மூன்று மாதங்களுக்கு முன் மதுரையில் ஆட்டோ டிரைவர் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறனிடம் ஆட்டோவில் வாருங்கள் என்று கேட்டபோது, என்னிடம் இருபது ரூபாய்தான் இருக்கிறது என்று கூறியதை முகநூலில் பதிந்திருந்தார். இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் அனைவராலும் பரவலாக பகிரப்பட்டது.
அந்த நன்மாறன் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் தனக்கு வீடு ஒதுக்கக் கோரி மனு கொடுத்துள்ளார் என்பது அவரது நேர்மையை மீண்டும் அனைவரையும் ஆச்சரியமாக பார்க்க வைக்கிறது.
யார் இந்த நன்மாறன்?
நன்மாறனின் அப்பா ஒரு ஆலைத் தொழிலாளியாவார். சிறு வயதில் இருந்தே அவரை நூலகங்களுக்கு அழைத்துச் செல்லத் துவங்கினார். நன்மாறன் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும்போது, கீரைத்துறையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேச்சுப் போட்டியில் முதல் முறையாக மேடையேறினார்.
மதுரையில் தொழிலாளர் நல உரிமைக் கழக உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது மாணவர் மன்றச் செயலாளராக இருந்தவர். பின்னர் வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் பி.யூ.சி.படிக்கும் போது கல்லூரி பேரவைத் தலைவராக இருந்தார்.
அதே காலகட்டத்தில் காவல்துறை சார்பில் பாய்ஸ் கிளப் என்று ஒன்று வைத்திருந்தனர். மாநிலம் முழுவதும் உள்ள பாய்ஸ் கிளப் உறுப்பினர்களுக்காக மாநில அளவிலான பேச்சுப்போட்டி வேலூரில் நடைபெற்றது. இதில் அவர் பங்கேற்றுப் பேசி போது முதல் பரிசு கிடைத்தது. இந்த தொடர்புகள் காரணமாக காவல்துறையில் வேலையும் கிடைத்தது.
காவல்துறை வேலையை துறந்த பொது அரசியலில் ஈடுபாடு
ஒரு தொழிலாளியின் மகனாக இருக்கும் நீ இப்படி ஒரு வேலைக்குப் போகிறாராயே? என்று எதிர்ப்பு தெரிவித்தார் அவரது தந்தை. எனவே எண்ணத்தை மாற்றிக்கொண்ட நன்மாறன் தொடர்ந்து பொதுப்பணியில் ஈடுபட்டார். சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் மாநிலச் செயலாளராக இருந்தபோது வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கைது செய்யப்பட்ட அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு நாள், ஏதாவது ஒரு விஷயம் குறித்து பேசுவதாக முடிவெடுத்து சிறைக்குள்ளேயும் இளைஞர்களுக்கு வகுப்பு எடுத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்றத்திற்கு
அதன்பின் ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் தட்டச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, பஞ்சாலை தொழிலாளர் சங்கத்திலும் பணியாற்றினார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தீவிரமாக செயல்பட்டார். 2001-ம் ஆண்டு மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குச் சென்றார். 2006-ம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார். அப்பொழுது அவர் வைத்த கோரிக்கைதான் மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது.
சென்னையில் உள்ளது போல் மதுரையிலும் தொழில்நுட்ப பூங்கா வேண்டும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். தனது பதிலுரையில் முதல்வர் கருணாநிதி, நன்மாறனின் வலியுறுத்தலை சுட்டிக்காட்டி கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அறிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் ஊழியனாக எப்பொழுதும் மக்கள் பணி செய்வேன் என்று சொல்லும் நன்மாறன், இன்றைய அரசியல் அதிசயம் என்று புகழ்ந்து விட்டு கடந்துவிடுகிறோம் நாம்.
நன்மாறன் தேர்வான அதே தேர்தலில் தேர்வான ஓ.பன்னீர்செல்வம்
மதுரையில் இருந்து நன்மாறன் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதே தேர்தலில்தான் தேனியில் இருந்து முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்டார் ஓ.பி.எஸ். 2001-ம் ஆண்டு, அதிமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்கிறது. டி.டி.வி தினகரன் ஆதரவில் முதல்முறையாக சட்டசபைக்கு செல்கிறபோதே அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக இடம்பிடித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
அங்கே அமைச்சர்கள் வரிசையில் கடைசி ஓரத்தில்தான் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படுகிறது. துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டிய நேரம். பன்னீர்செல்வத்தின் முறை வரும்போது, ”எனது துறையின் மானியக் கோரிக்கையை நிறைவேற்றித் தாருங்கள்” என அப்பாவியாக அவர் சொல்ல சொந்தக் கட்சியின் சீனியர்களே சிரிப்பை அடக்கச் சிரமப்படுகிறார்கள். சபை முடிந்த பிறகு, அவரை அழைத்து அவை நடவடிக்கைகளைப் பற்றி விவரித்தனர்.
1980-களின் இறுதியில் பெரியகுளத்தில் ஒரு டீக்கடை வைக்க பணம் இல்லாமல் விஜயன் என்கிற நண்பர் தான் ஜாமீன் கையெழுத்து போட்டு பெரியகுளத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் 20 ஆயிரம் கடன் பெறப்படுகிறது. அதை சரியான நேரத்தில் திருப்பிக் கூட அடைக்க முடியாமல் இருந்தவர் தான் அரசியலில் வந்து பல்லாயிரம் கோடிக்கு அதிபதி ஆகியிருக்கிறார்.
1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதிக்கு டிடிவி தினகரன் போட்டிபோட வந்தபோது அவருக்கு உதவியாக இருந்த ஒரே தகுதிதான், பிற்காலங்களில் பன்னீர்செல்வத்திற்கு எம்.எல்.ஏ, அமைச்சர், முதலமைச்சர், பொருளாளர், அவை முன்னவர் என அனைத்து பதவிகளையும் கொண்டு சேர்த்தது.
பன்னீர்செல்வம் குடும்பத்தினரின் சொத்துகளில் நிகழ்ந்த மாற்றம்
பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகையில் தனது சொத்தாக பன்னீர்செல்வம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தது ஒரு ஏக்கர் விவசாய நிலம், ஒரு டீக்கடை, 25 சவரன் தங்க நகை மற்றும் தன் மனைவி விஜயலட்சுமி பெயரில் உள்ள 7.61 லட்சம் மதிப்புள்ள வீடு.
2016 தேர்தலில் போட்டியிடுகையில் பன்னீர்செல்வம் வெளியிட்ட சொத்துக்களாவன. அசையும் சொத்துகள் 8.6 லட்சம், அசையா சொத்துகள் 33.20 லட்சம், கடன் 25 லட்சம், மனைவியின் சொத்துக்களாக 200 கிராம் தங்கம், அசையும் சொத்துக்கள் 26.32 லட்சம், 27 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 2000 சதுர அடி வீடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
பன்னீர்செல்வத்தின் மகன்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய ஜெயவந்த் எண்டர்பிரைசசில் முதலில் முதலீடு செய்தனர். பழைய பொருட்களை மொத்தமாக வாங்கும் நிறுவனம் இது. அடுத்து திருப்பூரில் நூற்பாலையில் முதலீடு செய்கின்றனர்.
வாணி பேப்ரிக்ஸ் என்ற நிறுவனத்தை பன்னீரின் மகன்கள் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஜெயப்ரதீப் ஆகியோர் சேர்ந்து 12 கோடி முதலீட்டில் தொடங்குகின்றனர். 8 கோடி முதலீட்டில் வாணி டெக்ஸ்டைல்ஸ்.
இதன் பிறகு எக்செலன்ட் மெரைன் லைன் ப்ரைவேட் லிமிட்டெட் (Xllent Marine Line Private Limited). அண்ணா சாலையில் அமைந்துள்ள ரஹேஜா டவர்ஸில், இதன் அலுவலகம் அமைந்துள்ளது. 2016-க்கு முன்பாக, கன்டெய்னர்களை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் லாஜிஸ்டிக்ஸ் தொழில் நடத்தி வைத்த இந்த நிறுவனம், 2016-க்குப் பிறகு, திடீர் வளர்ச்சியை அடைந்துள்ளது.
தற்போது இந்த நிறுவனத்தின் இணையதளம் 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய மிகப் பெரும் நிறுவனம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. பெரியகுளம் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினரின் சொத்து மதிப்பை இப்படி பெரிய பட்டியலே போடமுடியும்.
நன்மாறன், நல்லகண்ணு குறித்த செய்திகள் வருகிறபோது அதிசயம் என்ற புகழ்ந்து பேசும் நாம் ஊழல் அரசியல்வாதிகளின் ஊழல்களை கண்டும் காணாததுமாக கடந்து செல்கிறோம். அரசியல்வாதிகளைப் பார்க்கும் பார்வையில் நமக்கு இருக்கும் இந்த இரட்டைப் பார்வை தான் எந்த மெனெக்கடலும் இல்லாமல் நன்மாறன் அரசியல் அதிசயம் என்று மட்டும் புகழ்ந்து நம்மை கடந்து செல்லச் செய்கிறது.