பிறந்த நாள் சிறப்பு பதிவு
தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மையின் முன்னோடியான ஐயா நம்மாழ்வார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர் ஆவர்.
இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார்.கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார்.
அரசு வேலையில் இருந்து வெளியேறினார்.
தான்அரசு வேலையில் இருந்து வெளியேறியது குறித்து நம்மாழ்வார் குறிப்பிடும்போது
கோவில்பட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பதை கோவில்பட்டியில் முடிவு செய்யவில்லை. கோவையில் முடிவு செய்வார்கள்; அல்லது டெல்லியில் முடிவு செய்வார்கள்; அல்லது அமெரிக்காவில் முடிவு செய்வார்கள். ‘நமது ஆராய்ச்சி சரியில்லை’ என்று நாமே எழுதிவிட்டால், இந்த நிலையத்தை மட்டும் இழுத்து மூடுவார்கள். நாம் எல்லாரும் விரிவாக்கப் பணியாளராக வெயிலில் அலைய நேரிடும்!” என்பதுதான் அதற்கான காரணமாக அங்கிருந்தவர்களால் முன் வைக்கப்படுகிறது.
இந்த வார்த்தைகள்,பண்ணை மேலாளராக இருந்த நம்மாழ்வார்-ஐ மனதளவில் நொறுக்கிப் போடுகிறது. ‘எதற்காக இந்த வேலையைச் செய்கிறோம் என்கிற துளியளவு அக்கறைகூட இல்லாமல், வெயிலில் பயணிப்பதற்கு பயந்து, வாழ்நாள் முழுவதும் பொய்யையே கட்டி அழப்போகின்ற அந்தக் கூட்டத்தில், நாமும் ஒருவனாக இருக்க வேண்டுமா? நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ… அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம்’ என்று மனதுக்குள் மருகுகிறார்! என்று நான் நம்மாழ்வார் பேசுகிறேன் எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலத்தை சீரமைத்த நம்மாழ்வார்
பசுமைப் புரட்சியினால் ஏற்படும் பாதிப்புகள் சூழல் சீர்கேடுகள் எதிரான பரப்புரைகளை மேற் கொண்டார் அதோடு மட்டுமல்லாமல் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை வெகுமக்களிடம் கொண்டு சென்றவர் .வானகம், உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார். சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் உவர் மண் ஏறி பாதிக்கப்பட்டிருந்த போது அதனை இயற்கை வழியில் மீட்டுருவாக்கம் செய்தவர். அதே போல இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தார். 60க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவி பயிற்சி கொடுத்தார்.
தமிழ் நாட்டில் காவேரி டெலிடாவில் மீத்தேன் எடுக்க திட்டம் அறிவிக்கப்பட்டது.அதனை எதிர்த்து எதிர்ப்பு தெரிவித்து பெரும் பரப்புரையும் போராட்டங்களையும் முன்னெடுத்தார். வேம்பின் உரிமையை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து சர்வதேச நீதிமன்றம் மூலம் மீட்டெடுத்த போராளி.
தமிழ் நாடு முழுவதும் நடைபயணம்
“தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்’ என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக நடந்தவர், அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். “பேரிகை’ என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிட்டார்.
இயற்கை வேளாண்மை குறித்தும் தமிழ்நாட்டு சூழலியல் பாதுகாப்பு குறித்தும்,பாரம்பரிய விதைகளை பாதுகாத்து மீட்டெடுப்பு உள்ளிட்டவைகளுக்காக பரப்புரைக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளில் நடை பயணங்கள் மேற்கொண்டார்.
1998 – கன்னியாகுமாரி – சென்னை – சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக 2002 ஆண்டு 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் – அங்கக வேளாண்மைப் பரப்பரை
2003 – பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் – கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பரப்பரை , 2002 – இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார். .
எழுதிய புத்தகங்கள்
தாய் மண் ,உழவுக்கு உண்டு வரலாறு, தாய் மண்ணே வணக்கம், நெல்லைக் காப்போம், வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இனி விதைகளே பேராயுதம், நோயினைக் கொண்டாடுவோம், எந்நாடுடையே இயற்கையே போற்றி, பூமித்தாயே,மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் ,களை எடு ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
இவர் 30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் பிச்சினிக்காடு கிராமத்தில் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று