கொரோனா இறப்பு விகிதம் இந்தியா

இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் உண்மையிலேயே குறைவாகத்தான் இருக்கிறதா?

இந்தியாவில் கொரோனா நோய் பரவலால் இதுவரை 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டும், 53 ஆயிரம் நபர்கள் இறந்தும் உள்ளனர். அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு எனினும் கொரோனா நோய் பரவலை அரசாங்கம் தங்கள் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதாகவும், உலக நாடுகளைக் காட்டிலும் இங்கே குறைவான இறப்பு விகிதமே பதிவாகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் இறப்பு விகிதம் சராசரியாக இத்தாலியில் 13.5%, இங்கிலாந்தில் 13%, அமெரிக்காவில் 3.1%, சீனாவில் 5.3% என உலக அளவில் சராசரியாக 3.5% சதவீதமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இறப்பு விகிதம் 1.91% என்று காட்டப்பட்டு வந்தது. இந்த குறைந்த சதவீதமானது பல தரப்புகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இச்சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் வந்த ஒரு ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.

NBER ஆய்வு

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான தேசிய பொருளாதார ஆய்வு பணியகம் (NBER- National bureau of Economic research) இந்த ஆய்வை நடத்தியது. கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக பதிவாவதற்கு இரண்டு முக்கியமான காரணங்களை முன்வைக்கிறது.

முதலில் இறப்பவர்களின் எண்ணிக்கையை மொத்தமாக அணுகாமல் வயது வாரியாகப் பிரித்தது. இதில் இளம் வயதினரைக் காட்டிலும், முதியோர்கள் அதிக எண்ணிக்கையில் இறப்பது தெரியவந்தது. இரண்டாவதாக இறப்பு எண்ணிக்கையை கணக்கிடும் வழிமுறை தவறாகக் கையாளப்பட்டு உள்ளதையும் சுட்டிக் காட்டியது. 

இறப்பு சதவீதத்தை கணக்கிடும் வழிமுறை

உதாரணத்திற்கு மார்ச் மாதத்தில் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்வோம். மார்ச் மாதத்தின்போது தினமும் சராசரியாக 2000 நபர்கள் பாதிக்கப்பட்டனர். அவர் பாதிக்கப்பட்டதிலிருந்து 15 முதல் 20 நாட்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் அந்த நபர் இறக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏப்ரல் மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 4000 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அந்த நபரின் இறப்பினை அவர் பாதிப்புக்கு உள்ளான மார்ச் மாதத்தில் பாதிக்கப்பட்ட 2000 பேரின் எண்ணிக்கையோடுதான் ஒப்பிட வேண்டும். ஆனால் அவர் இறந்த மாதமான ஏப்ரல் மாதத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இறப்பு விகிதம் குறைவாகவே வரும். ஏனென்றால் மார்ச் மாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, ஏப்ரல் மாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகம். இப்படிப்பட்ட மாற்று வழிமுறைகளை கையாண்டதன் மூலம்தான் இந்திய அரசு குறைவான இறப்பு எண்ணிக்கையை காட்ட முடிந்தது என்று அந்த ஆய்வு சொல்கிறது..

வயது வாரியாக பிரிக்கப்பட்ட ஆய்வு

கொரோனா தொற்றானது இயல்பாக எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை எளிதாகத் தொற்றிக் கொள்ளும். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற நோய் உள்ளவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் தொற்றிலிருந்து மீண்டு வருவது சிரமமானது. இச்சிக்கலுக்கு உள்ளாபவர்கள் பெரும்பாலும் முதியவர்களே.

இந்திய ஒன்றியத்தில் முதியோர்களின் விகிதம் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. 19 வயதுக்கு குறைவான இளையோரின் மக்கள் தொகை 41% ஆக இருக்கிறது.

ஜூலை 8-ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் கொடுக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்களின் படி,

  1. 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகையானது மொத்த மக்கள் தொகையில் 15% சதவீதமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் இவர்களின் எண்ணிக்கை 9% சதவீதம் மட்டுமே. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் இவர்களது எண்ணிக்கை 53% ஆகும்.
  1. 40-59 வயது நிரம்பியவர்களின் மக்கள் தொகையானது மொத்த மக்கள் தொகையில் 18% சதவீதமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் இவர்களின் எண்ணிக்கை 31% சதவீதம் மட்டுமே. இறந்தவர்களில் இவர்களின் சதவீதம் 38% ஆகும்.
  1. 20-39 வயதுடைய நபர்கள் மக்கள் தொகையில் 32% சதவீதம் ஆவர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இவர்கள் 42 சதவீதம். இறந்தவர்கள் எண்ணிக்கையில் இவர்கள் 8% சதவீதமே.
  1. 0-19 வயது நிரம்பிய சிறார்கள்தான் மொத்த மக்கள் தொகையில் 41% உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இவர்கள் வெறும் 12 சதவீதமே. இறந்தவர்கள் எண்ணிக்கையில் இவர்கள் 2 சதவீதமே.
வயதுபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இவர்களின் எண்ணிக்கைஇறந்தவர்களின் எண்ணிக்கையில் இவர்களின் எண்ணிக்கை
0-1912%1.7%
20-3942%7.9%
40-5931%37.5%
60+15%53%

இவ்வாறு வயதுவரம்பு குறைய குறைய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்வது மட்டுமல்லாமல் இறப்பு எண்ணிக்கை குறைவது அம்பலமாகியுள்ளது. 

முதியோர் – இளையோர் இறப்பு வேறுபாடு

இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 39 வயதுக்கு குறைந்த இளைஞர்களின் எண்ணிக்கையானது 10% சதவீதமே. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 53% சதவீதம் பேர் ஆவர்.

இந்தியாவில் இளையோரின் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், அவர்கள் பாதிப்பிலிருந்து மீள்வதாலும்தான் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதைப் போல் காட்டப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோரின் பாதிக்கப்பட்ட சதவீதத்தையும், அவர்களின் இறப்பு விகிதத்தையும் பார்த்தோமானால் இறப்பு எண்ணிக்கையின் சதவீதமானது அச்சத்தையூட்டக் கூடிய அளவிற்கு உயரும். 

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இந்தியா

கொரோனா பரவத் தொடங்கிய போது, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதையடுத்து, இன்று உலக அளவில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா ஒன்றியம் மூன்றாமிடத்தில் இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்க்கையில் இந்தியாதான் உலகில் முதலிடத்தில் இருக்கிறது. 

இந்நிலையில் தொற்றின் தீவிரம் அதிகரிக்கும் இக்காலத்தில் புள்ளிவிவரங்களை விரிவாக பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படையான ஆய்விற்கு உட்படுத்தாமல், இறப்பு விகிதம் குறைவு என்று மட்டுமே சொல்லிக் கொண்டு பாஜக அரசு தன்னை சாதனையாளராகவே இன்னமும் காட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட வீண் பெருமிதமே இனியும் தொடரும்பட்சத்தில், இனிவரும் காலத்தில் கொரோனா தொற்று உச்சத்திற்கு செல்லும் அபாயமிருப்பதை தடுக்க முடியாது என்பதை பாஜக அரசு உணர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *