பிரபாகரனின் சமாதான பிராந்தியம்

பிரபாகரன்- தென்-கிழக்காசிய கடற்பிராந்திய நோக்கில்:

இந்தோ- பசுபிக் கடற்பிராந்தியத்தின் மேலாதிக்கத்திற்காக சீனா- அமெரிக்காவினுடைய பனிப் போர் உச்ச நிலையை எட்டியிருக்கும் இவ்வேளையில், தங்களது புவிசார் அரசியல் நலன் சார்ந்து வல்லரசு நாடுகள் ஏற்படுத்திய நெருக்கடிக்களுக்கு மத்தியில் பிரபாகரன் நடத்திய விடுதலைப் போர் அவர் பிறந்த நாளில் நினைவுகூரத்தக்கதாக உள்ளது. தமிழீழத்தின் புவிசார் அரசியல் அமைவிட முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது விடுதலைப் போராட்டத்தை எதற்கானதாக உருவாக்க நினைத்தார் என்பதனையும், அவரின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று இல்லாத நிலையில் தென்- கிழக்கு ஆசிய கடற்பிராந்தியம் எத்தகைய புவிசார் அரசியல் சிக்கல்களை எதிர்கொள்கிறது என்பதையும் பார்ப்போம்.

 ஆசியாவின் மிகச்சிறிய தீவுகளில் ஒன்றான இலங்கைத் தீவு கிழக்குலகத்தையும், மேற்குலகத்தையும் இணைக்கக்கூடிய கடற்வழியில் அமைந்துள்ளது. மிகக் குறிப்பாக இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பகுதியிலுள்ள திரிகோணமலை துறைமுகம், இக்கடற் வழிப்பாதையில் நீண்ட நெடுங்காலமாக பயன்பாட்டிலுள்ள இயற்கையிலேயே அமைந்த துறைமுகமாகும். கடல் கடந்த வணிகத்தில் துவங்கிய காலனியாதிக்கம் திரிகோணமலையையையும், இலங்கைத் தீவையும் தனது ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவில் தனது கடற் மேலாதிக்க நலனை உத்திரவாதப்படுத்திக் கொள்ளும் வகையில், இலங்கைத் தீவினை சிங்கள ஆட்சியாளர்களிடம் விட்டுச் சென்றது காலனியம்.

திரிகோணமலையை கைப்பற்ற அமெரிக்காவின் கபட நோக்கம் 

காலனிய விடுதலைப் பெற்ற இலங்கைத் தீவில் சிங்கள- பெளத்த பேரினவாத மேலாதிக்கமே தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான நேரடி காரணமென்றாலும், இலங்கைத் தீவினுடைய இனப் பிரச்சனையின் அடிப்படையாக பிரிட்டனின் புவிசார் அரசியல் இருந்தது. காலனியத்தால் தொடங்கப்பட்டு, காலனியத்திற்கு பிறகு வளர்த்தெடுக்கப்பட்ட இலங்கைத் தீவின் இனப் பிரச்சனை, அமெரிக்க- ரஷ்ய பனிப் போர் காலத்தில் ஒடுக்குகின்ற பேரினவாதத்திடமிருந்து, ஒடுக்கப்படும் தேசிய இனம் விடுதலை கோரும் விடுதலைப் போராட்டக் கட்டத்தை எட்டியது. பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுத விடுதலைப் போராட்டத்தை தொடங்கிய பிரபாகரன் இது குறித்த தெளிவுடனே இருந்தார்.

அமெரிக்க ராணுவத்துடன் சிங்கள ராணுவம்

இலங்கைக்கான அமெரிக்காவின் ஆயுத உதவி குறித்த ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த பிரபாகரன்,” (அமெரிக்காவின் உதவியோடு இலங்கை அரசு மேற்கொள்ளும்) இந்த ஆயுத குவிப்பு தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. சிறீலங்க ராணுவத்திற்கு உதவி செய்து தமிழீழ விடுதலை போராட்டத்தை நசுக்குவது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல என்பது, உங்களுக்குத் தெரிந்ததே. திரிகோணமலையில் கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்வது அமெரிக்காவின் கபட நோக்கம். இது இந்த சமுத்திரப் பகுதியை யுத்தப் பிராந்தியமாக மாற்றுவதுடன், இப்பிரதேசத்தில் யுத்த நெருக்கடியை உண்டு பன்னும்” என்று கூறினார்.

தமிழீழ நாடு எவ்வாறு அமையப் பெறும்

தொடர்ந்து பிரபாகரனின் தலைமையிலான ஆயுதப் போராட்டத்தின் மூலம் அமைக்கப் பெறும் தமிழீழ நாடு எவ்வாறு அமையப் பெறும் என்ற கேள்விக்கு,”தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை, நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கும் உத்திரவாதமுண்டு. எல்லாவிதமான ஒடுக்குமுறையும், சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை பேணி வளர்த்து, தமது கலாச்சாரத்தை மேம்பாடு செய்யும் வகையில், அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கிற சுதந்திரச் சமூகமாகத் தமிழீழம் அமையும். இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன், அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கும். அத்தோடு இந்தியாவோடு நேச உறவுக் கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை, குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதன பிராந்தியமாக்கும் வெளிநாட்டு கொள்கையை கெளரவிக்கும்.” என்று பதிலளித்தார்.

இந்திய துணைக்கண்ட மற்றும் இலங்கைத் தீவின் கீழுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியை போர்களற்ற, போர் நடவடிக்கைகளற்ற ”சமதானப் பிராந்தியமாக” வளர்தெடுக்கும் நோக்கம் பிரபாகரனிடமிருந்தது. இதுப்பற்றி கூறும் சிங்கள செயற்பாட்டாளர் விராஜ் மெண்டிஸ்,” புலிகளின் பிரச்சார ஏடுகளில் தமிழர்கள் திரிகோணமலை துறைமுகப் பகுதியை சமாதன பிராந்தியமாக பாதுகாக்கும் நோக்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். அவர்கள் (புலிகள்), எதிர்கால போர்ச் சூழலில் திரிகோணமலை துறைமுகத்தை படைத்தளமாகக் கொண்டு மத்திய கிழக்காசிய நாடுகள் மீதோ, இந்தியா மீதோ அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

திரிகோணமலை-மிரட்டிய அமெரிக்கா,மீறிய புலிகள்  

திரிகோணமலையில் தமது மேலாதிக்கத்தை அனுமதிக்காத புலிகளை அழிப்பதில் அமெரிக்க பல்வேறு முயற்சிகளை செய்தது. அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்குமான பனிப்போர் சூழல் மறைந்து, உலகில் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய காலக்கட்டத்தில், தமிழீழ விடுதலை போராட்டத்தை அழிக்க இலங்கை அரசிற்கு பல்வேறு உதவிகளை செய்தது. அமெரிக்க உதவியுடனான இலங்கையின் ராணுவ வலிமையையும் புலிகள் எதிர்கொண்டு வீழ்த்தினர். புலிகளின் யானையிறவு போர் வெற்றியும், கட்டுநாயக விமானத் தள தாக்குதலும் புலிகளை வீழ்த்துவதற்கான   மாற்று வழிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவையை அமெரிக்காவிற்கு உருவாக்கியது. 

அமெரிக்காவின் ஆயுத முகம் இஸ்ரேல், அமைதி முகம் நார்வே

புதிய தாராளமய-உலகமய ஒழுங்கில் புலிகளுக்கு எதிரான எதிர் நடவடிக்கைகளை நடத்திக் கொண்டே, ராணுவ சம பலத்திலிருந்த புலிகளையும், இலங்கை அரசையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது அமெரிக்கா. நார்வேயின் தலையீட்டின் பேரில் புலிகளின் நடைமுறை தமிழீழ அரசிற்கும், இலங்கை அரசிற்கும் அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கியது. அமெரிக்காவின் இப்போக்கு பற்றி கருத்து கூறிய பிரபாகரன்,” அமெரிக்காவின் ஆயுத முகம் இஸ்ரேல், அமைதி முகம் நார்வே” என்றார்.

அமைதி பேச்சுவார்த்தையில் தமிழ் செல்வன்,பிரபாகரன்,பாலசிங்கம்

அமைதி காலத்தில் பேச்சுவார்த்தையின் ஒரு தரப்பான இலங்கையை அரசியல், ராணுவ ரீதியாக வலிமைப்படுத்தி, மற்றொரு தரப்பான புலிகளுக்கு பல்வேறு விதமான அரசியல், ராணுவ நெருக்கடிகளை அமெரிக்க கொடுத்தது. அமெரிக்காவின் தலைமையிலான உலகமய அரசியல் ஒழுங்கின் காரணமாக எதிரெதிர் நாடுகள் அணிசேர்ந்து பிரபாகரனின் தலைமையிலான ஆயுத போராட்டத்தை முற்றாக அழித்தார்கள். விடுதலைப் போராளிகளோடு, விடுதலை கோரும் மக்களையும் சேர்த்து அழிக்கும் புதிய விடுதலை- எதிர் நடவடிக்கையை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கின. 21ம் நூற்றாண்டின் மனிதப் பேரவலமாக ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலை அமைந்தது.

அமெரிக்காவின் படைத்தளமாக மாறியிருக்கும் இந்தியா

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத இலங்கைத் தீவு மற்றும் தென்- கிழக்காசிய கடற்பிராந்தியம் இன்றைய புவிசார் அரசியலின் மையமாக மாறியுள்ளது. 20, 21ம் நூற்றாண்டில் மிகப் பெரும் வல்லரசாக பரிணமித்துள்ள சீனா, இந்நிலையை இக்குறிப்பிட்ட பிராந்தியத்தில் உருவாக்கியுள்ளது. இச்சூழலில் பிராபகரன் முன்மொழிந்த சமாதன பிராந்திய முழக்கமும், இந்தியாவின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ளன.

இலங்கையில் வணிக மற்றும் ராணுவ ரீதியாக சீனா கால்பதித்து வருகிறது. 2013ம் ஆண்டு, சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தை இலங்கையில் பல்வேறு திட்டங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அம்பந்தோட்டா துறைமுகம், கொழும்பு சர்வதேச சரக்குப் பெட்டக முனையம், கொழும்பு துறைமுக நகரம் ஆகிய சீனாவின் இலங்கைக்கான திட்டங்கள் வணிக  மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை.

சீனா- அமெரிக்காவிற்கான பனிப்போரின், மையமாக தென்- கிழக்காசியா

இலங்கை மட்டுமல்லாது பாகிஸ்தான், ஆப்ரிக்கா, ஐரோப்பிய,  அரேபிய நாடுகளில் ஒரே மண்டலம், ஒரே பாதை திட்டத்தை சீனா விரிவுப்படுத்தி வருகிறது. மேற்கூறிய சீனாவின் திட்டங்கள் மட்டுமன்றி, வணிக ரீதியான அபிரிமிதமான வளர்ச்சியினால் சீனாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைபிடிக்கிறது. சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பது, சீன செயலிகளுக்கு தடை விதிப்பதுமான மோதல் போக்குகள் வலுப்பெறுகின்றன. இம்மோதல் போக்கு சீனா- அமெரிக்காவிற்கான பனிப்போர் சூழலை உருவாக்கியுள்ளது. இப்பனிப்போரின், மையமாக தென்- கிழக்காசியாவும், அமெரிக்காவின் பிராந்தியமாக இந்தியாவும் மாறியுள்ளன.

தென் கிழக்கு ஆசியாவில் நடைபெறும் சில புவிசார் அரசியல் நடவடிக்கைகள்

இந்தியாவிற்கெதிரான போர் நடவடிக்கைகளுக்கான படைத்தளமாக திரிகோணமலையை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பிரபாகரன் கூறிய நிலை மாறி, இந்தியா அமெரிக்காவின் படைத்தளமாக மாறியிருக்கிறது.

அமெரிக்காவிற்கும்- இந்தியாவிற்குமிடையேயான தொடர்ச்சியான மூன்று 2+2 கூட்டங்களில் கையெழுத்தான ராணுவ ஒப்பந்தங்கள் இந்தியாவை அமெரிக்காவின் படைத்தளமாக மாற்றியுள்ளன, மேலும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகள் ராணுவ கூட்டணியை அமைத்துள்ளன. ஆசியாவின் நாட்டோ படைகளாக இவை செயல்பட இருக்கின்றன. மறுபுறம் சீனாவோ இந்தியாவை தவிர்த்து கிழக்காசிய நாடுகளை இணைத்து மிகப் பெரும் வணிக ஒப்பந்தத்தை கையெழுத்திட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ், தென் கொரியா, வியட்நாம் , புருனே என அமெரிக்க- சீன புவிசார் அரசியல் பகடையாட்டம் நீள்கிறது. 

பிரபாகரனின் சமாதான பிராந்தியம், போர் பிராந்தியமாக மாறி வருகிறது. பிரபாகரனின் போராட்டத்தை வல்லரசுகள் அழித்திருக்கலாம். ஆனால் பிரபாகரன் பிரகடனப்படுத்திய “சமாதான பிராந்திய அரசியலே” இந்திய துணைக்கண்ட, இலங்கைத் தீவு மற்றும் தென்- கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்கள், மீண்டுமொரு முறை அரசியல் பலியாடுகளாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்தக்கூடியதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *