நாமக்கல் கவிஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக 19.10.1888 அன்று பிறந்தார்.
நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளி கல்வியைப் பயின்றார். 1909-ல் திருச்சியில் உள்ள பிஷப் ஹெபர் கல்லூரியில் பி.ஏ பயின்றார். இவர் ஆரம்ப காலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராகவும் பின்னர் தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர்.
தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராளிகளாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1930-ல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
சிறு வயதில் தெருக்கூத்துகளில் பாடப்படும் பாடல்களைக் கேட்டு கவிபாடும் திறனை வளர்த்து வந்தவர் இராமலிங்கனார். அவர் தொடக்கத்தில் புகழ்பெற்ற நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா நாடகக் குழுவிற்கும், ஔவை சண்முகம் சிறுவர் நாடகக் குழுவிற்கும் ஏராளமான பாடல்களை எழுதி வந்தார்.
மலைக்கள்ளன் என்ற பெயரில் இவர் எழுதிய நாவல் எம்.ஜி.ஆர் நடித்து திரைப்படமாக வந்தது. கவிதை, கதை, சுயசரிதம், நாவல் என்று 13க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
”கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்”
என்று இவரது பாடல் தமிழகத்தில் விடுதலை போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக வளர்த்தெடுக்கப் பயன்பட்டது.
காந்தியத் திட்டங்களான தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு, கதர் அபிவிருத்தி, கைத்தொழில் வளர்ச்சி, தாய்மொழி கற்றல் ஆகியவை பற்றி அவர் எழுதிய பாடல்கள் காங்கிரசின் மேடைகள்தோறும் ஒலித்தது.
தேசிய இயக்கத்தில் இருந்தபோதும் தமிழ், தமிழர் என்ற அடையாளங்களிலும் மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார்.
”தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்”
என்ற பாடலும் ,
”இளந்தமிழா! உன்னைக் காண
இன்பம் பெருகுது!
இதுவரைக்கும் எனக்கிருந்த
துன்பம் குறையுது”
என்ற பாடலும் அதற்கு சில எடுத்துக்காட்டுகளாகும்
1949-ல் முதல் அரசவைக் கவிஞராகவும், 1954-ல் சாகித்திய அகாதமி குழு உறுப்பினராகவும், 1956-ல் சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
நாமக்கல் கவிஞர் 1972-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி மரணமடைந்தார்.