சமூகப் பணிகள் (Social Work) தொடர்பான பயிற்சி மற்றும் கல்வி குறித்த தரத்தை நிர்ணயிப்பதற்கான தேசிய சமூகப் பணிகள் குழு (கல்வி மற்றும் பயிற்சி) [National Council of Social Work(education and practice)] என்கிற வரைவு சுற்றறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.
சமூகப் பணியாளர்களை பதிவு செய்ய கவுன்சில்
இந்த வரைவு அறிக்கை சமூகப் பணிகள் குறித்து முடிவு எடுப்பதற்கு ஒரு கவுன்சிலை உருவாக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கவுன்சில் சமூகப் பணி கல்விக்கான குறைந்தபட்ச தரநிலைகளை உருவாக்குவதோடு, தொழில்முறை சமூக சேவை செய்பவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைக் கொண்டுவர உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவு செய்ததை புதுப்பிக்க வேண்டும் எனும் நடைமுறையையும் கொண்டுவர உள்ளதாகத் தெரிகிறது.
அதுமட்டுமன்றி இந்த கவுன்சில் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை மீறுபவர்களின் மீது தேவையான நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், அவர்களை பதிவுப் பட்டியலில் இருந்து நீக்கும் அதிகாரமும் இந்த கவுன்சிலுக்கு இருக்கும் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ள கல்வியாளர் டாக்டர் ஜான்வி அந்தாரியா, “பலவிதமான சமூக சேவையாளர்கள் சமூகப் பணிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக களத்தில் வேலை செய்பவர்களிடமிருந்து இது குறித்தான ஆலோசனைகளை கேட்டுப் பெற வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் கூட ஏராளமானோர் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு, சமூகப் பிரச்சினைகளை சரிசெய்ய சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை இந்த மசோதா சமூக சேவையாளர்கள் என்று அழைக்குமா அல்லது அவர்களை வெளியேற்றுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதன்முதலில் 1980-ம் ஆண்டு சமூக சேவைப் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஆய்வுக் குழுவின் சந்திப்பில் யு.ஜி.சி- இந்த திட்டத்தை முன்வைத்தது. பின்னர் சமூக நல அமைச்சகம் ஒரு வரைவு மசோதாவைத் தயாரித்தது. அது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. பின் 1995-ம் ஆண்டு அந்த வரைவு இறுதி செய்யப்பட்டது.
சமூகப் பணிக்கான தகுதி
அந்த வரைவு மசோதாவின் படி, தொழில்முறை சமூகப் பணிகளுக்கான தகுதி என்பது ஒருவர் குறைந்தபட்சம் சமூகப் பணி கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணையில் வெளிவர முடியாத வழக்குகள் பதிய முடியும்
இந்த வரைவு ‘அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட தகுதிகள்’ இல்லையென்றால் தொழில்முறை சமூக சேவையாளர்களாக பணியாற்றுவோரை குற்றவாளியாக்கும் சரத்தினை கொண்டுவருகிறது. குழுவின் விதிகளை மீறும் சமூக செய்யற்பாடாளர்கள் மீது பிணை வழங்க முடியாத வழக்கு கூட பதிவு செய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
”2000-ம் ஆண்டு வரை, சமூகப் பணிகள் குறித்தான கல்வி 60 கல்லூரிகளில் மட்டுமே பயிற்றுவிக்கபட்டு வந்தது. ஆனால் தற்போது 526 கல்லூரிகள் அதை வழங்குகின்றன. இந்த வரைவு மசோதா புதிய கல்விக் கொள்கையுடன் ஒத்துப்போகிறது.” என்று இந்தியாவின் தொழில்முறை சமூகத் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் டெல்லி சமூகப் பணி பள்ளியின் பேராசிரியர் சஞ்சய் பட் கூறினார்.
சமூகப் பணிகளை இந்துத்துவ மயமாக்கும் பாரதிய சிக்ஷானா மண்டல்
புதிய கல்வி கொள்கையின் படி, அனைத்து விதமான தொழில்முறை பாடங்களுக்கும் அதை நிர்வகிக்கும் விதமாக ஒரு அதிகாரம் படைத்த அமைப்போ குழுவோ இருக்க வேண்டும் என கூறுகிறது.
அரசாங்கம் இந்த மசோதாவை தவறாகக் கையாண்டு விடும் கவலை இருப்பதாக சஞ்சய் பட் தெரிவித்துள்ளார். “நாக்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் பாரதிய ஷிக்ஷானா மண்டல் போன்ற குழுக்கள் சமூகப் பணிகளை இந்து மயமாக்கி வருகின்றன. நான் அதைத் தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறேன். ஒரே சித்தாந்தத்தை பகிர்ந்து கொள்ளும் உறுப்பினர்களை மட்டுமே நியமிக்க அரசாங்கம் வலியுறுத்தினால், அந்த கவுன்சில் தவறாகப் பயன்படுத்தப்படலாம். இதை தடுக்கும் சரத்துக்கள் விரைவில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Social Work கல்வி இல்லாமல் சமூகப் பணியாற்றுவோர்
தன்னார்வ தொண்டாளர்கள் பல்வேறு சமூகங்களில் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். அவர்களின் பங்களிப்பினைப் பற்றி இந்த மசோதா குறிப்பிடவில்லை. Social Work படிப்பு படித்தவர்கள் மட்டுமல்ல, சமூக அளவில் இந்த படிப்பு மற்றும் பயிற்சி இல்லாமலே சமூக சேவை ஆற்றுபவர்கள் ஏராளம் இருக்கின்றனர். Social Work படிப்பு சாராத பிற படிப்புகளான வழக்கறிஞர், பொறியியலாளர்கள் பல தொழில்முறை படிப்புகளை முடித்தவர்களும் பல்வேறு பங்களிப்புகளை செய்துவருகிறார்கள். சமூகப் பணியாளர்கள் என்ற வரையறையில் இவர்களின் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படுவதே சரியானதாக இருக்கும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.