இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிக் கொண்டிருப்பது சர்வதேச அளவில் விவாதமானதால் பல்வேறு நாடுகள் ஏராளமான மருத்துவ உதவிப் பொருட்களையும், ஆக்சிஜன் சிலிண்டர்களையும் அனுப்பி வைத்தன. இந்த மருத்துவ உதவிப் பொருட்கள் மாநிலங்களுக்கு பிரித்தளிக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவை பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவ நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களின் பெயரை பொதுவாகக் குறிப்பிட்டிருந்தாலும், மாநில அரசுகளின் மருத்துவமனைகள் மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் இல்லை.
24 வகையான 40 லட்சம் மருத்துவப் பொருட்கள்
சுவாசத்தில் உதவக் கூடிய BiPAP மெசின்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் (Oxygen Concentrators), ஆக்சிஜன் சிலிண்டர்கள், பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், PSA ஆக்சிஜன் பிளாண்ட்கள், ரெம்டெசிவிர் மற்றும் ஃப்ளாவிபரிவிர் மருந்துகள், PPE கிட்கள், N-95 மாஸ்க்கள் உள்ளிட்ட 24 வகையான 40 லட்சம் உதவிப் பொருட்கள் ஏப்ரல் 25-ம் தேதியே வந்து சேர்ந்தன. ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, துபாய் சிங்கப்பூர் உள்ளிட்ட 40 நாடுகளிலிருந்து உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா வெளிநாட்டு உதவிகளை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவை 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பிரித்தளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவை எந்தெந்த மருத்துவ நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி
- லேடி ஹர்திங்கே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (LMHC)
- சஃப்தார்ஜங் மருத்துவமனை
- ராம் மனோகர் லோகியா மருத்துவமனை
- எய்ம்ஸ் மருத்துவமனை
- DRDO மருத்துவமனை
- மோதி நகர், பூத் காலன் மருத்துவமனைகள்
- தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் கழகம்
- ITBP நொய்டா
வடகிழக்கு பகுதி
- வட கிழக்கு இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனம்
- RIMS, இம்பால்
வடக்கு பகுதி
- எய்ம்ஸ் மருத்துவமனை, பதிண்டா
- PGI, சண்டிகர்
- DRDO, டேராடூன்
- எய்ம்ஸ் மருத்துவமன, ஜஜ்ஜார்
- எய்ம்ஸ் மருத்துவமனை, ரிஷிகேஷ்
மத்தியப் பகுதி
- எய்ம்ஸ் மருத்துவமனை, போபால்
கிழக்குப் பகுதி
- எய்ம்ஸ் மருத்துவமனை, ரேபரேலி
- எய்ம்ஸ் மருத்துவமனை, டியோகர்
- எய்ம்ஸ் மருத்துவமனை, ராய்பூர்
- எய்ம்ஸ் மருத்துவமனை, புவனேஷ்வர்
- எய்ம்ஸ் மருத்துவமனை, பாட்னா
- DRDO, பாட்னா
- எய்ம்ஸ் மருத்துவமனை, கல்யானி
- DRDO, வாரணாசி
- DRDO, லக்னோ
- மாவட்ட மருத்துவமனை, பிலிபிட்
மேற்கு பகுதி
- எய்ம்ஸ் மருத்துவமனை, ஜோத்பூர்
- DRDO, அகமதாபாத்
- அரசு சேட்டிலைட் மருத்துவமனை, ஜெய்பூர்
தெற்கு பகுதி
- எய்ம்ஸ் மருத்துவமனை, மங்களகிரி
- எய்ம்ஸ் மருத்துவமனை, பிபிநகர்
- ஜிப்மர், புதுச்சேரி
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்
- CGHS
- CRPF
- இந்திய இருப்பு உருக்கு ஆணையம் (SAIL)
- ரயில்வே
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR)
SOP உருவாக்க நேர விரயம் செய்த மத்திய அரசு
வெளிநாட்டு உதவிப் பொருட்கள் ஏப்ரல் 25-ம் தேதியே இந்தியாவிற்கு வந்து சேர்ந்துவிட்டன. ஒவ்வொரு நாளும் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் மரணத்திற்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த மருத்துவப் பொருட்களை பெறுவதற்கும், அனுப்புவதற்குமான அதிகாரப்பூர்வ வழிமுறைகளை (SOP) உருவாக்குவதற்கு ஒரு வார காலம் எடுத்துக் கொண்டு நேரவிரயம் செய்திருப்பதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
நாடு முழுதும் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மருத்துவமனைகளுக்கு இந்த உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மத்திய அரசு மருத்துவமனைகளாகவே இருக்கின்றன. கொரோனாவிற்கு எதிரான போரில் மாநில அரசின் மருத்துவக் கட்டமைப்புகளே தொடர்ந்து பெரிய அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்கையில் பெரும்பாலான உதவிப் பொருட்கள் மத்திய அரசின் கட்டமைப்பிற்குக் கீழேயே அனுப்பப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிடப்பட்ட பட்டியலில் தமிழ்நாட்டில் எந்த மத்திய அரசின் மருத்துவமனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான உதவிகள் 86 மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கும் போது, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்சிஜனுக்காக காத்திருக்கும் மக்களுக்கு எவ்வளவு உதவிப் பொருட்களை மத்திய அரசு அனுப்பியிருக்கிறது என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கோரிக்கையாக இருக்கிறது.