அன்னை மீனாம்பாள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
பர்மாவின் தலைநகர் ரங்கூனில் 1904-ம் ஆண்டு, டிசம்பர் 26 அன்று வி.ஜி.வாசுதேவப் பிள்ளை, மீனாட்சி தம்பதியின் மகளாகப் பிறந்தார் மீனாம்பாள். இவரது தந்தை பர்மாவில் முக்கியாமான வணிகர் ஆவார்.
மேலும் இவரது தந்தை வாசுதேவன் 1900-ம் ஆண்டு ரங்கூனில் மதுரைப்பிள்ளை உயர்நிலைப் பள்ளியை தொடங்கி நடத்திவந்தார். அவர் நடத்திய பள்ளியிலேயே படித்துத் தேறினார். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகள் கற்றுத் தேர்ந்தார். 1917-ம் ஆண்டு ரங்கூன் கல்லூரியில் நுண்கலை கற்றுத் தேர்ந்தார் மீனாம்பாள்.
சிவராஜ் அவர்களுடனான திருமணம்
1918 ஜூலை 10 அன்று மீனாம்பாளின் திருமணம் சென்னையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான சிவராஜுடன் நடைபெற்றது. தந்தை வாசுதேவனை போலவே கணவர் சிவாரஜும் சமுக அக்கறை கொண்டவராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் வந்தார். 1926-ம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்ட மேலவை உறுப்பினரானார் சிவராஜ். 10 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அன்னை மீனாம்பாள்
சைமன் கமிசனை ஆதரித்து அரசியலுக்கு வந்த மீனாம்பாள். நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பெண் தலைவர்களில் ஒருவராக இருந்தார். முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சென்னையில் மக்களைத் திரட்டும் பொறுப்பை ஏற்று அதை சிறப்பாகவும் செய்தார்.
இந்தி எதிர்ப்பையொட்டி சென்னையில் 13.11.1938-ல் தமிழ்ப் பெண்கள் மாநாடு நடந்தது. இதில் திருவரங்கம் நீலாம்பிகையம்மையார், தருமாம்பாள், ராமமிருதம் அம்மையார், பண்டிதை நாராயணி அம்மையார் மற்றும் இன்னபிறர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டு ஒருங்கிணைப்பில் பெரும்பங்களித்தவர் மீனாம்பாள்தான்.
சென்னை நகரில் பெண்களைத் திரட்டியதில் அவரின் பங்கு முதன்மையாயிருந்தது. மாநாட்டுக் கொடியை அவர்தான் ஏற்றினார். இம்மாநாட்டில் தான் தந்தை பெரியாருக்கு “பெரியார்” எனும் பட்டம் மீனாம்பாள் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் மகாநாட்டிற்கு தலைமை
மீனாம்பாள் 31-1-1937 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஆதிதிராவிடர் மகாநாட்டிற்கும் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.
”ஓர் சமுகமோ, ஓர் நாடோ விடுதலையடைய வேண்டுமானால் கல்வி, ஒற்றுமை, மகளிர் முன்னேற்றம் இம்மூன்றும் மிகவும் அவசியமானவை. இந்தியாவின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. சாதி வேற்றுமைகளால் சமூகத்தில் ஒற்றுமையும் குறைவு. உலக அளவில் ஒப்பிடுகையில் இந்திய மகளிர் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். மகளிரின் பிற்போக்கான நிலை நாட்டையும் பிற்போக்கான நிலையில் வைத்திருக்கிறது.
நம் நாட்டின் ஆண்கள் அடைந்துள்ள கல்விநிலை வளர்ச்சியே பிற்போக்கான நிலையில் காணப்படுகையில் பெண்களின் கல்விநிலை குறித்து என்ன சொல்வது? அரசு மேற்கொண்ட முயற்சியால் பல கல்வி வாய்ப்புகள் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அளிக்கப்பட்டு வருகையில், இதைக் கைநழுவ விடாமல் நம் சமூகத்தார்(ஆதிதிராவிடர்), இம்மாதிரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாம் யாவரும் கல்வியில் தேர்ந்து, சமூகத்தில் உள்ள மற்றவர் நிலைக்கு நாமும் உயர வேண்டும்.
நீதிக்கட்சி தோன்றிய பிறகே தீண்டப்படாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்களாகியவர்களுடைய பிரச்சனைகள் அரசியல் பிரச்சினையாக வரமுடிந்தது. நீதிக்கட்சி சட்டமியற்றி கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நில வசதி, உத்தியோக வசதி, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியன அனைவருக்கும் கிடைக்க வழி வகுத்தது. தெரு, குளம், பொதுசாவடி, பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் அனைவரும் நுழைய வாய்ப்பளித்தது” என்று பேசினார்.
தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாடு
தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் முதல் தலைவராக பதவி வகித்தார். 1944-ல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தினார். அம்மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கர் கலந்துகொண்டார்.
மே 6, 1945-ல் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டிற்கும் அன்னை மீனாம்பாள் தலைமை தாங்கினார்.
அன்னை மீனாம்பாள் வகித்த பதவிகள்
- மாநகராட்சி கவுன்சிலர்
- கௌரவ மாகாண நீதிபதி
- திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்
- சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர்
- தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
- சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்
- சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர்
- போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
- S.P.C.A உறுப்பினர்
- நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்
- தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
- அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்
- சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்
- விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்
- காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்
- மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர்
- சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
- அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்
- லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்
பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற அன்னை மீனாம்பாள் தன் 88-வது வயதில் 1992 நவம்பர் 30 அன்று காலமானார். அன்னையின் நினைவு நாள் இன்று.