தோழர் ஜீவானந்தம்

போற்றப்பட வேண்டிய பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம்

பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு 

பெற்ற தாய்தனை மகம றந்தாலும்
பிள்ளை யைப்பெறு தாய்ம றந்தாலும்
உற்றதேகத்தை உயிர்ம றந்தாலும்
உயிரை மேவிய உடல்ம றந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலைம றந்தாலும்
கண்கள் நின்றுஇமைப் பதுமறந்தாலும்
நற்றவத் தவர்உள் ளிருந்து ஓங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே!”

என்ற வள்ளலாரின் பாடலை,

“பெற்றதாய் தந்தை தோழர்
பிணங்கியே வெறுத்திட் டாலும்
சுற்றமும் சத்ரு வாகித்
துயர்பல விளைத்திட் டாலும்
கற்றவர் நகைத்திட் டாலும்
கவர்மெண்டின் பகையுற் றாலும்
உற்றசீர் சமதர் மத்தால்
உறுபயன் மறக்கிலேனே” 

என்று பாடிய பொது உடைமைப் போராளி ஜீவாவின் பிறந்த நாள் இன்று.

திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பூதபாண்டி எனும் கிராமத்தில்  பட்டம்பிள்ளை-உலகம்மாளுக்கு மகனாக 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ஜூவானந்தம் பிறந்தார். கோட்டாரில் பள்ளியில் படிக்கும்போதே அன்று நாடு முழுவதும் பரவியிருந்த விடுதலைப் போராட்டத்தால் ஜீவா ஈர்க்கப்பட்டார். 

திட்டுவிளை எனும் கிராமத்தில் திரிகூடசுந்தரம் பிள்ளை என்பவரது  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் அந்நியத் துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கூட்டத்துக்குச் சென்றிருந்த ஜீவானந்தம், தான் அணிந்திருந்த அந்நியத் துணிகளை தீயில் வீசிவிட்டு கோவணத்துடன் வீடு திரும்பும் அளவு உறுதியானவராக அப்பொழுதே இருந்தார். அன்று முதல் தன் வாழ்வின் இறுதிவரை கதர் ஆடை கட்டியவர். 

சுசீந்திரம் போராட்டம் உள்ளிட்ட நாஞ்சில் நாட்டில் நடந்த பல சீர்திருத்த இயக்கங்களில் பங்கெடுத்தவர். சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டவர். இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  நாச்சியாபுரத்தில் “உண்மை விளக்கம் நிலையம்” என்ற ஓர் ஆசிரமத்தை நிறுவினார். அதன் வழியாக சுதந்திர இயக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் தன்மைகளை வளர்த்தெடுத்தார்.

’குடியரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘புது உலகம்’ முதலிய பத்திரிகைகளில் ஜீவா கட்டுரைகள் வழியாக தன் கருத்துக்களை பரப்பியவர்.   இவர் குடியரசு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தபோது, பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ”நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்ற கடிதத்தை தமிழில் மொழிப்பெயர்த்ததற்கு சிறை சென்றவர்.

1933-ல் ஜீவா எழுதிய “பெண்ணுரிமை கீதாஞ்சலி” என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.

கம்யூனிஸ்ட் சிந்தனையுடையவர்களை ஆங்கிலேயர்கள் மிக மோசமாக ஒடுக்கியபோது காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சியில் சேர்ந்து வேலை செய்வது என்று கம்யூனிஸ்ட் கட்சினர் முடிவு செய்து இயங்கினர். இதற்கான தமிழ்நாடு கமிட்டிக்கு சீனிவாசராவ் பொறுப்பாளராக இருந்தார். தமிழ்நாட்டில்  இக்கட்சியைக் கட்டமைக்கும் பொறுப்பு ஜீவாவிடம் கொடுக்கப்பட்டது.

1937-ல் 30,000 தொழிலாளர்களுக்கு மேல் போராட்டக் களத்தில் நின்று மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஜீவா தலைமை தாங்கி நடத்தினார். 1937-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி ஜீவா அவர்களை ஆசிரியராகக் கொண்டு ஜனசக்தி இதழ் வெளிவந்தது.

தொடர்ச்சியாக தொழிலாளர்களை அமைப்பாக்கி போராட்டங்களை முன்னெடுத்து தொழிலார்களின் உரிமையை வென்று கொண்டிருந்த ஜீவா முதலாளிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆனார். அதனாலேயே 1939-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கடலூரில் நடந்த காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் ஜீவா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே ஜீவா காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார்.

கிட்டத்தட்ட தன் வாழ்நாளில் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர் ஜீவா. காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.

1952-ம் ஆண்டு சென்னை சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஜீவா அவர்கள் வடவண்ணாரப்பேட்டை தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தமிழக எல்லைப் போராட்டத்தில் ஜீவாவின் பங்கு முக்கியமானது. 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் நாள் எல்லைப் போராட்டத்த்தில் ஈடுபட்டவர்களை பட்டம் தாணுப்பிள்ளை அரசு சுட்டுக் கொலை செய்தபோது, அதனை எதிர்த்து நாஞ்சில் நாட்டில் கூட்டம் நடத்தினார். 

