திஷா ரவி கிரேட்டா துன்பர்க்

டூல் கிட் என்பது என்ன? விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் தேசவிரோதமானதா?

டூல் கிட் (Tool Kit) என்ற சொல் கடந்த மூன்று நாட்களாக இந்திய ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. டூல் கிட் என்ற சொல்லை மையப்படுத்தி திஷா ரவி என்ற சூழலியல் செயல்பாட்டாளர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டூல் கிட் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு வேலையையோ அல்லது பிரச்சாரத்தையோ மேற்கொள்வதற்கு அது குறித்த தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமே டூல் கிட் எனப்படுகிறது.

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் போது, அதில் பங்கெடுப்பவர்களுக்கு அந்த பிரச்சாரத்தினை எப்படி முன்னோக்கி நகர்த்துவது என்பதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய டூல் கிட் பயன்படுத்தப்படுகிறது.

கிரேட்டா துன்பர்க் பகிர்ந்த டூல்கிட்

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான பிரச்சார வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அப்படி ஒரு டூல் கிட்டைத் தான் பிப்ரவர் 4 அன்று சுவீடனைச் சேர்ந்த புகழ்பெற்ற இளம் சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

கிரேட்டா துன்பர்க் சர்வதேச அளவில் கவனிக்கப்படும் முக்கியமான சூழலியல் செயல்பாட்டாளராக இருப்பதால் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அவர் பகிர்ந்த பிரச்சார டூல் கிட்டானது சர்வதேச அளவில் பலராலும் உற்று நோக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவான தங்கள் கருத்துகளை பகிர்ந்திருந்தனர்.

கிரிக்கெட் பிரபலங்களின் எதிர்ப்பும், மக்களின் எதிர்வினையும்

இந்த சூழலில் தான் டெல்லி காவல்துறையானது கிரேட்டா துன்பர்க் மீது வழக்கு பதிவு செய்தது. உடனே இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கத் தேவையில்லை என்றும், அது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஒரே கருத்தை தெரிவித்தனர். 

விவசாயிகளின் போராட்டத்தினை ஆதரிப்பது எப்படி இறையாண்மைக்கு எதிராக இருக்க முடியும் என்று சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் எழுந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் சச்சின் டெண்டுல்கர் யார் என்று கேட்ட டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவை திட்டியதற்காக, இந்திய நெட்டிசன்கள் பலர் அப்பதிவில் சென்று தற்போது மன்னிப்பு கேட்பதும் நடந்தது. 

கைது பட்டியலில் நிகிதா ஜேக்கப், சாந்தனு முலக்

விவசாயிகளுக்கு ஆதரவாக கிரேட்டா துன்பர்க் பகிர்ந்த அந்த பிரச்சார டூல் கிட்டை உருவாக்கியவர்கள் என்று பட்டியலிட்டு தற்போது டெல்லி காவல்துறை இளம் சூழலியல் செயல்பாட்டாளர்கள் பலரை கைது செய்து வருகிறது. அவர்கள் மீது தேசத்துரோகம் (124-A) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக பெங்களூரைச் சேர்ந்த 22 வயது திஷா ரவி கைது செய்யப்பட்டார். 

தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் விமானப் பொறியாளரும் சூழலியல் செயல்பாட்டாளருமான சாந்தனு முலக் ஆகியோரை காவல்துறை கைது செய்வதற்காக தயாராகி வருகிறது. 

நிகிதா ஜேக்கப் பருவநிலை மாற்றத்தினை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சர்வதேச அளவிலான சூழலியல் செயல்பாட்டாளர்கள் குழுவுடன் தொடர்ந்து வேலை செய்து வருபவர். பருவநிலை மாற்றம் குறித்தான ஐ.நாவின் மாநாட்டின் செயல்திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். கடற்கரை சாலை திட்டங்கள், மும்பையின் ஆரே காடுகளில்ல் மரங்கள் வெட்டப்படுதல் போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார்.

விமானப் பொறியாளரான சாந்தனு முலக் தனது வேலையை விட்டுவிட்டு சூழலியல் குறித்தும், வறட்சி குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு வந்தவர். 

அந்த டூல் கிட்டில் இருந்தது என்ன?

  • #FarmersProtest, #StandWithFarmers என்ற ஹேஷ்டேக்குகளை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி உங்கள் ஆதரவை தெரிவிக்கவும்.
  • #AskIndiaWhy என்ற ஹேஷ்டேக் மூலம் இணையவழி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவும்.
  • இந்தியாவின் பிரதமர் மற்றும் அதிகாரிகளையும், நீங்கள் வாழ்கின்ற நாட்டின் தலைவர்களையும், உலக வங்கி, WTO, IMF, ஐ.நா போன்றவற்றின் அதிகாரிகளையும் tag செய்யலாம்.
  • அருகிலுள்ள இந்திய தூதரகங்கள், அரசு அலுவலகங்கள், ஊடக அலுவலகங்களுக்கு அருகில் கூடி ஆதரவு போராட்டங்களை நடத்தலாம். 
  • உங்கள் அரசின் பிரதிநிதிகளிடம் ஆதரவு கோரலாம், ஆன்லைன் பெட்டிசனில் கையெழுத்திடலாம். 

உள்ளிட்ட விடயங்கள் கிரேட்டா துன்பர்க் பகிர்ந்திருந்த அந்த டூல்கிட்டில் குறிப்பிடப்பட்டிருந்தன. 

இந்த டூல் கிட் குறித்து விசாரணை மேற்கொண்டதாகவும், இந்தியாவின் மீது வெறுப்பை உருவாக்குவதற்காக காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் இந்த டூல் கிட் உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. திஷா ரவி டெலகிராம் செயலியின் வழியாக கிரேட்டாவிற்கு டூல்கிட்டை அனுப்பியதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தேசத்துரோக சட்டம் பதியப்பட்டதற்கு சட்ட நிபுணர்களின் எதிர்ப்பு

திஷா ரவி மீது தேசத்துரோக பதியப்பட்டதற்கு சட்ட நிபுணர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பிரதீப் நந்திரஜாக் கேதார் நாத்திற்கும், பீகார் அரசுக்கும் இடையில் நடந்த வழக்கின் தீர்ப்பை சுட்டிக் காட்டி 124-A போடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு போராட்டமும் வன்முறை வடிவம் எடுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் வன்முறை வடிவெடுக்கும் எல்லா போராட்டங்களும் தேசத்துரோக குற்றமாகுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  

மூத்த வழக்கறிஞரும், அரசியல் சாசன வல்லுனருமான ராகேஷ் திவேதி, பேச்சுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், விவசாயிகளை ஆதரிப்பது தேசத்துரோகமல்ல என்றும் கூறியுள்ளார். 

மத்திய அரசு தனக்கு எதிராக இளைஞர்கள கருத்து தெரிவிப்பதைத் தடுப்பதற்காக அவர்களை மிரட்ட முயல்கிறது. நீங்கள் பேசினால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற செய்தியை இந்த வழக்கின் மூலம் அனுப்பியிருக்கிறது என்று மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் எழுந்த எதிர்ப்பு

திஷா ரவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மேலும் இருவர் கைது செய்யப்பட இருப்பதைக் கண்டித்தும் நாட்டின் பல பகுதிகளில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா ஜனநாயகத்தின் பெயரால் அமைதியாகப் போராடுவதும், மனித உரிமைகளைப் பேசுவதும், சூழலியலைப் பாதுகாப்பதைப் பற்றிப் பேசுவதும் இப்போது குற்றமாக்கப்பட்டு விட்டது என்று பேசியுள்ளார். 

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இக்கைது அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருப்பதாகவும், அரசை விமர்சிப்பவர்களின் குரலை சர்வாதிகார முறையில் அடக்குவது சட்டத்தின் ஆட்சியல்ல என்று பதிவிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோரும் திஷா ரவியின் கைதிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இளைஞர் அமைப்புகள் இணைந்து திஷா ரவி கைதினைக் கண்டித்து ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியுள்ளன. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரன், சென்னை கிளைமெட் ஆக்சன் குரூப்பின் யுவன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பூங்குழலி, அரசியலுக்காக இளைஞர்கள் அமைப்பின் ராதிகா கணேஷ் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களிடம் இக்கைதைக் கண்டித்து பேசினர்.

திஷா ரவியை விடுதலையை செய்யக் கோரி உருவாக்கப்பட்ட ஆன்லைன் பெட்டிசனில் 10,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். 

பாஜக அமைச்சரின் சர்ச்சைக்குரிய ட்வீட்

ஹரியானாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் அனில் விஜ், தேச விரோத சிந்தனைகளை தனது மூளையில் கொண்டிருப்பவர்கள் திஷா ரவியாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்கள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முதலில் அவரது ட்வீட்டை நீக்கிய ட்விட்டர் நிர்வாகம், பின்னர் அந்த ட்வீட்டில் வன்முறை இல்லை என்பதாக அனுமதித்துள்ளது.

முன் ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ள இருவர் 

டெல்லி காவல்துறை தற்போது நிகிதா ஜேக்கப்பையும், சாந்தனு முலக்கையும் கைது செய்ய மகாராஷ்டிராவிற்கு விரைந்துள்ளது. சூழலியல் செயல்பாட்டாளர்கள் இருவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *