பாராளுமன்றம் சட்டங்கள்

2020-ல் இந்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய சட்டங்கள்

1. குடியுரிமை திருத்தச் சட்டம்

ஜனவரி 10, 2020 அன்று பாஜக அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மைக்கு மாற்றாக, முதல் முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை தீர்மானிக்கப்படுவற்கு இச்சட்டம் வழியமைக்கிறது. 

இந்தியாவில் குடியேறும் இந்தியாவின் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மதச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அடிப்படையில் இஸ்லாமியர்களை குடியுரிமை நீக்கம் செய்யும் நோக்கமுடையதாக இருக்கிறது என்று நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன.. 

இந்து, கிறித்தவ, பெளத்த, சமண, சீக்கிய, பார்சி மதத்தினர் உரிய ஆவணங்கள் இல்லையென்றாலும் இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்கள் குடியுரிமை பெறத் தகுதியுடைவர் என இச்சட்டம் வரையறுக்கிறது. ஆனால் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தனது மூதாதையர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதை உரிய ஆவணங்கள் கொண்டு நிறுவ முடியவில்லையெனில் அவர் குடியுரிமை பெறுவதற்கான தகுதியற்றவர்களாகின்றனர். 

இச்சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த முயன்ற குடிமக்கள் பதிவேடு இத்தகைய நோக்கிலேயே உருவாக்கப்பட்டது. 

இந்தியா முழுதும் இச்சட்டத்திற்கு எதிராக தொடங்கி நடைபெற்ற எழுச்சிமிக்க போராட்டங்களின் காரணமாக, இச்சட்ட நடைமுறைகள் அடுத்தக்கட்டத்தை எட்ட முடியாமல் முடங்கியுள்ளன. 

2. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (EIA2020)

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (EIA) 2020 வரைவு-

கடந்த மார்ச் 23-ம் தேதி ஒன்றிய அரசால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 வெளியிடப்பட்டது. 

புதிதாக தொழிற்சாலைகளை, திட்டங்களை தொடங்குவதற்கு, விரிவுப்படுத்துவற்கு முன் அவைகளால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புமில்லை என்ற அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத திட்டமென சமர்பிக்கப்பட்ட அறிக்கையை சரிபார்த்த பின்னரே குறிப்பிட்ட திட்டத்திற்கு அனுமதியளிக்கப்படும். தற்போதைய EIA-2020 திருத்தத்தின்படி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை சமர்பிப்பதற்கான நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. 

ஒரு மாநிலத்தில் தொடங்கப்படும் தொழில் திட்டங்களுக்கு, அதனின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஆய்ந்து அனுமதி கொடுப்பதற்கிருந்த மாநில அரசின்  (உறுப்பு நிறுவனங்களுக்கான) அதிகாரத்தை இவ்வரைவு பறித்திருக்கிறது. 

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, தேசிய வளர்ச்சி நலத் திட்டமாக கருதப்படும் திட்டங்களுக்கு மதிப்பீட்டு அறிக்கை சமர்பிக்கத் தேவையில்லை என இவ்வரைவு கூறுகிறது.

மேலும் நடைமுறையிலிருந்த, சூழலியல் பாதிப்பு திட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க மக்களுக்கு இருந்த குறைந்தபட்ச வாய்ப்பான கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்துவது குறித்த அம்சங்களையும் இவ்வரைவு தளர்த்தியிருக்கிறது. பொதுமக்கள் பங்கேற்று கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை 30 நாட்களிலிருந்து, 20 நாட்களாக குறைத்திருக்கிறது. 

எளிமையாக சொல்ல வேண்டுமானால்,  சூழலியல் சீர்கேடுகள் நிறைந்த திட்டங்களை கார்பரேட்- தனியார் நிறுவனங்கள் தொடங்குவதற்கான, விரிவுப்படுத்துவதற்கான சாதக அம்சங்களை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை -2020 என்ற பெயரில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இத்தகைய EIA-2020 வரைவை ஒன்றிய அரசு மிக ரகசியமாக வெளியிட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கேட்டிருந்தது. பின்னர் அக்காலகெடுவை நீட்டித்தது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 20 லட்சம் பேர் இவ்வரைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்துடன் கருத்து தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. 

3. நீர்வளத்துறை திருத்த விதிகள்-2020

கடந்த ஏப்ரல் 27-ம் தேதியன்று நடைமுறையிலிருந்த நீர்வளத்துறை தொடர்பான விதிகளை ஒன்றிய அரசு மாற்றியமைத்தது. இதன் மூலம் மாநில நதிநீர் ஆணையங்கள் தொடர்பான அதிகாரங்கள் முற்றிலுமாக ஒன்றிய அரசின் ஜல் சக்தி துறையின் கீழ் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. நதிநீர்  ஆணையங்கள் தொடர்பான முடிவுகளை செயல்படுத்த வேண்டிய இந்திய நீர்வளத்துறையின் பழைய விதி நீக்கப்பட்டுள்ளது. 

உருவாக்கப்பட்டிருக்கும் நீர்வளத்துறையின் புதிய விதியோ நதிகள் மீதான மாநில அரசுகளின் உரிமைகளை நீக்கி அதனை ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சேர்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் காவிரிக்கான தமிழ்நாட்டின் 40 ஆண்டுகால போராட்டத்தில் பெற்ற குறைந்தபட்ச உரிமையும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.  

4. மின்சார திருத்தச் சட்ட மசோதா-2020

மின்சார மசோதா-2020, அரசால் மேற்கொள்ளப்படும் மக்களுக்கான மின்சார விநியோகத்தை முற்றிலுமாக தனியாரமயமாக்கும் நோக்க அடிப்படை கொண்டது. இம்மசோதா சட்டமாக நிறைவேறும்பட்சத்தில் பொதுப்பட்டியலிலுள்ள மின்சாரத் துறை தொடர்பாக மாநில அரசிற்குள்ள அதிகாரங்கள் பல ஒன்றிய அரசின் அதிகாரத்தின் கீழாக மாற்றியமைக்கப்படும்.

மாநிலங்களினுடைய மின்சார வாரியங்கள் ஒன்றிய அரசின் நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட இம்மசோதா வழிவகுக்கிறது.

லாப-வணிக நோக்கில் மின்சாரத்திற்கு விலை நிர்ணயிக்க இம்மசோதா வாய்ப்பளிக்கிறது. மாநிலங்களிலுள்ள மின்சார ஆணையங்களை, மானியங்களை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டண நிர்ணயம் செய்யக் கோருகிறது. இதனால் ஒற்றை மின்சார விளக்கு பயன்படுத்தும் ஏழை மக்கள், இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள், நெசவாளர்களுக்கான அரசு மானியங்கள் நீக்கப்படும் ஆபத்திருக்கிறது. இதன் காரணமாகவே மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரும் விவசாயிகள் போராட்டத்தில், மின்சார மசோதா-2020ஐயும் திரும்பப் பெற வலியுறுத்தப்படுகிறது. 

5. மூன்று விவசாய சட்டங்கள்

விவசாயத்தையும், உணவுச் சந்தையையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை, 

விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த சட்டம் (அ) விவசாய ஒப்பந்த சட்டம்

நேரடியாக விவசாயிகள் தனியாருடன்  ஒப்பந்தத்தின் அடிப்படையில் விவசாயம் செய்வதற்கு இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவே இது ஏற்படுத்தப்பட்டதாக அரசால் சொல்லப்பட்டாலும், விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கே இச்சட்டம் பயன்படும். விவசாயிகள் எதனைப் பயிரிட வேண்டும், எவ்வகையான சாகுபடி முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பது போன்ற உணவு- விவசாய உற்பத்தியை தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தங்களின் வாயிலாகக் கட்டுப்படுத்த முடியும். 

மேலும் பலம் பொருந்திய கார்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுடன் எளிய சிறு- குறு விவசாயிகள் ஒப்பந்தம் மேற்கொள்ள நிர்பந்திப்பதன் மூலம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது. 

கரும்பு சாகுபடியில் தற்போது நடைமுறையிலுள்ள ஒப்பந்த முறை, விவசாயிகளுக்கு எவ்வித பயனையும் தருவதில்லை. அத்தகைய முறையையே ஒட்டுமொத்த விவசாயத்திற்கும் விரிவுப்படுத்துவது விவசாயிகளுக்கு பாதிப்பையேற்படுத்தும். 

விவசாய விளைபொருட்கள் வர்த்தக மற்றும் வணிக சட்டம்

விவசாய விளைப் பொருட்கள் விற்பனையில் இடைத் தரகர்களை ஒழிப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இச்சட்டமானது இடைத்தரகர்களாக சொல்லப்படும் உள்ளூர் வியாபாரிகளிடத்தில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களை அமர்த்துவதற்கே பயன்படும். 

சாதகமான விலைக்கு விவசாயிகள் யாரிடம் வேண்டுமானாலும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கென்று இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு முன்னரும் விவசாயிகளுக்கு ‘யாரிடம், எங்கு’ விற்பனை செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஆனால் நடைமுறையில் விவசாயிகளால் தங்களின் நகரங்களுக்கு வெளியே சென்று விற்பனை செய்ய இயலாது. 

 ‘யாரிடம் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும்’ என்று சொல்வதன் மூலம் அரசு கொள்முதல் நிலையங்களை தவிர்த்த, விவசாயப் பொருட்கள் விற்பனையையே இச்சட்டம் ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக அரசு கொள்முதல் நிலையங்கள் உத்திரவாதப்படும், அளவுகோலிடும் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறையில் ஒழிக்கப்படுகிறது. கொள்முதல் நிலையங்களால் உத்திரவாதப்படுத்தப்படு குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை இல்லாமல் போகும் பொழுது, கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் அடித்துப் பிடுங்கத் தொடங்கும். 

அத்தியாவசியப் பொருள் திருத்தச் சட்டம்

இச்சட்டத்தின் மூலம்  தானியம், எண்ணெய், பருப்பு, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களாக பட்டியலிடப்பட்டவைகளை பதுக்க முடியாது; அவைகளை கிடங்குகளில் பதுக்கி வைப்பது சட்ட விரோதமாகும். ஆனால் தற்போது அப்பட்டியலிலிருந்து மேற்கூறிய அடிப்படை உணவுப் பொருட்களை ஒன்றிய அரசு நீக்கியதன் மூலம் இனி அவைகளை தனியார், கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்காக பதுக்கி விற்பனை செய்யலாம். 

6. தொழிலாளர் திருத்தச் சட்டங்கள்

தொழில்துறை உறவுகள் சட்டம் 2020

வேலை நியமனம், தொழிற்சங்கம், வேலை நீக்கம் ஆகியவை தொடர்பாக இச்சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திருத்தச் சட்டம் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்துவதை ஊக்குவிக்கிறது. 

முன்னர் 100 ஊழியர்களைக் கொண்டு இயங்கும் தொழில் நிறுவனங்கள் உரிய முன்னறிவிப்பின்றி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முடியாது. தற்போது இத்திருத்தச் சட்டம் மூலம் அவ்வரம்பு 300 தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 

உரிய முன்னறிவிப்பின்றி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதை இச்சட்டம் ஊக்குவிக்கிறது.

அதுபோல் தங்கள் உரிமைகளுக்காக தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை தொடங்குவதை, இயங்குவதை கடுமையாக்கியுள்ளது. முன்னர் 15% தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான தகுதியைப் பெற்றன. தற்போது இதன் வரம்பு 30% தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சங்கமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 

சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, இழப்பீடு தொடர்பான அம்சங்கள் இச்சட்டத்தில் இடம்பெறுகின்றன. 

பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நெறிமுறைகள் சட்டம் 2020

தொழிலாளர்களினுடைய வேலையின் தன்மைகளை தொழில் நிறுவனங்கள் வரையறுக்க வேண்டியதை இச்சட்டம் தளர்த்தியுள்ளது. இதற்கு முன்பாக தொழிலாளர்களினுடைய வேலையின் தன்மைகளை, 100 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் தொழில் நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும். தற்போது அவ்வரம்பை இச்சட்டம் 300 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனமாக மாற்றியமைத்திருக்கிறது.

இந்தியாவிலுள்ள 10% முறைசார் தொழிலாளர்களையும், தொழிலாளர் உரிமைகள் ஏதுமற்ற முறைசாரா தொழிலாளர்களாக மாற்றவே தொழிலாளர் உரிமை தொடர்பான 29 சட்டங்களை நான்கு சட்டங்களாக குறுக்கியிருக்கிறார்கள். 

மேற்கூறியவற்றில் பெரும்பான்மையானவை மாநில உரிமைகளை பறிப்பைவையாக உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன. இந்தியாவின் கூட்டாட்சியமைப்பை கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக சிதைக்கும் சட்ட, நிர்வாக மாற்றங்களை ஒன்றிய அரசு தீவிரபடுத்திய ஆண்டாக 2020 இருந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *