தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், பாண்டிசேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (26.02.2021) வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 294 இடங்களுக்கும், தமிழ்நாட்டில் 234 இடங்களுக்கும், கேரளாவில் 140 இடங்களுக்கும், அசாமில் 126 இடங்களுக்கும், புதுச்சேரியில் 30 இடங்களுக்கும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
தமிழகத்தை பொறுத்தளவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி 2 நாட்களுக்குள் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பது பெரும்பான்மையான கட்சிகளின் கோரிக்கையாக இருந்தது. ஏப்ரல் மாதமே தேர்தல் நடத்த வேண்டும் என்பது அதிமுக மற்றும் பாரதிய ஜனாதாவின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும். மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19ம் தேதி. வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநிலங்களிலும், மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கட்சிகளுக்கு போதுமான காலம் கொடுக்கப்படவில்லை
கட்சிகள் தேர்தலுக்கு தாயாராக போதுமான அவகாசம் கொடுக்கப்படவில்லை என்பது இந்த தேதிகளின் அறிவிப்பில் இருந்து தெரிகிறது. மார்ச் 12ம் நாள் துவங்கி மார்ச் 19 க்குள் வேட்பு மனு தாக்கல் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் கட்சிகள் இருகின்றன. இன்னும் கூட்டணிகள் பேச்சுவார்த்தைகள் கூட துவங்காத நிலையில் இருபது நாளுக்குள் கூட்டணி பேசி முடிக்க வேண்டிய கட்டாயத்தையும், அதில் தொகுதிகள் முடிவானதும் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடியையும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் புதிய அறிவிப்புகளுக்காக காத்திருந்ததா தேர்தல் ஆணையம்
குறிப்பாக பல கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்திருக்கும் திமுக கூட்டணிக்கு நெருக்குதலை கொடுக்கும் வண்ணமே குறைந்த நாட்களுக்குள் தேர்தல் நடத்துவதாக கூறப்படுகிறது.
அப்படி குறிப்பிட்ட மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டுமென்றால், முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டிய அவசரமென்றால், தேர்தல் தேதி முன்னரே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பல புதிய அறிவிப்புகளை வெளியிட நேரம் கொடுத்து அதே நேரம் எதிர் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் தேர்தலுக்கு தாயாராவதற்கான நேரம் கொடுக்கப்படாமல் அவசரகதியில் தேர்தல் தேதியை அறிவித்துள்ளனர்.
தேர்தல் நடத்தி இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கட்சிகளின் கோரிக்கைகள் முழுவதுமாக மறுக்கபட்டு மே 2 வரை தேர்தல் முடிவுக்காக காத்திருக்க செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். மறுபுறம் அதிமுக பாஜகவின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் முதல் வாரத்திலேயே வாக்குப்பதிவை வைத்துள்ளது.