இந்திய கம்னியுஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பொதுவுடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். தம் வாழ்நாள் முழுமையும், பொதுவுடைமைக் கொள்கைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்ட தா.பாண்டியன் மறைவுகுறித்து குறித்து தமிழக தலைவர்களின் அறிக்கைகள்
பொதுவுடைமை இயக்க சுயமரியாதை வீரர் – கி.வீரமணி
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் பல முக்கிய ஊர்களில் எல்லாம் பங்கேற்று தா.பாண்டியன் ஆற்றிய உரைகள் “சமுதாய விஞ்ஞானி பெரியார்” எனும் நூலாக நாம் வெளியிட்டோம் – பல பதிப்புகளாக வெளிவந்துள்ளன.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவரால் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணையை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட அனைத்து மாநாடுகள் – நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்ற சமூகநீதியாளர் தா.பாண்டியன்!
சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல்கள் கிளர்ந்துள்ள ஒரு காலகட்டத்தில், ஒரு போர்ப் படைத் தளபதியை நாடு இழந்துவிட்டது.
அவர் எந்த இலட்சியத்துக்காக வாழ்ந்தாரோ – அந்த இலட்சியச் சுடரை ஏந்துவோம் – பணி முடிப்போம்!
ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பொதுவுடைமைப் போராளி – ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல் – அரசியல் சாதுரியம் மிக்க சிறந்த பண்பாளர் – தமிழ் மண்ணை அடிமையாக விட மாட்டோம் என சிம்மக்குரல் எழுப்பிய தா.பாணியன் அவர்களின் மறைவு பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பேரிழப்பு!
அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் போர்க்குரலாக ஒலித்தவர். இந்திய ஜனநாயகத்தின் ஏற்றமிகு தீபங்களில் ஒன்றாக ஒளிவீசியவர். நினைத்த கருத்தை எவ்வித தயக்கமும் இன்றி எத்தகைய தலைவர்களிடமும் எடுத்து வைக்கும் அற்புதமான ஆற்றல் படைத்த அவர், மேடைகளிலோ, விவாதங்களிலோ பேசத் தொடங்கி விட்டால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமான கருத்துக்களை இலக்கிய நயத்துடன் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதில் வல்லவர்.
நாடாளுமன்ற விவாதங்களில் பொருள் பொதிந்த வாதங்களை முன்வைத்து அகில இந்தியத் தலைவர்களிடமும் நன் மதிப்பைப் பெற்றவர். அரசியல் சாதுர்யமிக்கவர், எப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் தெளிவும் தைரியமும் படைத்த அவர், தொழிலாளர்களின் தோழனாக, பொதுவுடைமைத் தொண்டர்களின் நண்பனாக, தமிழகத்தின் உறுதி மிக்க தலைவராகத் திகழ்ந்தவர்.
தா.பாண்டியன் தமிழகத்தின் உறுதி மிக்க தலைவராகத் திகழ்ந்தவர். – மதிமுக பொதுசெயளாலர் வைகோ எம்.பி
தன் வாழ்நாள் முழுமையும், பொதுவுடைமைக் கொள்கைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டு வந்த தோழர் தா.பாண்டியன் தம் மூச்சை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதற்கு முன்பு, அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். வழக்கறிஞர் என்ற வகையில், நாடாளுமன்றத்தில் தமது வாதங்களைத் திறம்பட எடுத்துரைத்தார். அரிய கருத்துரைகளை நிகழ்த்தினார்.
என் கையும் காலும்தான் சரியாக இல்லை, ஆனால், என் மண்டை சரியாகத்தான் இருக்கின்றது, பொதுவுடைமைக் கொள்கை வென்றே தீரும், அதற்காக என் மூச்சு இருக்கின்றவரையிலும் முழங்குவேன் என்று அவர் சொன்னபோது, மெய்சிலிர்த்துப் போனேன். அவரது உரை, என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது
சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது! சமத்துவச் செஞ்சுடர் அணைந்தது! – விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம் பி
தோழர் ஜீவா அவர்களின் வழியொற்றி பொதுவுடமை இயக்கக் கருத்துகளை அழகு தமிழில் எளிய மக்களுக்குக் கொண்டு சேர்த்தவர் தோழர் தா.பா ஆவார்.
இரண்டு முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வாதாடியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 15 ஆண்டுகாலம் பொறுப்பு வகித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர். எழுத்தாற்றல் பேச்சாற்றல் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைப் பெற்றவராகத் திகழ்ந்தவர். ஈழத்தமிழர் நலன்களில் இதயபூர்வமான அக்கறைகொண்டு உழைத்தவர்.
90 ஆவது அகவையைத் தொட இருந்த சூழலில் அவரை இயற்கை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு விட்டது. மறைவெய்தும்வரை சிந்தனை திறன் குறையாமல் , தெளிந்த நீரோடை போன்ற தனது பேச்சு வன்மை சற்றும் குறைவு படாமல், தான் என்றும் பொதுவுடமை இயக்கத்தின் ஊழியன் தான் என்பதை உலகுக்கு உணர்த்திய அவர் இன்று நம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டார்.
மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி ஆகிய முழக்கங்களில் உறுதியாக இருந்தார்.- ஜி.ராமகிருஷ்ணன் சிபிஎம் கட்சி
சங்கரய்யாதான் எனது ‘முதல் ஆசிரியர்’ என பலமுறை குறிப்பிட்டுள்ளார். பரந்த வாசிப்பு கொண்டவர். சிறந்த பேச்சாளர். தோழர் ஜீவானந்தத்திற்கு அடுத்தபடியாக சங்க இலக்கிய மேற்கோள்களை மேடைப்பேச்சில் தொடர்ந்து பயன்படுத்தியவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் உட்பட பல பொறுப்புகளில் செயல்பட்டார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி ஆகிய முழக்கங்களில் உறுதியாக இருந்தார். அவரது மறைவு, ஜனநாயக இயக்கத்திற்கு ஏற்பட்ட இழப்பாகும்.
பேசுவது போன்றே, ஈர்க்கும் எழுத்துவன்மை கொண்டவர். இந்திய கம்னியுஸ்ட் கட்சியின் மாநில செயளாலர் முத்தரசன்
பத்து வயதிலேயே தேச விடுதலைப் போராட்டத்தின் ஈர்ப்பால், காவல் நிலையம் மீது கல்லெறிந்து தன் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். 1948ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட அடக்குமுறை காலத்தில் கைது செய்யப்பட்டவர். அதனால் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவரது அண்ணன் தா.செல்லப்பா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அண்ணனிடமே மார்க்ஸீயம் கற்றதோடு, பள்ளி, கல்லூரிகளில் பயின்று முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1953ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். தான் படித்த அழகப்பா கல்லூரியிலேயே ஆங்கில விரிவுரையாளரானார்.
1961ல், பேராசான் ஜீவாவின் முன்முயற்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோற்றுவிக்கப்பட்ட போது, அதன் முதலாவது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அவர் ஒரு சிறந்த தொழிற்சங்கத் தலைவர். ரயில்வே, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களில் செயல்பட்டிருக்கிறார்.
தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். எதிர்க்கருத்து கொண்டோரையும் பேச்சினால் இழுக்கும் சொல்வளமும், நாவன்மையும் கொண்டவர். தமிழ், ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர். இலக்கியம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, அரசியல் ஆகிய துறைகளில் பரந்த வாசிப்புக் கொண்டவர். இடையறாது படிப்பதும், படித்ததை சுவைகுன்றாமல் எளிதில் புரியும் வகையில் எடுத்துரைப்பதும் அவருக்கு இயல்பாக கைவந்தது.
பேசுவது போன்றே, ஈர்க்கும் எழுத்துவன்மை கொண்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஜனசக்தியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர்.
இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் குரூரமான தாக்குதலுக்கு ஆளானபோது பயனுள்ள எதிர்வினை ஆற்றியவர். தமிழகத்தில் பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து காலத்தில் அவர் எடுத்த முயற்சியால், சிங்கள எதிர்ப்பு தமிழர் பாதுகாப்புச் செயல்பாடு மீண்டும் சூடு பிடித்தது.
தமிழகத்தில் பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அறிவியலை முன்னலைப்படுத்துவது, சமூக நீதி ஆகியவற்றுக்காக நேர்கோடாக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. மதவெறி, வகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என அண்மையில் மதுரையில் நடந்த அரசியல் எழுச்சி மாநாட்டில் பேசினார்.
சமரசமின்றி சமூக நீதிக்காகவும், சமூகத்திற்காகவும் போராடியவர் தா.பாண்டியன் – தி வேல்முருகன் தலைவர் தமிழக வாழ்வுரிமை கட்சி
தமிழக அரசியலில் மறுக்க முடியாத, மறக்க முடியாத மாபெரும் தலைவராக விளங்கியவர் அய்யா தா.பாண்டியன். அவர்கள்.
தனது நீண்ட நெடிய வாழ்நாள் பயணத்தில் தமிழக மக்களுக்கு சேவையாற்றுவதிலேயே கழித்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்து சமரசமின்றி சமூக நீதிக்காகவும், சமூகத்திற்காகவும் போராடிய மாபெரும் போராளி அய்யா தா. பாண்டியன்.அவர்கள்.
சிறந்த சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், சிறந்த நாடாளுமன்ற வாதி, எளிய மனிதர் என பன்முகத்தோடு திகழ்ந்த தா. பாண்டியன் அவர்கள் சாமானியர்களின் எளிய தலைவராக விளங்கினார். அதுமட்டுமின்றி எனக்கு ஒரு நல்ல அரசியல் வழிகாட்டியாகவும் விளங்கினார் தா.பா
பன்முக ஆற்றலாளர் தா.பாண்டியன் – டி டி வி தினகரன்
சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், கருத்தாழமிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்த பன்முக ஆற்றலாளர். அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும், செயல்பட்டும் வந்தவர்.
சமூகநீதி தளத்தில் அய்யாவின் இழப்பு பேரிழப்பாகும்- அற்புதம் அம்மா
அய்யா த.பா. அவர்களின் மறைவு பெரும் வேதனைதருகிறது. ராஜிவ்காந்தி அவர்களின் அன்றைய பொதுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளராக உடனிருந்தவர். கடுங்காயமுற்றவர். அரசுதரப்பு சாட்சியாளர். உலகமே கேட்குமாறு ‘அறிவு நிரபராதி’ என ஆணித்தரமாக அவர் கூறியது உள்ளபடியே எங்களுக்கு பெரும் ஆறுதலை தந்தது.
அதோடு நில்லாமல் பல்வேறு ஊர்களில் அறிவு உள்ளிட்டோர் விடுதலைக்கான கூட்டங்களை தலைமை ஏற்று நடத்தினார். ஆட்சியாளர்களுக்கு உண்மையை எடுத்துரைத்தார். சமூகநீதி தளத்தில் அய்யாவின் இழப்பு பேரிழப்பாகும். அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.