விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச இளம் சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் வெளியிட்ட டூல்கிட் இன்று நாடு முழுவதும் விவாதமாக்கப்பட்டிருக்கிறது. 80 நாட்களைக் கடந்து அமைதியாக நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தின் கோரிக்கைகள் இந்த ஒற்றை டூல் கிட்டினைக் காட்டி பின்னுக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சமூக செயல்பாட்டாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்னகர்த்துவதற்காக உருவாக்கும் பிரச்சார ஆவணங்கள் ’டூல் கிட்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிப்பதற்கான வழிமுறைகள் என்ற பெயரில் பொதுவெளியில் பகிரப்பட்ட ஒரு ஆவணம் தான் நாட்டிற்கு எதிரான போராக இன்று பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. 21 வயது இளம் செயல்பாட்டாளர் திஷா ரவி டெல்லி காவல்துறையால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதுடன், நிகிதா ஜேக்கப், சாந்தனு முலக் ஆகிய இருவரும் இந்த வழக்கில் கைது செய்வதற்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவின் மீது தொடுக்கப்பட்ட பொருளாதாரப் போர் என்கிறது டெல்லி காவல்துறையின் FIR
கிரேட்டா துன்பர்க் பகிர்ந்த டூல்கிட்டை உருவாக்கியதில் இந்த மூவர் தான் முக்கியமானவர்கள் என்று டெல்லி காவல்துறை சொல்கிறது. மேலும் Poetic Justice Foundation (PJF) எனும் கனடாவிலிருந்து இயங்கும் அமைப்பு காலிஸ்தான் விடுதலை கோரிக்கையை ஆதரிக்கக் கூடிய அமைப்பு என்றும், அவர்களின் பிரச்சார ஆவணத்தினைத் தான் இந்த டூல்கிட் முன்வைத்திருப்பதாகவும் காவல்துறை சொல்கிறது.
டெல்லி காவல்துறை பதிந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், கிரேட்டா பகிர்ந்த அந்த டூல்கிட் “இந்தியாவிற்கும், இந்திய கம்பெனிகளுக்கும் எதிரான போருக்கான அழைப்பு” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களின் சொத்துகள் குறிவைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை FIR பதிந்திருக்கிறது. இந்திய தூதரகங்களுக்கு வெளியே போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தததாகவும், இந்திய கலாச்சாரத்தின் குறியீடுகளான யோகா, டீ போன்றவை இலக்குக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு இந்த ஆவணம் முக்கிய காரணம் என்று காவல்துறை தொடர்புபடுத்துகிறது. விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகளின் மூலம், இந்த டூல்கிட்டின் உள்ளடக்கமானது இந்தியாவின் இறையாண்மையையும், ஒற்றுமையையும், பாதுகாப்பையும், பொது அமைதியையும் சிதைப்பதற்கான திட்டமிட்ட சதி என்பதற்கான ஆதாரமாக இருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.
அந்த டூல்கிட்டில் தேசத்துரோகமாக எதுவும் இல்லை – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா
ஒரு பக்கம் காவல்துறை திஷா ரவி உள்ளிட்ட மூவரையும் இந்திய அரசுக்கு எதிராக சதி செய்ததாக குறிப்பிடுகிறது. இன்னொரு புறம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சமூக செயல்பாட்டாளர்கள் திஷா ரவியின் கைதைக் கண்டித்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திஷா ரவியை விடுதலை செய்யக் கோரும் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.
இந்த பரபரப்பான சூழலில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா அந்த டூல்கிட்டில் தேசத்துரோகமாக எதுவும் இல்லை, அதிருப்தியை தெரிவிப்பது தேசத்துரோகமாகது என்று தெரிவித்துள்ளார்.
”நான் பொதுவெளியில் கிடைத்த அந்த டூல்கிட்டின் ஆவணங்களைப் படித்தேன். மக்களை தூண்டுவதாகவோ, வன்முறையை தூண்டுவதாகவோ அந்த ஆவணங்களில் எதுவும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார். இதனை என்.டி.டி.வி செய்தியாக வெளியிட்டுள்ளது.
”அந்த ஆவணங்களை நீதிபதிகள் படிக்கக் கூட இல்லை. காவல்துறை அவர்களிடம் என்ன கேட்கிறது என்பதை மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள். இந்த கட்டத்திலேயே ஒரு விரிவான ஆய்வு தேவையில்லை என்பது எனக்கு தெரியும், ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் அறிவைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.” என்று நீதிமன்ற முடிவினை விமர்சித்துள்ளார்.
”தேசத்துரோக வழக்கானது பிரிட்டிஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்டது. பாலகங்காதரத் திலகர், மகாத்மா காந்தி போன்றோரே தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற அனுபவத்தின் அடிப்படையில் நாம் இந்த சட்டத்தினை ரத்து செய்திருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் இதன் விதிமுறைகளை குறைக்கவாவது செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டம் தற்போது தவறாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.
சாந்தனு முலம் மற்றும் நிகிதா ஜேக்கப்பின் முன்ஜாமீன் மனுக்கள் என்ன ஆனது?
இந்த வழக்கில் சாந்தனு முலக் மற்றும் நிகிதா ஜேக்கப் இருவரும் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தனர். அதில் சாந்தனு முலக்கிற்கு ஒளரங்கபாத் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது. மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிகிதா ஜேக்கப்பின் முன்ஜாமீன் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திஷா ரவி வழக்கறிஞருடன் பேச அனுமதி
திஷா ரவியின் வழக்கு செவ்வாய்கிழமை டெல்லி நீதிமன்றத்திற்கு வந்தது. டெல்லி நீதிமன்றம் திஷாவிற்கு FIR காப்பியை வழங்குவதற்கும், தனது குடும்பத்தினருடன் ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் தொலைபேசியில் பேசுவதற்கும், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வழக்கறிஞரை சந்திப்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி பெண்கள் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்
திஷா கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு டெல்லி பெண்கள் ஆணையம் (DCW) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் திஷா ரவி ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர் அவருக்கு தனது வழக்கறிஞரை வைத்துக் கொள்ள அனுமதிக்காதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
அமைதியின்மையை அமைதிப்படுத்த தேசத்துரோக வழக்கை பயன்படுத்தக்கூடாது – டெல்லி நீதிமன்றம்
இந்த சூழ்நிலையில், பேசுபவர்களை அமைதிப்படுத்துவதற்காக தேசத்துரோக வழக்கினை பயன்படுத்த முடியாது என்று விவசாயிகள் போராட்டம் தொடர்பான மற்றொரு வழக்கு ஒன்றில் டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறையை மையப்படுத்தி போலியான வீடியோக்களை பகிர்ந்ததாக இருவர் மீது தேசத்துரோக வழக்கினை டெல்லி காவல்துறை பதிந்திருந்தது. பொது அமைதியைக் குலைப்பதற்கு தூண்டுவதற்கு அழைப்பதற்கான முகாந்திரம் இல்லாமல் தேசத்துரோக வழக்கினை பதிய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.