுறுத்துகின்றன.

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் சாதிமுறை அடிப்படையில் பிராமணர்கள் தங்களைத் தனித்துவமாக வைத்துககொள்ள பிற சாதியுடனான கலப்பைத் தடுப்பதற்காக தம்மை ஒரு இறுக்கமான சமூகமாக மாற்றிக்கொண்டனர். தம்மை சமூக வலையால் போர்த்திக் கொண்டனர். பிற சாதியினர் தனது சாதிக்குள் எந்த கலப்பும் ஏற்படுத்தி விடாமல் தடுக்க தன்னை உறுதியான சாதிய வட்டத்திற்குள் அடைத்துக் கொண்டனர். அதைப்பார்த்து அடுத்தடுத்த சாதி குழுக்கள் ‘போல செய்தல்’ எனும் கோட்பாட்டிற்கு இணங்க தங்களையும் அடைத்துக் கொண்டனர்.” என்று குறிப்பிடுகிறார். 

‘சதி’ என்கிற உடன்கட்டை ஏறும் நடைமுறை துவக்கத்தில் பார்ப்பனர்கள் பின்பற்றிய ஒன்றே..! காலப்போக்கில் ‘போலச்செய்தல்’ விளைவினூடாக பிராமணர்களுக்கு நெருங்கிய சாதியினர் இதை பின்பற்ற துவங்கினார்கள்.

வைதீக புராணங்களில் சதி கடைபிடித்தல்

விஷ்ணு புராணம் 

“கேளும் மயித்ரேயரே! அங்கு வந்த அர்ஜுனன் கிருஷ்ணனுடைய உடலைத் தேடியெடுத்து இறுதிகிரியைகளை செய்வித்தான். அப்போது ருக்மினி உள்ளிட்ட எட்டு மனைவிகளும் கிருஷ்ணனின் உடலோடு நெருப்பினுள் பிரவேசித்தார்கள். ரேவதியும் நெருப்பினுள் நுழைந்தாள். இச்செய்திகளை உக்கிரசேனனும், வாசுதேவனும், தேவகி, ரோஹினியும் கேட்டவுடனே அக்கினியில் பிரவேசித்துவிட்டார்கள். பின்பு அர்ஜுனன் அனைவருக்கும் ஈமகிரியைகளை நடத்திவிட்டு துவாரகையிலிருந்து வச்சிரனையும் கிருஷ்ணனின் பல மனைவிகளையும் (16000 பேர்) , மற்றுமுள்ளவர்களையும் அழைத்துகொண்டு இப்புறம் வந்துவிட்டான்”
(விஷ்ணு புராணம் காண்டம் 5, அத்தியாயம் 38)

ஸ்ரீமத்பாகவதம் 

“கிருஷ்ணனுடைய பிரிவினால் மிகவும் வருந்திய அவனது பெற்றோர் தம் உயிரை அந்த இடத்திலேயே விட்டனர். பரீக்சிதரே! யாதவர்களுடைய மனைவிகள் தம் இறந்த கணவர்களை தழுவிக்கொண்டு நெருப்பினுள் பிரவேசித்தார்கள். பலராமனுடைய மனைவிகள் அவனது உடலை தழுவிக்கொண்டும் வாசுதேவனின் மனைவிகள் அவனுடைய உடலை தழுவிக்கொண்டும் நெருப்பினுள் நுழைந்தார்கள். பிரதியும்னா உள்ளிட்ட ஹரியின் (கிருஷ்ணன்) மறுமகள்களும் தம் கணவர்களின் உடலோடு அக்கினியில் பிரவேசித்தார்கள். மேலும் ருக்மணியும் கிருஷ்ணனை தம் உள்ளத்தில் வைத்திருக்கும் அவனது மனைவியரும் அவனுடைய நெருப்பினுள் நுழைந்தார்கள்”
(ஸ்ரீமத்பாகவதம்11:31:19-20 காண்டம் 11, அத்தியாயம் 31, வசனம் 19-20)

கூர்ம புராணம்

“தன் கணவனோடு உடன்கட்டை ஏறுகிற நெருப்பில் நுழைகிற பெண்ணானவள் அவனை மகிழ்ச்சியடையச் செய்கிறாள். அவன் பிராமணனைக் கொன்றிருந்தாலும், நன்றிகெட்டவனாக இருந்தாலும், அல்லது பெரும் பாவங்களால் தீட்டுப்பட்டவனாக இருந்தாலும் சரியே! இதுவே பெண்ணுக்கான மிகப்பெரிய பாவ விமோசனம் (பாவமீட்சி) என கற்றவர்கள் அறிவார்கள்.”

