மனநலம்

மனநல மருத்துவ சேவைக்கு ஒரு நபருக்கு 20 பைசா மட்டுமே ஒதுக்கும் இந்திய அரசு

15 கோடி குடிமக்களின் மனநலத்திற்காக தலா 20 பைசா மட்டுமே இந்திய அரசு  செலவு செய்வதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

புதியதாக மனநல மருத்துவமனை தொடங்குவது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்து வந்த நீதிபதி என். கிருபாகரன் மற்றும் நீதிபதி பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO), பாராளுமன்ற அறிக்கைகள், லான்செட்(Lancet) மருத்துவ இதழ் மற்றும் பல நிபுணர்கள் அளித்த அறிக்கைகளை இந்த இரு நீதிபதிகளும் குறிப்பிட்டு இந்த தகலவல்களை தெரிவித்துள்ளனர். 2018-2019 ஆண்டில் 15 கோடி மக்களுக்கு தேவைப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களின் மனநல மருத்துவ சேவைக்காக தலா 20 பைசா மட்டுமே இந்திய அரசு மாதந்தோறும் ஒதுக்கியதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்தமாக ரூ.5 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் சுட்டிக்காட்டிய பல முக்கிய தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளவை

  • இந்தியாவில் ஒவ்வொரு ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு மனநல மருத்துவர் மட்டுமே இருக்கிறார்கள்.
  • ஒட்டு மொத்த இந்தியாவின் குழந்தைகள் மனநலத்தை பாதுகாக்க வெறும் 49 குழந்தை மனநல மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
  • 18,000 மனநல மருத்துவர்களுக்கான பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளனர். 
  • இப்பெரும் மக்கள்தொகைக்கு நாட்டில் ஒரே ஒரு மனநல ஆராய்ச்சி மையம்(பெங்களூர்) மட்டுமே உள்ளதாக தெரிவித்தனர். மேலும் 1925-ம் ஆண்டிற்குப் பின் புதிதாக எந்த ஒரு மனநல ஆராய்ச்சி நிறுவனத்தையும் அரசு நிறுவவில்லை என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
  • 2018-ம் ஆண்டில் இந்தியாவின் மனநலத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ52.8 கோடி நிதி, 2019-ம் ஆண்டில் ரூ.40 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதிலும் சுமார் 5 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மனநல மருத்துவர்களின் கருத்து

மனநலத்திற்காக ஒதுக்கப்படும் நிதி என்பது மொத்த சுகாதார பட்ஜெட்டில் வெறும் 0.05% சதவீதம் மட்டுமே. இதுவே வளர்ந்த நாடுகளில் மனநலத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த சுகாதார பட்ஜெட்டின் சராசரி குறைந்தது 5 சதவீதமாகும்.” என்று டாக்டர் முண்டாடா ‘பிசினஸ் லைன்’ செய்தியில் தெரிவித்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 10 பேரில் இருவர் மட்டுமே உண்மையில் மருத்துவ உதவியை நாடுவதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது என மருத்துவர் சின்ஹா ‘பிசினஸ் லைன்’ செய்தியில் தெரிவித்துள்ளார்.

மனநலத்திற்காக முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும், குறிப்பாக மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற பொதுவான மனநல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதின் மூலம் மொத்த வருவாயில் 5% அளவிற்கு உற்பத்தித் திறனை அதிகரிக்கமுடியும் என உலக வங்கி மதிப்பட்டுள்ளதாக, ”டாக்டர் கல்லிவாயலில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தியில் தெரிவித்துள்ளார்.

மனநலத்திற்கான நிதி ஒதுக்கீடு, கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றிய அரசு, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மாநில அரசுகள் போன்ற எல்லா நிறுவனங்களும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வழங்க வேண்டும் என இந்த நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு  மருத்துவ சேவைகளை வழங்க பிரத்யேகமாக திருச்சி மத்திய சிறைச்சாலை அல்லது மதுரை மத்திய சிறைச்சாலையில் ஒரு சிறப்பு உயர்தர மருத்துவ நிறுவனத்தை அமைக்கக் கோரி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள், மனநலம் குறித்தான அரசின் அலட்சியத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *