அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இந்துத்துவா அமைப்புகள் நாடு முழுவதும் நன்கொடை வசூலித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பெங்களூரு நகரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் வீடுவீடாக சென்று நன்கொடை வசூலித்து வருகிறார்கள். அதில் நன்கொடை அளித்தவர்களின் வீடுகளில் தனித்த குறியீட்டை வரைந்து வருகிறார்கள். நன்கொடை கொடுக்காத வீடுகள் தனித்து காட்டப்படுகிறது. இது குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி ”இது ஜெர்மனியில் நாஜிக்கள் செய்ததைப் போன்றது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
குமாரசாமியின் குற்றச்சாட்டு
“ராம் மந்திர் கட்டுமானத்திற்காக நன்கொடை செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்களின் வீடுகளை தனித்தனியாக குறிக்கும் இந்த செயல் ஜெர்மனியில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட ஹிட்லரின் ஆட்சியில் நாஜிக்கள் செய்ததைப் போன்றது, ஜெர்மனியில் நாஜி கட்சி நிறுவப்பட்ட அதே காலகட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் துவங்கப்பட்டது. “நாஜிக்கள் ஏற்றுக்கொண்ட ஒத்த கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ் செயல்படுத்த முயற்சித்தால் என்ன நடக்கும் என்பது கவலை அளிக்கிறது. நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது” என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி கலவரத்தில் இசுலாமிய வீடுகள் அடையாளம் காணப்பட்ட வழிமுறை
டெல்லியில் CAA போராட்டத்தில் நடந்த கலவரத்தில் இஸ்லாமியர்களின் வீடுகளும் கடைகளும் குறிவைத்து தாக்கப்பட்டது. கலவரம் துவங்குவதற்கு முன்பே டெல்லியில் சீலம்பூர், ஜஃப்ராபாத் மற்றும் மஜ்பூர் பகுதிகளில் இந்துக்களின் வீடுகளை பாதுகாப்பதற்கு கலவரக்காரர்கள் அந்த வீடுகளில் காவிக் கொடியை நட்டுவைக்க வலியுறுத்தியுள்ளனர். இது கலவரம் துவங்கியதும் இஸ்லாமியர்களின் வீடுகளை எளிமையாக அடையாளம் கண்டு சூறையாடுவதற்கு பயன்பட்டது.
இதேபோல் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் வலியுறுத்தலின் பேரில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளில் கடைகளில் காவிக் கொடியை ஏற்றி ”இந்து பரிஷத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்து பழக் கடை” என்ற வாசகத்தையும் பொறிக்கச் செய்தது. பின் மாநில அரசின் தலையீட்டால் அவை நீக்கப்பட்டது.
ஜெர்மனியில் நடந்தது என்ன?
இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களை நாஜிக்கள் மிகக் கொடூரமாக வேட்டையாடினார்கள். யூதர்களின் மீதான இனப்படுகொலை துவங்குவதற்கு முன் அவர்களின் வீடுகளையும், வணிகத் தளங்களையும் நாஜிப்படைகள் அடையாளப்படுத்தினர். யூதர்களின் வீடுகளிலும் கடைகளிலும் மஞ்சள் வண்ணத்தில் குறியீடுகள் போடப்பட்டன. இது சாமானிய ஜெர்மனியனிடம் இருந்து யூதர்களைப் பிரித்துக் காட்டியது.
ஏதோ ஒரு வகையில் ”யூதர்கள் நமக்கு கீழானவர்கள் அவர்கள் இந்த மண்ணிற்கு சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் இங்கிருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டியவர்கள்” என்ற போக்கை படிப்படியாக உருவாக்கியது. சாமானிய ஜெர்மானியனின் பலவீனங்கள் யூத வெறுப்பாக மாற்றப்பட்டது. பிந்தைய நாட்களில் அரசுப் படைகள் மக்களை வேட்டையாடுவதற்கு இந்த அடையாளக் குறியீடு ஏதுவான நடைமுறையாகவும் கையாளப்பட்டது.
சிறு சிறு அடையாளங்களின் வழியாகவும், அவற்றை தனக்கு ஏதுவான வெறுப்புக் குறியீடாகவும் பாசிச சக்திகள் காலம்காலமாக பயன்படுத்தி வருகின்றன. இதேபோன்றுதான் இந்துத்துவா அமைப்புகளும் செயல்பட்டு வருகிறது.