தேவிகுளம்-பீர்மேடு, நெய்யாற்றின் கரை, செங்கோட்டை வனப்பகுதி ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இருக்க வேண்டும் என்ற அரசின் முடிவை எதிர்த்து சென்னையில் பிப்ரவரி 2-ம் தேதி அனைத்து கட்சிப் பேரணி நடைபெற்றது அதில் காங்கிரஸ் அரசு நடத்திய தடியடியில் ஜீவா கடுமையாக தாக்கப்பட்டார் 

மொழிவாரி மாநிலப் பிரிவினை நிகழ்ந்த போது  அதனை ஜீவா வரவேற்றார் 

இன்று புதிய தமிழகம் பிறக்கிறது. தமிழனின் வரலாற்றில் முதல்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நாள், தமிழ் மொழிவழி மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவேண்டும், தமிழே ஆட்சி மொழி என்பது சட்டத்திலும் நடப்பிலும் இடம்பெற வேண்டும், தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும், அந்நிய மூலதனத்தை அனுமதிக்கக் கூடாது, மலைவாழ் மக்களின் நலன்கள் காப்பாற்றப்படவேண்டும் போன்ற சனநாயகத் திட்டங்களை ஜீவா புதிய தமிழகத்திற்கான எதிர்கால திட்டங்களாக முன்வைத்தார். அவர் சொன்ன அந்த புதிய தமிழகத்தின் மீது அவருக்கு ஒரு கனவு இருந்தது. அதனை அவர் கவிதையாக பாடினார். 

வரும் புதிய தமிழகத்தில் சாதியுண்டா?
வருணாசிரமம் பேசும் வம்பருண்டா?
இரு பழிசார் சேரி அக்ரகார முண்டா?
இழந்தோனும் எத்தனுமிங் கிருப்பதுண்டா?
பெரும்பொருளைச் சூறையிடும் கோயிலுண்டா?
பீடைமதக் கூத்தடிக்கும் பித்தருண்டா?
அரும்புமெழில் அறிவியலால் வாழ்வோர் ஆங்கு
அறியாமைப் படுகுழிகள் அணுக மாட்டா 

ஜீவா தமிழ் மொழியின் தொன்மை, பண்டைத் தமிழ் இலக்கியங்களின் செழுமை, தமிழ்ப் பண்பாட்டின் மாட்சி ஆகியவை குறித்துப் பெருமிதம் கொள்கிறார். சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், கம்பராமாயணம் போன்ற பல பழந்தமிழ் நூல்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை அவர் வழங்கியுள்ளார்.  

1959-ல் எழுதிய “மாநில சுயாட்சி” என்ற கட்டுரையில் தோழர் ஜீவா மத்திய மாநில உறவுகளை சனநாயகப் புரட்சியின் பகுதியாக அணுகுகிறார். 

“இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது ஷெடியூலைப் பாருங்கள். அதில் மத்திய அரசின் உரிமைப் பட்டியலில் 97 அம்சங்களும் மாநில அரசின் உரிமைப்பட்டியலில் 46 அம்சங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கும்பொழுது நாம் ஒரு பெரிய கிளர்ச்சி நடத்தித் தீர வேண்டும் என்பது தெரிகிறது” 

என்று அந்த புத்தகத்தில் மொழிவழி இனங்களின் உரிமைகள் குறித்து சிந்தித்த பொதுவுடைமை வாதி ஜீவா.

இளம்வயதில் பக்திப் பாடல்கள் அதிகம் படித்தவர் தன் பொதுவுடமைக் கருத்துக்களை பக்திப் பாடலின் வழி எழுதினார்.  

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்ற சுந்தரரின் திருத்தொண்டத்தொகை மரபில்,

“சொல்லரும் தேசத் தொண்டர் அடியார்க்கும் அடியேன்
சுத்த சமத்துவம் சொல் தோழருக்கும் அடியேன்
வெல்லும் பூரண சுயேச்சை ஜவஹர்லாலுக்கு அடியேன்
விரியுலகப் பெரியார் காந்தி அடியார்க்கும் அடியேன்
தொல்லைமதக் கொடுமை தூர்க்கும் வீரர்க்கு அடியேன்
சுயமரியாதை ராமன் துணைவர்க்கு அடியேன்
நல்ல பொதுவுடைமை லெனின் முதலார்க்கு அடியேன்
நாடொறும் விடுதலை நான்ஒலிக்கும் ஆளே ”

என்ற அவரது பாலுக்கு பிள்ளை அழும் பாடல் இன்றைய காலத்திலும் பொருந்தும். 

”கோணல் மாணல் திட்டங்களால்
கோடி கோடி யாய்க்குவித்தே
வீணா்சிலர் கொழுக்கக் கண்டால் – என் தோழனே
வெஞ்சினம் பொங்கு தடா. 

மாடமாளிகைய வர்க்கு
மன்னர் மகுடம வர்க்கு
வாட வறுமை நமக்கு – என் தோழனே
வந்திடல் வாழ்வெதற்கு. (காலுக்கு)

ஒன்றுபட்டுப் போர்புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா – என் தோழனே
இம்சை முறைக ளெல்லாம்”. 

என்று தொழிலார்களை அணி திரட்டி முடித்திருப்பார்.

ஜீவா குறித்த ஒரு பேட்டியில் அவர் வாழ்வே தமிழகத்தின் அரை நூற்றாண்டு வரலாற்று காவியமாகிவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறினார்.

1963-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி ஜீவா இயற்கை எய்திய போது பாரதிதாசன், 

”தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்கு வரக்கண்டு சிரித்திடுவார் – யாங்காணோம்
துன்பச் சுமைதாங்கி சீவானந்தம் போன்ற
அன்புச் சுமை தாங்கும் ஆள்”

என்று பாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *