பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சென்னை பெங்களூருக்கு இடையிலான அதிவேக சாலை அமைக்கப்பதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரபடுத்தியுள்ளது.
சென்னை பெங்களுருக்கு இடையில் 262 கி.மீ-க்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி அரக்கோணம், குடியாத்தம், பலம்னேர் (ஆந்திரா), வி.கோட்டா, மாலூர் வழியாக பெங்களூர் எல்லைப்பகுதியான ஒசக்கோட்டை வரை இந்த விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலைப் பணியில் ஏறத்தாழ 57 பாலங்களும், பாதசாரிகளுகான 50 சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. அதேபோல் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கான மூன்று நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கையகப்படுத்தப்பட்ட நில விவரம்
இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் வேலை 95% முடிந்துவிட்டதாக நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. இந்த அதிவேக சாலை 2024-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ 17,900 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த சாலை பணிக்கு 2650 ஹெக்டேர் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது.
தென் இந்தியாவின் முதல் எக்ஸ்பிரஸ் சாலையாக சென்னை – பெங்களூர் அதிவேக சாலை குறிப்பிடப்படுகிறது. இந்த விரைவு சாலை திட்டம் 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டு டெண்டர் கொடுக்கப்பட உள்ளது. கர்நாடகம், ஆந்திராவில் தலா 3 பகுதிகளாகவும், தமிழகத்தில் 4 பகுதிகளாகவும் பணிகள் நடைபெற உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெட்டப்பட உள்ள மரங்கள்
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூரை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டிற்குள் 98.32 கி.மீ அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17,000 மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும் மற்றும் 5.4 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வனப்பகுதிகளும் நீர்த்தேக்கங்களும்
மேலும் மஹிமண்டலம் வனப்பகுதியில் 2000 பழமையான மரங்கள், 26 நீர் தேக்கங்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வாழும் 13% மக்கள் நிலத்தை மையமாக வைத்த விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். மேலும் 150 வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கேட்பு கூட்டங்கள்
இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 3472 கோடி நிதியில் 66 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் கண்காணிப்பிற்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு மரத்தை வெட்டினால் அதை ஈடு செய்ய 10 மரங்கள் நட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடம் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் வெளிப்படுகிறது.
இந்நிலையில் வரும் மார்ச் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.