(கூர்ம புராணம் 2:34:108-109)

அக்னி புராணம்

“சுயகட்டுப்பாட்டையும் தவங்களையும் தன் கணவனின் மரணத்திற்கு பின் மேற்கொள்ளும் விதவைப் பெண் சுவர்க்கம் போகிறாள்…இறந்த தன் கணவனோடு உடன்கட்டை ஏறும் விதவை பெண்ணும் சுவர்க்கம் போகிறாள்”


(அக்னி புராணம் 222:19-23)

தேவிபாகவதம்

“…பாண்டுவின் ஈமகிரியைகள் கங்கைக் கரையில் நடப்பதை அறிந்து, மாதுரி தன் இரு மகன்களையும் குந்தியிடம் ஒப்படைத்துவிட்டு சத்யலோகத்திற்கு போவதற்கு தன்கணவனோடு சதியை (உடன்கட்டை ஏறுதல்) மேற்கொண்டாள்”


(தேவிபாகவதம் 2:6:53-71)

“ஒருதடவை மாதுரி முழு இளமையோடும் அழகோடும் தனிமையான இடத்தில் தனித்திருக்கையில் பாண்டு அவளைக் கண்டு அவளை கட்டிதழுவினான். சாபத்தின் காரணமாக அவன் இறந்துவிட்டான். அவனது ஈமக்கிரியை நடக்கும் போது நெருப்பினுள் பத்தினியான மாதுரி நுழைந்து உடன்கட்டையேறி சதீயாக இறந்தாள்”
(தேவிபாகவதம் 6:25:35-50)

பிரம்ம புராணம் 

“கணவனின் பின்னால் உடனடியாக இறப்பது பெண்களின் மிக உயர்ந்த பொறுப்பு ஆகும். இதுவே வேதங்களில் கடமையாக்கப்பட்ட பாதை ஆகும்”
77. “தன் கணவனை பின்தொடரும் பெண்ணானவள், ஒரு ஆணுடைய உடலிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கைபோல மிக அதிகமான வருடங்கள் சுவர்க்கத்தில் அவனோடு இருப்பாள். அதாவது மூன்றரை கோடி வருடங்கள்”
(பிரம்ம புராணம் 10:75,77)

மகாபாரதம்

இதே நிகழ்வு மகாபாரதம் ஆதிபர்வம் 1:125,126 மற்றும் 1:95 இல் கூறப்பட்டிள்ளது. 1:126 இல் சொல்லும்போது,
“அவள் உடன்கட்டையேறி தன் உயிரை மாய்த்து, பத்தினி மனைவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அவளது கணவனோடு அடைந்தாள்” என்று சொல்கிறது. (மகாபாரதம் ஆதிபர்வம் 1:126)

சதி குறித்து காஞ்சி பெரியவரின் கருத்து

பார்ப்பனர்களால் காஞ்சி மகா பெரியவர் என்று கொண்டாடப்படும் துறவி தனது ’தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

”கொடூரமாக ஸ்திரீகளை சிதையிலே தள்ளிக் கொளுத்தினார்கள் என்று வைகிறார்கள். எங்கேயாவது யாராவது இம்மாதிரி கொடூரமும் பண்ணியிருக்கலாமோ என்னவோ? ஆனால் இது பொதுவிதி இல்லை. இஷ்டப்பட்டவர்கள் மட்டுந்தான் – பரம பதிவிரதைகளாக இருந்தவர்கள்தான் – புருஷன் போனபின் ஜீவனை வைத்துக் கொண்டு இருக்க முடியாமல் துடித்துத் தாங்களாகப் பிரியப்பட்டு உடன்கட்டை ஏறியிருக்கிறார்கள்”.

இந்தவரியில் ‘கணவனை இழந்த பிறகு பரம பதிவிரமைகளாக இருந்தவர்கள் மட்டும்’ என்ற பதத்தை பயன்டுத்துகிறார். அதாவது கணவன் இறந்தபின் வாழும் பெண்கள் பதிவிரதைகள் இல்லை என்பதை மறைமுகமாக சொல்கிறார்.

”பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது’ என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் எப்போதாவது வருஷத்துக்கு ஒருதரமாவது ஊரில் இப்படி ஒரு ஸ்த்ரீ உடன்கட்டை ஏறினாள்; சட்டம் இடம் தராத போதிலும், பந்துக்கள் தடுத்த போதிலும் கேட்காமல் இப்படிப் பண்ணினாள் என்று பேப்பரில் பார்க்கிறோம். பழைய காலத்து உடன்கட்டைகளை விட இதுதான் ரொம்ப விசேஷம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு”.

கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறுவது உயர்ந்த உணர்ச்சி என்று அன்றைய காலகட்டத்தில் அதை கடைபிடிப்பது ரொம்ப விசேஷம் அதாவது போற்றுதலுக்கு உரியது என்று குறிப்பிடுகிறார்.

”இன்னும் உயர்ந்த கற்பரசியானால் பதியின் உயிர் போனவுடனேயே இவர்களது பிராணனும் தானாகப் போய்விடும்”. 

கணவன் இறந்தவுடன் ஒரு பெண் இறக்கவில்லை என்றால் அவள் கற்புடையவள் அல்ல என்பதைக் குறிப்பிடுகிறார். இதுபோன்று வைதீக பார்பனர்கள் ‘சதி’யை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்தும் பாதுகாத்தும் வந்தனர்.

சங்க இலக்கியத்தில் உடன்கட்டை ஏற்றுதல்

 “பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்க’எனச் சொல்லாது, ஒழிக’என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்,
வெள்ளெட் சாந்தொடு,புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை,வல்சி ஆக
பரற்பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரி தாகுகதில்ல;எமக்கு எம்

பெருந்தோட் கணவன் மாய்ந்தென,அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஒரற்றே!
திணை-பொதுவியல் துறை-ஆனந்தப்பையுள்”
புறநானூறு 246

நெய் மற்றும் எண்ணெய் கலப்பில்லாத நீர்சோற்றை உண்ண வேண்டும், எள்துவையல், புளியிட்ட வேளைக்கீரை மட்டுமே துணைக்கு சேர்த்துக்கொள்ளப்பெறுதல் வேண்டும். சுகமாகத் தூங்கும் படியாக பாயில் படுக்கக் கூடாது. கற்கள் நிறைந்த தரையில் படுக்க வேண்டும். இத்தகு கொடுமையினும் உடன்கட்டை ஏறுவது தடாகத்தில் குளிப்பது போன்றது. ஆதலால் என்னைத் தடுக்காதீர்கள் சான்றோர்களே. 

தொல்காப்பியத்தில்

”நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇ(புறத்திணையியல் ,நூற்பா-19)” என்றவரி மற்றும் புறப்பொருள் வெண்பாமாலையில் (காஞ்சிப்படலம்-23) கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறுவதைக் குறிக்கிறது. 

மணிமேகலையின் ஆதிரை உடன்கட்டை ஏறும் முயற்சி, கம்ப ராமாயணத்தில் உடன்கட்டை ஏறியதாக தசரதனின் அறுபதினாயிரம் மனைவியர் குறித்து குறிப்பிடப்படுகின்றன. (அயோத்தியாகாண்டம்,பாடல்-2325,2327).

புறநானூறு பாடல் 373-ல் கிள்ளிவளவன் மீது கோவூர் கிழார் 

மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, நெடுஞ்சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து, மெந்தோள் மகளிர் மன்றம் பேணார் புண்ணுவ…………………………………………….. …………………………………………….. அணியப் புரவி வாழ்க என, சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர 

(வரிகள் 10-15) தம் கணவர் திரும்பி வாராமையால் மகளிர் மன்றத்தில் எரியை மூட்டித் தீயில் பாய்ந்து உயிர்விடுதலை உடனே செய்து என்று குறிப்பிடப்படுகிறது. 

கல்வெட்டு ஆதாரங்கள்

வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. கொடும்பாளூர்ச் சிற்றரசன் வீரச் சோழ இளங்கோவேள் மனைவி கங்காதேவி உடன்கட்டை ஏறும்முன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. 

இந்த கொடியமுறை இன்று நடைமுறையில் இல்லை என்றாலும் பெண்களின் உடல்மேல் நிகழ்த்தப்படும் வண்முறை அடங்கவில்லை. கடந்த நூறு ஆண்டுகளில் முதலாளிய உற்பத்திமுறை உச்சம் பெற்ற இந்த காலகட்டத்தில் பெண் உடல் நுகர்வுப் பண்டமாகப் பார்க்கப்படுகிற போக்கு இன்னும் மாறவில்லை. இது ஒருவகையில் மரபு வழியாக பெண் உடல்மேல் நடந்துவரும் வன்முறையின் முடிவில்லா தொடாச்சி. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண் புலிகள் போன்று பல்வேறு பெண்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் தனது உடலை போராட்டத்தின் புரட்சியின் குறியீடாக மாற்றிவருகின்றனர். அது தொடர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *